Thursday, October 31, 2013

தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்?

மோசே ஆண்டவரிடம், 'உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர். நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?' என்றார். (விடுதலைப்பயணம் 33:15-16)

'இம்மக்களை வழிநடத்திச்செல்' என்று மோசேக்கு யாவே இறைவன் கட்டளையிடுகின்றார். யாவே இறைவனின் துணையில்லாமல் தன்னை வழிநடத்திச் செல்ல இயலாது என்று இறைவனிடம் முறையிடுகின்றார். தன் பிரசன்னத்தை அவருக்கு உறுதி செய்கின்றார் இறைவன். 

இஸ்ராயேல் இனம் கடவுளால் 'செகுல்லா' (கண்ணின் கருவிழி)யாகத் தெரிந்து கொள்ளப்படுகிறது. அந்த தெரிவு செய்தலே அண்டை நாட்டவர் மத்தியில் பெருமையைத் தருகின்றது. கடவுளின் பிரசன்னத்தின் மேன்மையை உணர்கின்றார். தொடர்ந்து தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகின்றார் இறைவன். 'இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு மிக்கவர். நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் இறைவன்.

இங்கே இரண்டு எபிரேய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். 

'இரக்கம்' என்பதற்குப் பயன்படுத்தப்படும் எபிரேய வார்த்தையின் பொருள் 'பால் கொடுக்கும் தாய் தன் குழந்தையின் முகம் பார்ப்பது' என்பதாகும். தன் குழந்தையைக் கரிசணையோடும் பெருமையோடும் பார்க்கும் தருணம் அதுதான். கடவுளின் அருளிரக்கத்திற்கான உருவகமும் இதுவே.

இரண்டாவது வார்த்தை பேரன்பு. இதன் பொருள் தாயின் கருவறை. பெண்ணின் தாய்மையை மையப்படுத்திய வார்த்தைகளாக இவை இருப்பதைக் காணும் போது ஆண்டவரின் பிரசன்னம் என்பது அவரின் தாய்மை என்பது புலப்படுகின்றது. 

இறைவனின் தாய்மை நம்மையும் தாங்குகின்றது. அந்தப் பிரசன்னம் என்றும் நம்மோடு இருக்கிறது என்பதை உணர்ந்தோமாகில் நாமும் மற்றவருக்கு அந்தத் தாய்மையைப் பகிரக் கடமைப்பட்டுள்ளோம்.

'நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்?'

1 comment:

  1. Anonymous10/31/2013

    Iஇரக்கம்,பேரன்பு...இந்த இரு வார்த்தைகளுக்கும் எபிரேய மொழி வழியாகத் தரப்பட்ட விளக்கம் மிக அருமை.'என்பிரசன்னம் உன்னோடு செல்லும்' என்ற வாசகத்தைப் பார்க்கும் போது நம்மோடு உடன் வரும் நம் இறைவன் ஒரு 'தாயுமானவர்' என்பதை நினைவு கொள்வோம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete