Sunday, October 27, 2013

எவ்வளவு காலம் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?

ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை. ஆண்டவர் மோசேயை நோக்கி, 'எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்? கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே ஒவ்வொருவரும் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும். ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது' என்றார். ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர். (விடுதலைப்பயணம் 16:27-30)

'The Lord is My Shepherd: Healing Wisdom of the Twenty-Third Psalm' என்ற நூலை எழுதிய யூத ரபி Harold Kushner அந்த நூலில் இரு நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். 

நிகழ்வு 1:

அவரின் தொழுகைக் கூடத்திற்கு வருகின்றவர்களுக்கு அவர் counselling தருவதுண்டு. அப்படி counselling பெறுவதற்காக ஒரு பெரிய businessman வந்தார். அவரின் மகன் சில நாட்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து போனார். அந்த இறப்பையும், இழப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார் அந்த businessman. அவரிடம் ரபி நான்கு சனிக்கிழமைகள் தொடர்ந்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறுகிறார். அதற்கு businessman ரபியிடம், 'ஒவ்வொரு வாரமும் வர முடியுமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் நான் business தொடர்பாக அடிக்கடி வெளியூருக்குப் பயணம் செய்வேன். ஆகையால் ஒரே சனிக்கிழமையில் நான்கு sessions வைத்துக்கொள்ளலாமா?' எனக் கேட்கிறார். அதற்கு ரபி அவரிடம் சொல்கின்றார்: 'வாழ்வின் ஒரு சில காயங்கள் நேரம் எடுத்தால்தான் ஆறும். அதை விடுத்து அவசரப்பட நினைத்தால் பின் அதுவே நம்மை உறுத்திக்கொண்டு இருக்கும். முன்னைய நிலையை விட பின்னைய நிலை மோசமாகி விடும்'.

நிகழ்வு 2:

ரபி Harold Kushner நியூயார்க் நகரின் ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்காக நிகழ்ச்சிகள் வழங்கிக் கொள்ள ஒத்துக்கொள்கின்றார். ஆறுநாட்கள் அவர் பல்கலைக்கழகத்தில் வகுப்பு எடுக்க வேண்டியிருந்ததால் சனிக்கிழமை மட்டும்தான் அவரால் அந்த நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்கு செல்ல முடிகின்றது. ஆறு நாட்கள் பல்கலைக்கழகத்திலும், ஏழாம் நாள் தொலைக்காட்சி studio என நேரம் நிறைந்து விடுகிறது. ஓய்விற்கே இடமில்லை. சில மாதங்கள் செல்லச் செல்ல, அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவருக்கே பிடிக்காமல் போரடிக்கத் தொடங்கிவிடுகின்றன. 'சொன்னதையே சொல்வதாகவும், புதிய கருத்துக்கள், படைப்புத்திறன் குறைந்து போவதாகவும்' உணர்கிறார். அதற்குக் காரணம் ஓய்வில்லாமல் தான் ஓடிக்கொண்டிருப்பதே எனக் கண்டுபிடிக்கிறார். உடனடியாக தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஃபோன் செய்து தன்னால் இனி திங்கள் கிழமை மாலை மட்டுமே ஒளிப்பதிவிற்கு வரமுடியும் எனவும், சனிக்கிழமை ஓய்வு எடுக்கப்போவதாகவும் தெரிவிக்கின்றார். சனிக்கிழமையின் ஓய்வு அவருக்குப் புதிய கருத்துக்களையும், புதிய உணர்வையும் தருகின்றது. உலகப் புகழ்பெற்ற 'when bad things happen to good people' என்ற நூலைப் படைக்கின்றார்.

ஓய்வு.

'எல்லா நாளும் வேலை செய்ய வேண்டும்!' என்ற வேலைப் பைத்தியம்(!), வேலைப் போதை(!) பிடித்த சில இஸ்ராயேல் மக்களைக் கடிந்து கொள்கின்றார் யாவே இறைவன். 

ஓய்வு என்ற கருத்தியல் இஸ்ராயேல் மக்களுக்கு இரு புலங்களில் தரப்படுகின்றது:

1. உலகை ஆறு நாள்களில் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வெடுக்கின்றார். ஆகையால் ஏழாம் நாள் அவசியம்.

2. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவிக்கின்றார் யாவே இறைவன். ஆகவே வேலை என்னும் அடிமை நிலையிலிருந்து அவர்கள் ஓய்ந்திருக்க வேண்டும்.

'நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்!' என்றால் யார் கேட்பார்கள்? ஆகையால் தான் கடவுள் பெயரை உள்ளே இழுக்க வேண்டியிருக்கிறது. மேலை நாடுகள் தங்கள் வாழ்க்கை நிலையில் 'ஓய்வை' மிக முக்கிய அம்சமாக வைத்திருக்கின்றனர். வாரத்திற்கு இரு நாட்கள் ஓய்வு என்றால், வருடத்திற்கு மூன்று மாதங்கள் ஓய்வு என அமைத்து தங்கள் குடும்பம், வேலை, பயணம் அனைத்தையும் அதற்கேற்பத் திட்டமிடுகின்றனர். 'வேலை' என்பது எல்லாவற்றிலும் ஒன்று. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 'வேலை' என்னவோ ஒரு பெரிய புண்ணியமாகவும், கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்றாகவும் கற்பிக்கப்படுகின்றது. 'வேலை செய்தால், உழைத்தால் நல்லவன்!' 'ஓய்ந்திருந்தால், வேலை செய்யவில்லையென்றால் கெட்டவன், சோம்பேறி!' என சிறுவயது முதல் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. 'எறும்பு போல உழைக்க வேண்டும்! தேனீ போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்!' என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. இதுவே காலப்போக்கில் ஒருநாள் ஓய்ந்திருந்தால் கூட அது நமக்குக் குற்றவுணர்வாக மாறிவிடுகிறது.

