Monday, October 21, 2013

ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?


இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, 'ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்? உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே 'செங்கல் அறுங்கள்' என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்' என்று கதறினர். (விடுதலைப்பயணம் 5:15-16)

அ. மோசே மற்றும் ஆரோனின் வார்த்தைகளைக் கேட்ட பார்வோன் அவர்கள் மேல் உள்ள கோபத்தை இஸ்ரயேல் மக்கள் மேல் திருப்புகின்றார். கோபம் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே பாய்கிறது. ஒரு போலீஸ் ஐ.ஜியின் கோபம் இன்ஸ்பெக்டர் மேல் என்றால், இன்ஸ்பெக்டரின் கோபம் ஏட்டின் மேலும், ஏட்டின் கோபம் வெளியில் காவல் நிற்கும் சென்ட்ரியின் மேலும், சென்ட்ரியின் கோபம் வழியோரம் வாழைப்பழம் விற்கும் வியாபாரியின் மேலும், வியாபாரியின் கோபம் அவர் மனைவியின் மேலும், மனைவியின் கோபம் பிள்ளையின் மேலும், பிள்ளையின் கோபம் பொம்மையின் மேலும் என வடிந்து கொண்டே போகிறது. மோசேயின் கடவுள் மேல் உள்ள கோபத்தை தனக்குக் கீழ் இருக்கும் அடிமை மக்கள் மேல் திருப்புகின்றான் பார்வோன். கோபத்திற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நபரிடம் நேருக்கு நேர் பேசிவிட்டால் கோபத்திற்கே அங்கு இடமில்லை. இன்று நாம் யார்மேலாவது கோபப்பட்டால் இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: 1) நாம் கோபப்படும் நபரை நமக்குக் கீழ் வைத்திருக்கின்றோம். அவர்கள் மேல்தான் நம் எண்ணத்தைச் சுமத்தப் பார்க்கின்றோம். 2) 'anger is one letter short of danger' அடுத்தவர்கள் செய்த தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனையே கோபம்.

ஆ. இஸ்ராயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் முறையிடுவது அவர்களின் 'assertive' மனப்பான்மையைக் காட்டுகிறது. குட்டக் குட்டக் குனிவார்கள் என்ற நினைத்த பார்வோனுக்கு இவர்களின் கேள்வி ஒரு எதிர்ப்பாகவே தெரிந்திருக்கும். குட்டியவுடன் எழுந்து விட்டனர் இஸ்ராயேல் மக்கள். நம்மை அடக்கி நினைக்க முயலும் எந்த அடக்கு முறையையும் எதிர்க்க முதல் வழி: கேள்வி. 'ஏன் இப்படி?' என்று கேட்டால் போதும். அடக்குமுறையைக் கையாள்பவரின் கண்களை எதிர்கொண்டு நேருக்கு நேர் நின்றால் போதும் வன்முறை நின்றுவிடும். பணிந்து போவதால் பல நேரங்களில் அடக்குமுறைகள் வளர்ந்துகொண்டே தான் போகின்றன. இன்று யாராவது நம்மைக் குட்டுகிறார்கள் என நினைத்தால் ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து, 'ஏன்?' என்று கேட்கலாமே?

'ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?'

1 comment:

  1. Anonymous10/21/2013

    நம்மீது யாரேனும் கோபப்பட்டால்'ஏன் இப்படி' என்று கேட்கலாம்தான்.ஆனால் இதைவிட வாய்மூடி மௌனம் சாதித்தால் நாம் நம் நிலைப்பாட்டில் தெளிவாயிருப்பதை மட்டுமல்ல அவர்கள்கோபத்தால் சாதிக்க முடியாததை நாம நம் மௌனத்தால் சாதிக்க முடியும் என்பதையும் காட்டலாம்.ஆமா கண்ணா,அந்த photoல இருப்பது யார்னு தெருஞ்சுக்கலாமா? எங்கோ பார்த்த ஞாபகம்.அவ்ளோதான்

    ReplyDelete