Saturday, October 5, 2013

என்ன தேடுகிறாய்?


இஸ்ரயேல் யோசேப்பிடம், 'நீ போய் உன் சகோதரர், மந்தைகள் நலமா என்று விசாரித்து வந்து எனக்குத் தெரிவி' என்று சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து அவரை அனுப்பினார். அவரும் செக்கேமிற்கு வந்தார். அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, 'என்ன தேடுகிறாய்?' என்று அவரைக் கேட்டான். யோசேப்பு, 'என் சகோதரர்களைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்' என்றார். (தொடக்கநூல் 37:14-16)

யாக்கோபின் (இஸ்ரயேல்) மகன்கள் ஆடு மேய்க்கச் சென்றுவிடுகிறார்கள். அவர்களின் நலம் விசாரிக்க யோசேப்பை அனுப்புகின்றார் யாக்கோபு. இந்த நிகழ்வில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கவிருப்பதை குறிப்பால் உணர்த்துகிறார் ஆசிரியர். 'அவர்கள் நலமா' என்று பார்க்க யோசேப்பு செல்கின்றார். அவர்களின் நலத்தை இவர் விரும்புகிறார். ஆனால் இவரின் நலத்தை யாரும் விரும்பவில்லை. இவர் தன் சகோதரர்களின் நலனைத் தேடுகிறார். ஆனால் அவர்கள் இவரைக் கொல்லத் தேடுகின்றனர்.

'என்ன தேடுகிறாய்?'

இந்த நிகழ்விற்குத் தொடர்பே இல்லாத ஒரு மனிதன் யோசேப்பைச் சந்திக்கின்றான். அவன் கேட்கும் கேள்விதான் இது: 'என்ன தேடுகிறாய்?'

யோசேப்பின் கதைக்கும் இயேசுவின் வாழ்வுக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது என்பதை விவிலிய ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். தன்னைப் பின்தொடர்ந்து வந்த முதல் சீடர்களைப் பார்த்தும், கெத்சமேனித் தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்தவர்களைப் பார்த்தும் இயேசு கேட்பது இதுதான்: 'என்ன தேடுகிறீர்கள்?'

நோக்கம் தெளிவாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை இந்தக் கேள்விக்கான பதிலை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். 'தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி எடுக்கும்!' என்பது திரை வரிகள். 

நாம் பார்க்கும் வேலை, நாம் கட்டியெழுப்பும் உறவு, நம் செய்யும் அனைத்து செயல்களுக்குப் பின்னாலும் ஏதோ தேடல் இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

சிலருக்கு என்ன தேடுகிறோம் என்பது தெரிவதில்லை. சிலருக்கு ஏன் தேடுகிறோம் என்பது தெரிவதில்லை. தொலைந்ததைத் தேடுகின்றனர் சிலர். புதியதைத் தேடுகின்றனர் சிலர். ஆர்வத்தால் தேடுகின்றனர் சிலர். அவசியத்தால் தேடுகின்றனர் சிலர்.

தேடலுக்கு முக்கியம் 'புறப்பாடு'. ஒரு புள்ளியில் இருந்து நகரத் துணிச்சல் கொண்டிருப்பவர்கள் மட்டுமே தேட முடியும். 'இங்கே இருந்துகொண்டு எல்லாம் கிடைத்துவிடும்' என்றால் தேடல் சாத்தியமில்லை. தான் இருக்குமிடத்தை விட்டுப் புறப்படுதல் அவசியம்.

நம் ஒவ்வொரு விடியலுமே நம் தேடலின் ஒவ்வொரு கட்டம். ஒவ்வொரு விடியலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கிறதா? அல்லது அதே கட்டத்தில் வைத்திருக்கிறதா?

'என்ன தேடுகிறாய்?'

1 comment:

  1. Anonymous10/05/2013

    புரிதலின் முதல் புள்ளிதான் தேடல் மனிதர்களை,அவரின் செயலை சரியாக பரிந்து கொள்ள காரணகாரியங்களை தேடுதல் மிகமிக அவசியம் நம்மைச் சுற்றி இருப்பபவர்களின் மனத்தையும் அவர்களின் செயல்களையும் பரிந்து கொண்டாலே இப்பூமி அமைதி பூஙகாவாகிவிடும் என்ன சொல்கிறீர்கள் கண்ணா?

    ReplyDelete