Wednesday, October 9, 2013

ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?


எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோயு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, 'நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்? இதோ எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன். நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் அங்குச் சென்று நமக்கெனத் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்' என்றார். (தொடக்கநூல் 42:1-2)

யோசேப்பு எகிப்திற்குச் சென்றுவிட்டார். போத்திபாரின் இல்லத்தில் மேற்பார்வையாளராய் நியமிக்கப்படுகிறார். போத்திபாரின் மனைவி அவரைத் தன்னோடு உறவு கொள்ள அழைக்கின்றார். தன் மேலாடையை விட்டுவிட்டுத் தப்பி ஓடுகின்றார் யோசேப்பு. விட்டுச்சென்ற மேலாடையை வைத்து அவர்மேல் குற்றப்பழி சுமத்துகின்றார் அப்பெண். சிறையில் அடைக்கப்படுகின்றார். தன்னோடு சிறையிலிருந்த பாரவோனின் அப்பம் சுடுபவனுக்கும், கிண்ணம் ஏந்துபவனுக்குமான கனவுகளுக்கு அர்த்தம் சொல்கின்றார். பின் பாரவோன் காணும் இரண்டு கனவுகளுக்கு அர்த்தம் சொல்கின்றார். எகிப்தின் ஆளுநனராக நியமிக்கப்படுகின்றார். எகிப்தைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றுகின்றார்.

இதற்கிடையில் யாக்கோபு தன் மகன் யோசேப்பு இறந்து விட்டார் என அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். எகிப்தில் நிலவிய பஞ்சம் கானானையும் நெருங்குகிறது. பஞ்சத்திலிருந்து தப்பிக்க எகிப்திற்குச் சென்று உணவு வாங்கி வருமாறு தன் மகன்களுக்குச் சொல்கின்றார்.

'நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?'

இந்தக் கேள்வியைச் சற்று வித்தியாசமாக நாம் கேட்டிருப்போம். ஏதாவது ஒரு வேலை சொல்லி நாம் சின்னப் பசங்களை அனுப்பும்போது, அவர்கள் ஒருசில நேரம் நின்று நம்மையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது நாம் சொல்லியிருப்போம், 'என்னடா சும்மா பார்த்துக்கிட்டே இருக்க...ஓடு!'

ஒருவர் மற்றவரை எப்போது பார்த்துக்கொண்டு இருப்போம்?

இந்த நிகழ்வில் ஒருவர் மற்றவரைப் பார்க்கக் காரணங்கள் பல உண்டு:

1. கையாலாகாத நிலை. எல்லாம் நம் கைமீறி போய்விட்டது என்றால் நாம் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருப்போம். இறப்பு நடந்த வீட்டில் விடிய விடிய உட்கார்ந்திருப்பது ஒரு கொடுமையான விஷயம். அந்த இரவு ஒரு மோசமான இரவு. எல்லாம் வெறுமையாகத் தெரியும். எல்லாம் இடிந்ததுபோல இருக்கும். யாராரோ வருவார்கள். போவார்கள். கைகுலுக்குவார்கள். ஆரத் தழுவிக்கொள்வார்கள். கதறி அழுவார்கள். ஆனால் எல்லாரும் கையறுநிலையில்தான் இருப்பர். யாராலும் யாரையும் சமாதானம் சொல்ல முடியாது. இதே போல் ஒரு இரவு முழுவதும் எப்படி இருக்க முடியும்? இறந்தவரைப் பற்றிய எண்ணங்கள் ஓடும். இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற கவலை பிறக்கும். இந்த இரவு சீக்கிரம் விடியாதா என்று தோன்றும். இதேபோல் மற்றொரு நேரம் நமக்கு நெருக்கமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது. சண்டைக்காரனைப் பார்த்தால்கூட சிரிக்கத் தோன்றுவது இந்நேரம்தான். நம் வைராக்கியம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல்போய்விடும். நோய், இறப்பு, முதுமை இந்த மூன்றும் நம்மைக் கையறு நிலைக்கு விட்டுவிடுகிறது.

யாக்கோபின் இல்லத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொண்டிருக்க இன்று இந்த மூன்றுமே காரணமாக இருக்கிறது. பசி என்ற நோய், யோசேப்பு என்ற சகோதரனின் 'இறப்பு'(!), யாக்கோபின் முதுமை. ஒன்று வந்தாலே நம் நிலை கவலைக்கிடம். மூன்றும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்கும்? ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆறுதலுக்காக.

2. பூனைக்கு யார் மணி கட்டுவார்? 'பூனைக்கு மணிகட்டுவது' என்ற சொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்குப் பொருள் 'யார் முதலில் தொடங்குவார்' என்பது. வீட்டில் ஏதாவது பிரச்சனை என வைத்துக்கொள்வோம். எல்லோரும் கூடிப் பேசி முடிவெடுக்க வந்திருக்கிறார்கள். ரொம்ப நேரம் ஆகியும் முடிவு எடுக்க முடியவில்லை. அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் சொல்லுவார்: 'இப்படியே மசமசன்னு இருந்தா எப்படி? சட்டுபுட்டுன்னு ஏதாவது ஒரு முடிவு எடுங்க!' இதையே தான் யாக்கோபும் சொல்கிறார். பார்த்துக்கொண்டே இருந்தால் சரியாகிவிடுமா. ஏதாவது செய்யுங்க.

நான் நான்கு சக்கர வண்டி பழகும்போது எனக்குக் கற்றுக்கொடுத்த சதீஷ் அடிக்கடி சொல்வார்: 'பிரேக் போடணும்னு நினைச்சா மட்டும் வண்டி நிற்காது. பிரேக் போட்டாத்தான் வண்டி நிற்கும்!' இதில் பெரிய வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது. பெரிய அளவில் சாதிக்கணும் என்று நினைச்சா மட்டும் சாதித்து விட முடியாது. அதற்கேற்ற வேலைகளையும் செய்ய வேண்டும். 

மேலாண்மையியலில் இதை 'wishing-will-make-it-so fallacy' எனச் சொல்வார்கள். நினைத்தால் சாதித்துவிடலாம் என நினைப்பது தவறு. நினைப்பு மட்டும் போதாது. செயல்பாடுகளும் அவசியம்.

'நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?'

1 comment:

  1. Anonymous10/09/2013

    இந்த blogஐ படிக்கும் நேரம கிட்டதட்ட என நிலையும் கையறு நிலைதான் எனக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு ஏதோ பிரச்சனை.அவரும் சொல்லவில்லை.கேட்கும் தைரியமும் எனக்கில்லை.என் கையாலாகாதனத்தால்இரவு முழுக்க இமை மூடவில்லை.

    ReplyDelete