Tuesday, October 15, 2013

உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?


அக்காலத்தில் மோசே வளர்ந்து விட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார். அவர்களுடைய பாரச்சுமைகளையும் பார்த்தார் ... ... ... அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார். குற்றவாளியை நோக்கி, 'உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?' என்று சொன்னான். (விடுதலைப்பயணம் 2:11,13-14)

இன்னைக்கு மதியம் 1:30 மணிக்கு கல்லூரியில் இருந்து என் இல்லத்திற்கு வந்தேன். மிச்சமீதியை சாப்பிட்டு விட்டு ஹோம்வொர்க் செய்த கொண்டிருந்தேன். ஏறக்குறைய 2 மணிக்கு காலிங் பெல் அடித்தது. 'chi è?' (யார் அது?) என்று கேட்டேன். 'சாப்பாடு வேண்டும்!' என்ற ஒரு நடுத்தர வயது ருமேனியப் பெண்ணின் குரல். ருமேணியப் பெண் என்றால் லோ-ஹிப் கட்டிக்கொண்டு, வெற்றிலை மென்று கொண்டு நிற்கும் என நினைக்காதீர்கள். ஜீன்சும், டிசர்ட்டும், ஓவர்கோட்டும், கூலிங் கிளாசுமாய் நின்றது. நான் சாப்பிட்டு மிச்சம் இருந்ததை ஒரு தட்டில் வைத்து 2:30 நிமிடங்கள் சூடாக்கி கீழே கொண்டு போனேன். சாப்பாடு எடுத்துச் செல்லும் அவசரத்தில் என் அறைச் சாவியை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். 'வேகமாகக் கொடுத்து விட்டு வந்துவிடலாம்!' என நினைத்துக் கதவை திறந்தே வைத்துவிட்டுப் படியிறங்கிச் சென்றேன். கீழே நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தவுடன் பிடுங்காத குறையாக வாங்கிச் சாப்பிட்டார். 'ரொம்ப பசிபோல' என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காற்றுக்கு என் அறைக் கதவு பூட்டிக்கொண்டது. சாவி உள்ளே மாட்டிக்கொண்டது. என் அறையைத் தாண்டி வசிக்கும் மற்றவர்களும் இன்று இல்லை. இருந்தால் திரும்பவும் காலிங் பெல் அடித்துத் திறந்து விடச் சொல்லலாம். ஒரு கதவு வேகமாக காற்றில் அடித்துப் பூட்டியதால் எமர்ஜென்சி என்ற அடிப்படையில் எல்லாக் கதவுகளும் ஆட்டோமெட்டிக்காகப் பூட்டிக்கொண்டன. நானும் அந்தப் பெண்ணும் வெளியே தெருவில் எங்கள் வாசற்படியில் நின்றுகொண்டிருந்தோம். மற்ற அருட்தந்தையர்கள் எப்போது வருவார்கள் என்று செல்ஃபோனில் கேட்கலாம் என்றால் செல்ஃபோனும் அறையில் மாட்டிக் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு விக்கல் எடுத்தது. 'தண்ணீர்!' என்று கேட்டது. வருவோர் போவோர் தண்ணீர் எடுத்துக்கொள்ள ஓபன் ஃபௌன்ட்டன் ஒன்று எங்கள் தெருவில் ஒன்று உண்டு. அதில் போய்க் குடியுங்கள் என்றவுடன் அந்தப் பெண்ணுக்குக் கோபம் வந்து விட்டது. 'வாட்டர் பாட்டில் தண்ணீர்தான் வேண்டும்!' என்றது. சாவி இல்லை. கதவு மூடிக்கொண்டது என்றேன். அதற்குப் புரியவில்லை போலும். நமக்கு பயத்துல தமிழே வராது. அப்புறம் எப்படி இத்தாலியன் வரும்? 'சாவி இருக்குங்கிறத நிருபிச்சிடலாம். ஆனா இல்லைங்கறது எப்படி நிருபிக்க முடியும்?' 

