பின்பு அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, 'நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள். இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில், அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்' என்றான். (தொடக்கநூல் 37:26-27)
தங்கள் நலம் நாடி வந்த தன் சகோதரனை குழிக்குள் தள்ளிவிட்டு உணவருந்த அமர்கின்றனர் உடன்பிறப்புக்கள். 'பொறாமை' எந்த அளவிற்குக் கண்ணை மறைக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மஞ்சள்காமாலை வந்தவர்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரிவது போல, பொறாமை கண்களுக்குத் திரையிட்டுவிடுகிறது.
உணவு உண்டு கொண்டிருக்கும்போது ஒரு ஒட்டகக் கூட்டத்தைப் பார்க்கின்றனர். அது இஸ்மயேலரின் ஒட்டகக் கூட்டம். இஸ்மயேலருக்குத் தன் சகோதரனை விற்றுவிட முடிவு செய்கின்றனர். இதிலும் ஒரு சுயநலம் பாருங்கள். அவனைக் கொன்று விடுவதால் என்ன பயன்? என்று கேட்கும் யூதா அவனைக் காப்பாற்றத் துணியாமல் விற்க முடிவு செய்கிறான். விற்றால் காசும் வரும், இரத்தக்கறையும் போய்விடும். கொன்றால் இரத்தக்கறைதான் மிஞ்சுமே தவிர வேறு பயன் ஒன்றும் இல்லை. 'இருபது வெள்ளிக்காசுகளுக்கு' விற்கின்றனர். உடன்பிறப்பின் விலை இருபது வெள்ளிக்காசுகள். அவர்கள் விற்கும்போது யோசேப்பு அழுதிருக்க மாட்டாரா? என்ன சொல்லி அழுதிருப்பார்? இவர்கள் அனைவரையும் விட சிறியவராகத்தான் இருந்திருக்க வேண்டும். உடல் பலத்திலும் இயலாதவராய், எதிர்த்தும் பேசாதவராய், தப்பித்து ஓடாதவராய் அமைதியாய் இருந்திருக்க வேண்டும். பாலைவனத்தில் தப்பி ஓடினாலும் கண்டுபிடித்து விடலாம். மறைந்து கொள்வதற்கு மரங்களோ எதுவுமே இருக்காது.
தன் சகோதரனை விற்றுவிட்டு தன் தந்தையிடம் அதைப் பொய்யாக ஜோடிக்கின்றனர். யோசேப்பின் ஆடையை எடுத்து அதை ஒரு வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்தில் தோய்த்துத் தன் தந்தையிடம் காட்டுகின்றனர். பொறாமை – பழி தீர்ப்பு – பொய் என அவர்களின் குற்றம் வளர்ந்துகொண்டே போகின்றது. பொறாமை என்பது தன் வாலைத் தானே தின்னும் பாம்பு போன்றது. சகோதரர்களின் இந்தக் குற்றம் பூமராங் பந்தாய் அவர்கள் மேலேயே சீக்கிரம் திரும்பிவிடும்.
இந்த நிகழ்வில் மையமாக இருப்பது யூதாவின் கேள்வி: 'நமக்கு என்ன பயன்?'
இந்தக் கேள்வியை வாசித்தவுடன் எனக்கு ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. இந்த நிகழ்வை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். ஆனாலும் இந்த இடத்தில் அது நன்றாக பொருந்துகிறது.
ஒருநாள் மாலை மதுரை பெரியார் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சர்வோதயா இலக்கியப் பண்ணைக்குச் சென்றேன். புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து என் பைக்கை எடுக்கலாம் என நினைத்தபோது அங்கே அதை மறைத்துக்கொண்டு ஒரு மாருதி 800 நின்றது. காரின் ஓனர் வரும்வரை நிற்போம் என அதே இடத்திலேயே காத்திருந்தேன்.
எனக்கு 10 அடிகள் தள்ளி ஒரு வயதான தாத்தா 'மேஜிக் குதிரை' விற்றுக்கொண்டிருந்தார். சீனத் தொழில்நுட்பத்தில் தயாரான குதிரைகளின் படங்கள் அடங்கிய புத்தகமே 'மேஜிக் குதிரை'. படங்களை வேகமாகப் புரட்டினால் குதிரை புல்வெளியில் ஓடுவது போல் தெரியும். இதன் விலை ரூ 20. பாதையில் நின்றுகொண்டு வருவோர், போவோரையெல்லாம் பார்த்து 'மேஜிக் குதிரை', 'மேஜிக் குதிரை' எனக் கத்திக்கொண்டிருந்தார். யாரும் அவரைச் சட்டை செய்யவேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வழிநடந்தனர் சிலர். தங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் செய்யப்பட்ட 'வாசக்டமி' அறுவைச் சிகிச்சை பற்றி அரட்டை அடித்துக்கொண்டு நடந்தனர் இரு பெண்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயதானவர்கள் என எண்ணற்றோர் கடந்து சென்றனர்.
பொறுமையிழந்த நம் 'குதிரை' வியாபாரி பச்சைச் சட்டை போட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை நிறுத்தியே விட்டார். 'இதுதான் மேஜிக் குதிரை' என எக்ஸ்ப்ளைன் பண்ணத் தொடங்கினார் அவர். கேட்டு முடித்துவிட்டு பச்சைச் சட்டை மனிதர் சொன்னார்: 'இதனால் என்ன பயன்?' குதிரை வியாபாரிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. விரக்தியுடன் 'மேஜிக் குதிரையை' டேபிளில் போட்டார்.
'இதனால் என்ன பயன்?'
நாம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது:
கணவனால் என்ன பயன்?
மனைவியினால் என்ன பயன்?
குழந்தைகளால் என்ன பயன்?
பெற்றோர்களால் என்ன பயன்?
பேருந்து இங்கே நிற்பதால் என்ன பயன்?
நாம் குடிப்பதால் என்ன பயன்?
குடிக்காமல் இருப்பதால் என்ன பயன்?
இலை பச்சையாய் இருப்பதால் என்ன பயன்?
சூரியன் வெப்பமாய் இருப்பதால் என்ன பயன்?
கடலால் என்ன பயன்?
மலையால் என்ன பயன்?
நம் கேள்விகள் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன.
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் நம்மால் விடை கண்டுபிடித்தவிட முடியாது. 'ஒரு சில இருப்பது இருப்பதற்காகவே!' அவைகளின் பயன்பாட்டுத்தன்மையை நாம் அளவிட முடியாது.
எல்லாவற்றையும் பயன்பாட்டின் அடிப்படையில் பார்ப்பதால் தான் வாழ்க்கையில் வரும் 'மேஜிக் குதிரைகளை' இனங்கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது.
நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் மேஜிக்தானே.
நாம் பத்திரமாய் வீடு திரும்புவதும்,
நாம் அழைக்கும் நபர் லைனில் கிடைப்பதும்,
நாம் உண்ணும் உணவு,
நாம் உடுத்தும் உடை,
நாம் வசிக்கும் வீடு,
அனைத்துமே மேஜிக்தான்.
அந்த மேஜிக்கை நாம் கண்டுகொள்வதில்லை அல்லது அதைப் பயன்பாட்டு நிலைக்குக் குறுக்கிவிடுகிறோம்.
நாளையும் அந்த முதியவர் 'மேஜிக் குதிரைகள்' விற்க வருவார்!
'சகோதரனால் என்ன பயன்?'
'சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?'
No comments:
Post a Comment