மற்றொரு பக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு 'outsourcing' என்ற அடிப்படையில் தங்களின் அறிவு, படைப்புத்திறன் அனைத்தையும் அடமானம் வைத்து அவர்கள் ஓய்ந்திருப்பதற்காக நம் இளவல்கள் ஓடி உழைத்து, overtime பார்த்து சின்ன வயதிலேயே tension, stress விரக்தி, என்று ஓய்ந்து போகின்றனர். 'இன்னும் கொஞ்சம் வேலை பார்த்தால் இன்னும் நல்லா இருக்கலாம் என்று சொல்லி,' ஓய்வில்லாமல் இளவயதிலேயே மரணத்தைத் தழுவுபவர்களைப் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். நாம் பிறந்ததே வேலைக்காகத்தானா?

நம் வீட்டை வெறும் ஆடை மாற்றும் இடமாகவும், நம் உறவுகளை நமக்கு உணவு சமைத்துத்தரும் ஓட்டல்களாக மட்டுமே வைத்துள்ளோம். நாம் அதிக பட்சம் மேற்கொள்ளும் பயணம் நம் உறவினரின் திருமணத்திற்கோ, அல்லது நாம் குலசாமி கோயிலுக்கோ என்று குறுகிவிட்டது. நம் உறவுகளின் மரணம், நமக்கு நோய் என்றால் கட்டாய ஓய்வு (வேறு வழியில்லாமல்!) எடுக்கிறோம். ஓடி ஓடி உழைப்பதால் உடனடியாகப் பயன் இருப்பதாகத் தெரியலாம். ஆனால் வாழ்வின் பலவற்றை அந்த ஓட்டத்தில் பார்க்கத் தவறிவிடுகிறோம். 

ஆங்கில மோகம் மற்றொரு பக்கம். ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் மொழியில் மட்டுமே மக்கள் ஆர்வம் காட்ட நம் ஊரில் ஏனோ நம் நாட்டமெல்லாம் ஆங்கில மொழியில்தான் இருக்கின்றது. ஆங்கிலம் பேசினால் அது மேல்தட்டு நிலையில் நம்மை வைப்பதாக மாயையில் இருக்கின்றோம். அண்மையில் வெளிவந்த மூடர்கூடம் திரைப்படத்தில் ஒரு தமிழரிடம் ஆங்கிலத்தில் பேசும் மற்றொரு தமிழரைப் பார்த்து செண்ட்ராயன் சொல்வார்: 'கக்கூஸ் போய்ட்டு வந்தா இன்னும் கழுவிகிட்டுதான்டா இருக்கோம். என்னைக்கு எல்லாரும் பேப்பர்ல துடைக்க ஆரம்பிக்கிறாங்களோ அன்னைக்கு இங்கிலீசுல பேசுங்கடா!' மேலைநாட்டு மொழியைக் கற்கும் அளவிற்கு அவர்களின் ஓய்வை நாம் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது. 'சுறுசுறுப்பு' என்பது மேலை நாடுகள் நம்மைச் சுரண்ட நம்மேல் 'மதிப்பீடு' எனக் கட்டிய ஒரு 'பாவம்!'. நாம் சுறுசுறுப்பாய் இருந்தால் தானே அவர்கள் ஓய்வு எடுக்க முடியும்!

ஓய்விற்கு அடிப்படையாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்:

நம் வாழ்க்கை நமக்கு மட்டுமே. 'அடுத்தவர்களுக்காக பொருள் சேர்க்கிறேன்' என நாம் ஏன் ஓட வேண்டும்? எல்லாருக்கும்தான் வாழ்க்கையில் பொறுப்பு இருக்கின்றது. 'அடுத்தவர்களுக்காக!', 'நாளைக்காக' எனச் சொல்லிச் சொல்லியே நாம் 'நமக்காகவும்', 'இன்றுக்காகவும்' வாழ மறந்துவிடுகிறோம்.

ஓய்வு இல்லாமல் உழைப்பது என்பது, வேகமாகப் போக வேண்டும் என்பதற்காக பெட்ரோல் போடாமல் வண்டி ஓட்ட நினைப்பது போன்றது!

எவ்வளவு காலம் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?

1 comment:

  1. Anonymous10/28/2013

    ஓய்வின் முக்கியத்துவத்தை ரபி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து கூறி இருப்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒனறு.ஓய்வில்லாமல உழைப்பது ம் நிச்சயமற்ற நாளையைப் பறறிக் கவலைப்படுவதும் ஒனறு தான்.ஆமாம் எழுத்தாளரே,இது ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? உங்கள் ஓய்வு பறறி கவலைப்படுசதுண்டா? சிந்தியுங்கள்.

    ReplyDelete