'தண்ணி இல்லைன்னா பரவாயில்லை. கோக் கிடைக்குமா?' என்றது. தமிழின் சில கெட்ட வார்த்தைகள் தொண்டை வர வந்து போயின. விக்கல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நம்ம கெட்ட நேரம் அந்தப் பொம்பளைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன செய்ய என நினைத்து அதை வாசற்படியில் அமர வைத்துவிட்டு அருகில் இருந்த கடைக்குப் போனேன். எந்தப் பையிலும் காசு இல்லை. கடனாய்த்தான் கேட்க வேண்டும். அருட்பணியாளருக்குரிய 'ஒயிட் காலர்' இருந்தால் கூட துணிச்சலாய்க் கேட்கலாம். அதுவும் இல்லை. வெறும் கறுப்பு டி-சர்ட்தான். வெள்ளைத் தோலுக்கே கடன் கொடுக்க மாட்டார்கள். நம்ம ரொம்ப வெள்ளை! கண்டிப்பாகக் கொடுக்க மாட்டான். இருந்தாலும் துணிச்சலோடு கேட்டேன். நான் நினைத்தது போலவே அவன் பதில் சொன்னான்: 'கடன் கிடையாது!'. கையில் போட்டிருந்த மோதிரம் கண்ணில் பட்டது. 'இந்த மோதிரத்தை வைத்துக்கொண்டு ஒரு பாட்டில் தண்ணீர் கொடுங்கள். எங்க ஃபாதர்ஸ் வந்தவுடன் நான் கதவைத்திறந்து பணம் கொடுத்து விட்டு மோதிரத்தை வாங்கிக் கொள்கிறேன்' எனச் சொல்லித் தண்ணீர் வாங்கினேன். வேகமாக வாங்கிக் கொண்டான். மற்றவர்களும் இப்படி வாங்குவார்கள் போல! அந்த லேடியிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து ஒரு வழியாய் அனுப்பிவிட்டு, கால்கடுக்கப் படியில் காத்திருந்து பின் ஒரு ஃபாதர் வந்து, 'என்னடா இங்க இருக்க?'ன்னு கதவைத் திறக்க வேகமாக ஓடிச்சென்று 'ஒரு யுரோ' எடுத்துக் கடைக்கு ஓடி என் மோதிரத்தை மீட்டேன். மோதிரத்தை வாங்கும் போது கடைக்காரன் சொன்னான்: 'veramente è oro?' 

நாம நல்லது செய்யப் போய் அது நமக்கே பிரச்சனையாய் ஆகிவிடுவது நம் எல்லாருக்கும் நிகழ்கின்ற ஒன்றுதான். இது ஏன்? என்பதற்குக் காரணம் இல்லை. 'நடக்கும் என்று இருந்தால் அது நடந்துதான் ஆகும்போல!'

மோசே வாழ்விலும் இன்று அப்படித்தான் நடக்கிறது. தன் இனத்தான் ஒருவனை எகிப்தியன் அடிப்பதைப் பார்த்துக் கோபம் கொள்கிற மோசே அவனைக் கொன்று புதைத்து விடுகிறார். அடுத்த நாள் தன் இனத்தான் ஒருவனை தன் இனத்தானே அடித்துக் கொண்டிருக்க, அங்கே சமரசம் செய்யச் செல்லும்போது, அவர்களில் ஒருவன், 'எங்களையும் கொல்லப் பார்க்கிறாயா?' என்று கேட்டவுடன் அவருக்குத் தூக்கி வாரிப் போடுகின்றது.

'யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சோம்!' ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே என்ற பயம் ஒரு பக்கம். 'டேய் அவனை நான் எதுக்காகக் கொன்னேன்னு தெரியுமா?' என்று தன்னை யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்ற விரக்தி மறுபக்கம். 

இந்தச் செய்தி பாரவோன் காதுகளுக்குப் போய் பாரவோன் இவரைக் கொல்லத் தேட இவர் எகிப்திலிருந்து தப்பி ஓடுகின்றார். மோசேயின் இளமைப் பருவம் பற்றி, அவரின் அரசவை வாழ்வு பற்றி விடுதலைப்பயண நூல் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. பேழையிலிருந்து எடுக்கப்படுகின்ற குழந்தை மோசே வளர்ந்து பெரியவராக வருகின்றார். 'தன் இனத்தின்மேல் உள்ள பற்று!' - இதுதான் மோசேயைக் கொலை செய்யத் தூண்டுகிறது. தான் அரசவையில் வளர்ந்தாலும், 'நான் இந்த இடத்திற்கு உரியவன் அல்ல!' என்பது அவர் உள்மனதில் இருந்துகொண்டேதான் இருந்திருக்கும். 

தானே தன் இனத்தை விடுதலை செய்ய நினைக்கின்றார். அது தோல்வியில் முடிகிறது. 'என்னால் முடியும்!' என நாம் முடிவுகட்டி இறங்கும் பல காரியங்கள் தோல்வியாக முடிகின்றன. 'கடவுளோடு சேர்ந்தால்தான் இனத்தின் விடுதலை சாத்தியம்' என்பதைத் தொடர்ந்துவரும் பகுதி காட்டுகின்றது. நம்முன் அநியாயங்கள் நடக்கும் போது இறங்கி அதை எதிர்ப்பதா? அல்லது எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என ஓய்ந்திருப்பதா?

'ஒருவேளை நம்மால் முடியவில்லையென்றால்...' என்ற பயம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களோடும் உடன் வந்து நம்மைக் கட்டிப்போடுகிறது. 

பயம் விடுப்போம். விரக்தி தவிர்ப்போம். துணிவே துணை!

'உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?'

No comments:

Post a Comment