மோசே ஆண்டவரிடம்: 'ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில் எனக்கு வாய் திக்கும்;. நாவும் குழறும்' என்றார். ஆண்டவர் அவரிடம், 'மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன். நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்' என்றார். அதற்கு அவர், 'வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!' என்றுரைத்தார். (விடுதலைப்பயணம் 4:10-13)
எரியும் முட்புதரில் தோன்றிய யாவே இறைவனுக்கும், ஆடு மேய்க்கச் சென்ற மோசேக்கும் இடையேயான உரையாடல் தொடர்கின்றது. 'நீ எகிப்திற்குப் போ. நான் உன்னை அனுப்புகிறேன்!' என்று கூறும் ஆண்டவருக்குச் சாக்குப் போக்கு சொல்லுகின்றார் மோசே.
1. 'நான் வாய் பேச முடியாது!' மோசே தன் பலவீனத்தைப் பார்க்கின்றார். ஆனால் கடவுள் அவரது பலத்தைப் பார்க்கின்றார். இதுதான் கடவுளின் பார்வைக்கும் நம் பார்வைக்கும் உள்ள வித்தியாசம். டம்ளரில் இருக்கும் தண்ணீரைப் பார்த்து 'பாதி காலியாயிருக்கிறது!' என்கிறார் மோசே. 'ஆனால் பாதி நிரம்பியிருக்கிறதே' என்கிறார் கடவுள். இன்று நாம் நம்மிலும், பிறரிலும் எதைப் பார்க்கின்றோம்? பலத்தையா? பலவீனத்தையா? முடியாது என்றால் எதுவுமே முடியாதுதான். முடியும் என்றால் எல்லாம் முடியும்.
2. பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே. நம் அனைவருக்கும் இயலாமைகள் இருக்கின்றன. நாம் பிறரை மட்டம் தட்டக்காரணமாக இருப்பது அவர்களிடம் நாம் காணும் இயலாமைகளே. 'இயலாமையை' வைத்து நாம் ஒருவரை மட்டம் தட்டும்போது அந்த இயலாமையை உருவாக்கிய இறைவனையே நாம் மட்டம் தட்டுகிறோம். நம் இயலாமைகளையும், அடுத்தவர்களின் இயலாமைகளையும் இருப்பது போல எடுத்துக்கொண்டால் கேலிப்பேச்சுக்கே இடமில்லை.
3. 'வேறு யாரையாவது அனுப்புங்க!' என கடவுளுக்கு யோசனை சொல்கின்றார் மோசே. நம் வேலையை நாம் தான் செய்ய வேண்டும். வேறு யாராவது செய்யட்டும் என எதிர்பார்ப்பதோ, 'நான் ஏன் செய்ய வேண்டும்?' எனப் பின்வாங்குவதோ சரியான நடைமுறை அல்ல.
4. கடவுள் தகுதியானவர்களைத் தன் பணிக்குத் தேர்ந்தெடுப்பது கிடையாது. ஆனால் தேர்ந்தெடுக்கும் அனைவரையும் தகுதியுள்ளவராக்குகின்றார். அருள்நிலை, பொதுநிலை என நம்மை அழைக்கும் அவர் அதற்கேற்றவாறு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகின்றார். ஆகையால் நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ்வோம். 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' (1 திமோத்தேயு 4:14).
'மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்?'
கண்ணா,இறைவன் இன்று தங்கள வழியாபத் தந்த அனைத்து செய்திகளும் அருமை.திமோத்தேயுவிலிருந்து கொடுக்கபபட்ட இறுதி வரிகள் மனத்திற்கு இதமாக இருந்தன.இறைவன் தங்களை தன் செல்லபபிள்ளையாக அவர்இதயத்திற்கு அருகாமையில்வைத்து பாதுகாக்க வேண்டுகிறேன்.அன்புடன...........
ReplyDelete