Tuesday, October 29, 2013

உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, 'ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? 'மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? ...' என்று வேண்டிக் கொண்டார்.

சீனாய் மலையில் மோசேக்கு ஆண்டவர் தோன்றுகின்றார். இஸ்ராயேல் மக்களோடு தாம் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடையாளமாக பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். 'இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் நாம் உங்கள் கடவுளாய் இருப்போம், நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்' என்ற நிபந்தனையின்கீழ் இந்த உடன்படிக்கை செய்யப்படுகின்றது. மலையின் மேல் உடன்படிக்கை நடந்து கொண்டிருந்தபோது, மலையின் கீழ் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, 'இதுவே நம் தெய்வம்!' என வணங்கிக் கொண்டிருக்கின்றனர். இது ஆண்டவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. அவர்களைத் தான் அழிக்கப்போவதாகச் சபதமிடுகின்றார். அப்போது குறுக்கிடும் மோசே தன் மக்களுக்காகப் பரிந்து பேசுகின்றார்.

விடுதலைப்பயணநூலை சுருக்கமாகக் சொல்ல வேண்டுமானால் அதை 'யாருக்குப் பணிசெய்ய வேண்டும்?' என்ற கேள்விக்குள் அடக்கி விடலாம். விடுதலைப்பயண நூலின் முதற்பகுதியில் 'இஸ்ராயேல் மக்கள் யாருக்குப் பணிசெய்ய வேண்டும் - கடவுளுக்கா? பாரவோனுக்கா?' என்ற கேள்வி எழுகின்றது. இதுவே 32ஆம் அதிகாரத்தில் 'கடவுளுக்கா? பொற்கன்றுக்குட்டிக்கா?' என மாறுகின்றது. தங்கள் வாழ்;க்கை முழுவதும் இந்தக் கேள்விக்கு எந்த விடை தருவது என போராடிக்கொண்டிருந்தனர் இஸ்ராயேல் மக்கள்.

இன்றைய நம் சிந்தனை மோசேயின் தலைமைத்துவம். தான் அழைத்து வந்த மக்களை கடவுள் அழிக்கப்போகிறார் என்று சொன்னவுடன், மோசேயின் பதில் இதுதான்: 'என் பெயரைக்கூட வாழ்வின் நூலிலிருந்து அழித்து விடும். ஆனால் என் மக்களை ஒன்றும் செய்ய வேண்டாம்!'

மோசேயின் உச்சகட்ட பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. தங்களின் பயணத்தில் எவ்வளவோ இடர்பாடுகள் வந்தாலும், மக்கள் என்னதான் முணுமுணுத்தாலும் தன் பயணம் இன்னும் நிறைவுபெறவில்லை எனவும், 'என்ன இருந்தாலும் இவர்கள் என் மக்கள்!' என்ற நினைவும் மோசேக்குப் பரந்த மனம் தருகின்றது. 

நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல நேரங்களில் மற்றவர்களை விமர்சனம் செய்வதிலேயே நேரத்தைக் கழிப்பதால் அவர்களை அன்பு செய்ய நேரம் இல்லாமல் போய்விடுகிறது. என்ன இருந்தாலும் இவர் என்னவர்! என்ற நினைவே பொறுப்புணர்வின் தொடக்கம்.

'உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?'

1 comment:

  1. Anonymous10/30/2013

    இன்றைய பகுதி என்னை சுய சிந்தனைக்குத்தூண்டியது..என்ஒரு விரல் அடுத்தவரைச்காட்டும்போது மற்ற நான்கு விரல்கள் என்னைக் குறிவைப்பதை எனக்கு உணர்த்திய பகுதி.அன்பின் மிகுதியால் அடுத்தவரை(அவர்கள் நம் நகமும் சதையுமாக இருந்தாலும்கூட) திருத்த முயலும் தருணங்களில் 'ஐயோ,இவர் என்னவர் என்ற எண்ணமும் கூடவே இருந்திருந்தால் எத்துனையோ ரணங்களைத் தவிர்த்திருக்கலாம்.என்னை சிந்திக்கத் தூண்டிய உங்களுக்கு நன்றிகள் பல கண்ணா.

    ReplyDelete