Saturday, October 19, 2013

யார் அந்த ஆண்டவர்?


பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, 'பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்' என்று அறிவித்தனர். அதற்குப் பார்வோன், 'யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ராயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன். இஸ்ராயேலரை நான் போகவிடவும் மாட்டேன்' என்று கூறினான். (தொடக்கநூல் 5:1-2)

'யார் அந்த ஆண்டவர்?'

நல்ல கேள்வி.

'யாருய்யா அந்தக் கடவுள்? நான்தான் எல்லோருக்கும் கடவுள்!' என்றுதான் பார்வோன் சொல்லியிருக்க வேண்டும். 

எகிப்தின் பிரமிடுகள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. பிரமிடுகள் வெறும் கல்லறைகளே. யாருடைய கல்லறைகள்? எகிப்தை ஆண்டை பார்வோன்களின் கல்லறைகள். எகிப்தில் ஏறக்குறைய 240 பிரமிடுகள் இருக்கின்றன. அவற்றில் பெரியனாவாக இருப்பவை மூன்று. இந்த மூன்றும் ஒன்று தாத்தா பார்வோன், அடுத்தது மகன் பார்வோன், அடுத்தது பேரன் பார்வோன் என்ற ஒரே குடும்பத்தைச் சார்ந்தது என்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரமிடுகள் வெறும் கற்குவியல்கள் அல்ல. அவை அறிவியல் தொழில்நுட்பத்தைப் பிரதிபலிக்கின்றன. பிரமிடு போன்ற அமைப்பிற்குள் அதிகமான காந்த சக்தி உருவாகிறது. இந்தக் காந்த சக்தி எந்தப் பொருளையும் அழிந்து விடாமல் பாதுகாக்கின்றது. ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே உடலைப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், காந்த ஆற்றலையும் கண்டறிந்திருந்தனர் எகிப்தியர்கள். எகிப்தியர்களின் இந்தத் தொழில்நுட்பம் அரசகுடும்பத்தாருக்கே அதிகம் பயன்பட்டது. பார்வோன்கள் எகிப்தியக் கடவுளர்களின் அவதாரங்களாகக் கருதப்பட்டனர். கடவுளர்கள் இறப்பதில்லை. பார்வோன்களும் இறப்பதில்லை. அவர்கள் உலகின் பார்வைக்கு இறந்தவர்களாகத் தெரிந்தாலும் மேலுலகில் என்றும் ஆட்சியாளர்கள் என்பதைக் காட்டுவதற்காகவும், மறுபிறப்பில் அவர்கள் மீண்டும் கடவுளர்களாக வருவர் என்ற நம்பிக்கைக்கு வலுவூட்டுவதற்காகவும் பிரமிடுகளைக் கட்டி அதில் பார்வோன்களின் உடல்களைப் பாதுகாத்தனர் எகிப்தியர்கள். பார்வோன் இறக்கும்போது அவர் பயன்படுத்திய அரியணை, படைக்கலன்கள், தேர்கள், குதிரைகள், அவருக்குப் பணி செய்த பணியாளர்கள், பணிப்பெண்கள் என அனைவரும் கொல்லப்பட்டு அவரோடு அடக்கம் செய்யப்பட்டனர். ஏனெனில் மறுபிறப்பு எடுத்து வரும் பார்வோனுக்கு அவர்கள் தேவைப்படுவார்கள். 

இந்த ஒரு பின்புலத்தில் பார்வோன்கள் தாங்கள் வாழ்ந்த காலத்திலும் தங்களைக் கடவுளர்களாகக் கருதி வாழ்ந்தனர். ஆகையால் தான் பார்வோனுக்கு, 'இஸ்ராயேல் மக்களின் கடவுள்' யாரென்றே தெரியவில்லை. அவன் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. மேலும் எகிப்து நாட்டில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க கடவுளர்கள் எதற்கு? தான் மட்டும் போதுமே! என்று நினைத்திருந்தான் பார்வோன்.

'யார் அந்த ஆண்டவர்?' நம் தாய்நாட்டிற்கு மேற்கத்திய மதபோதகர்கள் வந்தபோது நம் முன்னோர்களும் இதே கேள்வியைத்தான் கேட்டிருந்திருக்க வேண்டும்.

பார்வோனின் இந்தக் கேள்வியில் கேலியும் இருக்கிறது. பயமும் இருக்கிறது. நம் வாழ்வின் தேவைகள் நிறைவேறிவிட்டால், இனி தேவைகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டாலும் நாமும் இதே கேள்வியைத்தான் கேட்போம். 

'யார் அந்த ஆண்டவர்?' எனக் கேட்கின்ற பார்வோன் மிக விரைவாக 'உங்கள் ஆண்டவரே கடவுள்' என்று அறிக்கையிடுவார். 

இந்தியா போன்ற பல சமயங்கள் கொண்ட நாட்டில் இந்தக் கேள்வி பிரச்சினையாகவே அமையும். கடவுளர்களில் யார் பெரியவர் என்பதை வைத்து மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதும் உண்டு. கடவுளை எப்படித்தான் புரிந்து கொள்வது? புரிந்து விட்டால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது. 

பிறரின் சிரிப்போடு நாமும் சிரித்தால்

பிறரின் அழுகையோடு நாமும் அழுதால்

நாமும் கடவுளர்களே!

'யார் அந்த ஆண்டவர்?'

1 comment:

  1. Anonymous10/19/2013

    அழுவாரோடு அழவும் சிரிப்பாரோடு சிரிக்கவும் தெரிந்த அனைவருமே கடவுளர் தாம் என்பதை எத்துணை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி விட்டீர்கள் கண்ணா. பாராட்டுக்கள்.

    ReplyDelete