Friday, October 25, 2013

அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்!


மோசே மக்களை நோக்கி, 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் அமைதியாயிருங்கள்' என்றார். (விடுதலைப்பயணம் 14:13-14)

எகிப்தில் தலைப்பேறுகளை அழித்து இஸ்ராயேல் மக்களை விடுதலை செய்கின்றார் யாவே இறைவன். இஸ்ராயேல் மக்களின் வீடுகளைக் கடந்து செல்லும் இறைவன் எகிப்தியரின் தலைப்பேறுகளை மட்டும் அழிக்கின்றார். வாழ்வின் கடவுளுக்கும், இறப்பின் கடவுளுக்குமான யுத்தத்தில், ஒளியின் கடவுளுக்கும், இருளின் கடவுளுக்குமான யுத்தத்தில் வாழ்வின் கடவுளும், ஒளியின் கடவுளுமான யாவே இறைவன் வெற்றி பெறுகின்றார்.

பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் இஸ்ராயேல் மக்களின் முன் இப்போது நிற்பது செங்கடல். பின்புறம் பார்வோனின் படைகள். முன்புறம் கடல். என்ன செய்வது? பின்னால் ஓடினால் பார்வோனின் படைகள் கொன்றுவிடும். முன்னால் சென்றால் கடல் அமிழ்த்திவிடும். 'சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த' கதையாய் ஆகிவிட்டது அவர்கள் நிலை. நிலைகுலைந்த நிலையில் யாவே இறைவனின் அருட்கரத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே.

இதுவரை 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' எனப் பெயர் கொண்ட யாவே இறைவனுக்கு இந்த இடத்தில் புதிய பெயர் கொடுக்கப்படுகிறது: 'போரிடும் கடவுள்'.

அஞ்சாதீர்கள். நிலைகுலையாதீர்கள் என்னும் கட்டளையும், தொடர்ந்து ஆண்டவரின் வாக்குறுதியும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. ஆண்டவரின் வாக்குறுதி மூன்று நிலைகளில் அமைந்துள்ளது:

1. ஆண்டவர் விடுதலைச் செயல் செய்வார்.

2. இன்று காணும் எகிப்தியரை நீங்கள் இனி ஒருபோதும் காணப்போவதில்லை.

3. ஆண்டவர் உங்களுக்காகப் போரிடுவார்.

'நம் கண்முன் நிற்கும் தடை' இனி நமக்கு ஒருபோதும் தடையாயிருக்காது என்றால் அது எவ்வளவு பெரிய வாக்குறுதி. அது தரும் நம்பிக்கை அளப்பெரிது. என் மனம் சோர்வுறும் நேரங்களில் நான் அடிக்கடி வாசிக்கும் பல பகுதிகளில் ஒரு பகுதி இதுதான். 

முன்னும் பின்னும் நெருக்கடி இருந்தாலும் ஆண்டவர் நமக்காகப் போரிடுவார் என்றால் நாம் ஓய்ந்திருக்கலாமே. 'நாம் செய்ய வேண்டியதெல்லாம் அமைதியாயிருப்பதுதான்!' 

இறைவன் என்று ஒருவர் இந்த இடத்தில் தான் தேவைப்படுகின்றார். காரியங்கள் நம் கைமீறிச் செல்லும்போது அந்தக் காரியங்களைப் பார்த்துக்கொள்வேன் என்ற வாக்குறுதியோடு இறைவன் வருகிறார்.

இதே வாக்குறுதியை நம் இறைவன் நமக்குத் தருவது போல நாமும் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?

'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்!'

1 comment:

  1. Anonymous10/26/2013

    தங்களின் வழியே இறைவன் தந்த வாக்குறுதிகள் மனத்துக்கு இதமாக இருந்தன கண்ணா.நெருக்கடியான நேரங்களில் நம்மோடு பயணிக்கும் நம் இறைவன் நமக்காகப் போரிட்டு நம்மைக் காத்துக்கொள்வார் என்று அமைதியோடு ஓய்வெடுப்போம்....நம்பிக்கையூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி கண்ணா இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

    ReplyDelete