மறுநாள் மோசே மக்களுக்கு நீதி வழங்க அமர்ந்தார். காலை முதல் மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். 'நீர் மக்களுக்குச் செய்து கொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலை முதல் மாலை வரை உம்மைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?' என்று அவர் கேட்டார். (விடுதலைப்பயணம் 18:13-14)
பாலைநிலத்தில் இஸ்ராயேல் மக்களின் பயணம் தொடர்கிறது. பயண வழியில் பல பஞ்சாயத்துக்கள். அப்படி ஒரு முறை பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தபோது மோசேயின் மாமனார் வருகிறார். மோசேயைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்து 'என்ன?' எனக் கேட்கின்றார். 'நீதி வழங்குகிறேன்!' என்கிறார் மோசே. நீர் மட்டும் இதைச் செய்து கொண்டிருந்தால், மற்ற வேலையை நீர் எப்போது கவனிக்கப் போகிறீர்? ஆகையால் வேறு யாரையாவது இதற்கு ஏற்பாடு செய்யும் என ஆலோசனை வழங்குகின்றார். எங்கிருந்தே திடீரென வருகின்ற மோசேயின் மாமனார் நல்ல ஆலோசனை வழங்கியதோடு மட்டுமல்லாமல் மோசேயின் வேலைப்பளுவையும் குறைக்கின்றார்.
1. Delegation. இன்றைய தினம் மேலாண்மையியலில் அதிகம் பேசப்படும் கருத்தியல்களில் ஒன்று இது. நாம் பல நேரங்களில் எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என இழுத்துப் போட்டுக்கொண்டு நிற்கின்றோம். இப்படி இருக்கும்போது நம் தனிப்பட்ட திறமைகளில் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, மைக்கேல் ஜாக்சன் ஒரு உலகப் புகழ்பெற்ற நடனக்கலைஞர். அவர் நடனக்கலைஞராய் இருந்த போது 'நானே எல்லாவற்றையும் செய்வேன்!' என நினைத்துக்கொண்டு, 'அரங்கம் முன்பதிவு செய்வதிலிருந்து, டிக்கெட் அச்சிட்டு விநியோகம் செய்வது வரை' அவரே செய்திருந்தால் நடனப்பயிற்சிக்கு நேரம் கிடைத்திருக்குமா? நல்ல கலைஞர் என்ற பெயர் கிடைத்திருக்குமா? அன்றாட வாழ்வில் நாம் delgation பல இடங்களில் பயன்படுத்தத்தான் செய்கின்றோம். நமக்கு வேண்டிய ஒருவருக்கு ஒரு லெட்டர் அனுப்ப வேண்டுமெனில் நாமே கொண்டுபோய் கொடுப்பதற்குப் பதில் தபால் சேவையை பயன்படுத்துவதும் delegation தான். ஒவ்வொருவரின் திறமைகளைக் கண்டுணரவும், திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், நேரத்தை சரியாகச் செலவிடவும் 'delegation' மிகவும் அவசியம். அதையே மோசே இன்று கற்றுக்கொள்கின்றார்.
2. முதுமையின் ஞானம். விவிலியத்தின் நீதிமொழிகள் நூலும், சீராக்கின் ஞானநூலும் முதுமையை ஞானத்திற்கு ஒப்பிடுகின்றன. என்னதான் நூல்கள் பல கற்றாலும், வாழ்க்கையின் அனுபவங்களே, வயதின் அனுபவங்களே நமக்கு வாழ்வின் பெரியவற்றைக் கற்றுத்தருகின்றன. வாழ்க்கையின் அடிநாதமாக இருப்பது வயதாதல். நேற்றைவிட இன்று நமக்கு ஒருநாள் வயதாகிவிட்டது. இந்த ஒருநாள் வயது நம்மை எந்த அளவிற்கு உணர்வு முதிர்ச்சியடையச் செய்கிறது? வயதானால் மட்டும் ஞானம் வந்து விடாது? வாழ்வின் அனுபவங்கள் நம்மைப் பக்குவமடையச் செய்ய நாம் நம்மையே திறந்த மனத்தோடு கையளிக்கும்போதே அது ஞானமாக மாறுகிறது.
3. மோசேயின் பரந்த மனம். 'ஹலோ பாஸ்! எங்களுக்குத் தெரியும் என்ன செய்யனும்னு! நாங்க எகிப்திலிருந்து மக்களைக் கூட்டி வந்தோம். எங்களுக்கே அட்வைஸா!' என மாமனாரை உதறித்தள்ளவில்லை மோசே. அவரின் வார்த்தைகளை வரவேற்கும் பெரிய மனம் காட்டுகின்றார். 'உங்களைவிட பிறர் மதிப்பிற்குரியவர் என எண்ணுங்கள்!' என தூய பவுல் எழுதுவதன் அடிப்படையும் இதுதான். மற்றவர் நமக்குத் தரும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்தவர் மோசே.
4. தகுதியுடைவர் நியமனம் பெறுதல். மோசே மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விலகுகின்றார். மற்றவர்களின் தகுதியும் வெளிப்படுகிறது. 'எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்!' என்ற மனநிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கும் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பிறருக்கு வழிவிடும்போது மற்றவரின் திறமைகளும் வெளிப்படுகின்றன. 'நல்லது செய்கிறேன்!' எனச் சொல்லிக்கொண்டு மக்களைக் காலை முதல் மாலை வரை காத்திருக்க வைப்பது நலமா? எனக் கேட்கின்றார் மோசேயின் மாமனார்.
'நீர் மக்களுக்குச் செய்து கொண்டிருப்பது என்ன?'
வாழ்வின் அனுபவங்கள் நம்மைப் பக்குவமடையச்செய்யத் திறந்த மனத்தோடு நம்மைக் கையளிக்கும்போது ஞானம் பிறக்கிறது.அழகான உண்மை. ஒருவரை முதிர்ச்சியின் உச்சிக்கு கொண்டு செல்வது அவரது வயதல்ல...அவரது அனுபவங்களை அவர கையாண்ட விதமே. பணம்,செல்வத்தை விட தனது வருங்கால சநததிக்கு ஒருவர் விட்டுச் செல்லும் மேலான சொத்து இதுதான்.....இந்த அனுபவம் தான்.சரிதானே கண்ணா?
ReplyDelete