அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, 'என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன் தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பி வைத்தீர்? உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை' என்று கூறினார். (விடுதலைப்பயணம் 5:22-23)
Henry J. Nouwen அவர்கள் எழுதிய ஒரு புகழ்பெற்ற நூல் The Wounded Healer. கடவுளால் அவரது பணிக்கு அழைக்கப்படுகின்ற ஒவ்வொரு அருட்பணியாளரையும் 'காயம்பட்ட மருத்துவர்' என அழைக்கிறார் நூவன். மோசே என்ற காயம்பட்ட மருத்துவரின் புலம்பல்தான் இன்றைய கேள்வி.
நாங்கள் குருமாணவர்களாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அடிக்கடி சொல்லப்படும் வாசகம் இதுதான்: "Ships in the harbour are safe. But they are not what they built for" (துறைமுகத்தில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பானவை. ஆனால் அவை அங்கே நிற்பதற்காகக் கட்டப்பட்டவை அல்ல). ஒரு கப்பலின் பயன் அல்லது அதன் திறன் அலையடிக்கும் கடலில்தான் தெரியும். ஒரு அருட்பணியாளரின் பயன் அல்லது அவரது திறன் அவரது பணியிடத்தில்தான் வெளிப்படும்.
உதவி அருட்பணியாளராக நான் மூன்று பங்குத்தளங்களில் பணியாற்றியுள்ளேன். அருட்பணியாளராய் இருப்பதில் மகிழ்ச்சி இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவிற்கு துன்பமும் இருக்கும் என்பதே எதார்த்தம். பெரிய திருவிழா என ஊரே கூடியிருக்கும். மின்விளக்கு வெளிச்சம். ஃபோகஸ் லைட். மைக் செட். 3000 பேருக்கு முன்னால் நின்று மறையுரை வைப்போம். வைத்த கண் வாங்காமல் 3000 பேர் நம்மைப் பார்ப்பர். அடுத்த ஒரு மணிநேரம். சப்பரம் போய்விடும். விளக்கெல்லாம் அணைந்து விடும். அறைக்கு வந்தால் அங்கே தனிமை கன்னத்தில் அறையும். அப்படியே சோர்ந்து கட்டிலில் விழுவேன் (சில சமயங்களில் அங்கியைக் கூடக் கழற்றாமல்!). எழுந்து ஒரு கப் காஃபி போடக் கூடத் திறன் இருக்காது. அப்போது நான் கேட்பேன். அருட்பணி வாழ்வில் எது நிஜம்? ஒரு மணி நேரத்திற்கு முன் 3000 பேருக்கு முன் நின்ற நானா? அல்லது ஒரு கப் காஃபி போடக் கூட முடியாமல் துவண்டு கிடக்கும் நானா?
எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால் ஒன்றும் இல்லாதது போல இருக்கும்.
எல்லோரும் நம்மோடு இருப்பது போல இருக்கும். ஆனால் யாரும் நமக்கு இல்லை என்பது போல இருக்கும்.
எல்லோரும் நம்மிடம் சிரித்துப் பேசுவார்கள். எல்லோரும் நம்மைப் பற்றிக் கேலி பேசுவார்கள்.
எல்லாருக்கும் விடுமுறை இருக்கும் அன்று அருட்பணியாளருக்கு வேலை இருக்கும்.
'வேலை', 'ஓய்வு', 'குடும்பம்', 'குழந்தைகள்', 'சினிமா', 'சர்க்கஸ்' என எல்லாருக்கும் ஒரு நாளில் அவர்களின் அடையாளங்கள் மாறும். ஆனால் அருட்பணியாளர் எங்கே சென்றாலும் அருட்பணியாளர்தான்.
18 வயதில் காதல், 25 வயதில் வேலை, 40 வயதில் பதவி உயர்வு, 58 வயதில் ஓய்வு என நகரும் வாழ்க்கை ஓட்டம் அருட்பணியாளருக்கு என்னவோ, 18 வயதில் கோயில், 25 வயதில் கோயில், 40 வயதில் கோயில், 58 வயதில் கோயில், 80 வயதிலும் கோயில் எனத் தேக்கமாகி(!) விடுகிறது.
சாதாரண குடும்பத்தில் உள்ளவருடைய கவலைகள் எல்லாம் பால், காய்கறி, தண்ணீர், கார்ப்பரேசன், பஸ், ஓட்டம், விருந்தினர்கள், கல்யாணம், சடங்கு, கடன், வட்டி, மாதக்கடைசி. அருட்பணியாளரின் கவலையெல்லாம் பூசை, ரசம், ஓஸ்தி, நவநாள், செபம், கோயில்.
பிடிக்கிறதோ பிடிக்கலையோ அனுப்பப்படும் இடத்திற்குப் போக வேண்டும். ஒரு ஆயரைப் பிடிக்கிறதோ இல்லையோ அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ அடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். யாரும் கேள்வி கேட்கலாம்? அவர்களுக்கு விருப்பமான பதிலையே நாம் சொல்ல வேண்டும்.
சீக்கிரம் மறையுரை முடித்தால் தயாரிக்கவில்லை என்பார்கள். கொஞ்சம் அதிக நேரம் எடுத்தால் 'இழுக்கிறார். எங்களுக்கு வேறு வேலை இல்லையா?' என்பார்கள்.
சரியான நேரத்திற்குத் திருப்பலியைத் தொடங்கினால், 'சும்மாதான் இருப்பார்போல!' என்பார்கள். கொஞ்சம் தாமதமாகத் தொடங்கினால், 'punctuality -யே இல்லை' என்பார்கள்.
எல்லாரிடமும் சிரித்துப் பேசினால் 'flirt' என்பார்கள். யாரிடமும் பேசவில்லையென்றால் 'உம்மனாம்மூஞ்சி' என்பார்கள்.
அதிகமான electronic gadgets வைத்திருந்தால் 'பகட்டு' என்பார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தால், 'காலத்திற்கு ஒத்துப்போகாதவர், உலகம் தெரியாதவர்' என்பார்கள்.
ஏதாவது வேலை செய்யப் பணம் கேட்டால், 'பணவிரும்பி' என்பார்கள். ஒன்றும் கேட்கவில்லையென்றால் 'சும்மாவே இருக்கிறாரு. கோவிலுக்காவது வெள்ளையடிக்கலாமே!' என்பார்கள்.
இப்படி மற்றவர் பேசினாலும் கேட்டுக்கொண்டுவிடலாம். ஆனால் ஒவ்வொரு அருட்பணியாளரும் கண்ணீர் வடிக்கின்ற ஒரு நேரம் - 'தனக்கென்று யாரும் இல்லையே!' என்னும்போதுதான். பிஷப் புரிந்து கொள்ளமாட்டார். சக குருக்கள் 'இவன் சருக்கி விழமாட்டானா' எனக் காத்திருப்பர். வேலை செய்யும் பங்கில் உள்ளவர்கள் 'இவர எப்படா அனுப்பலாம்!' என இருப்பர். எங்க போக முடியும்? அறைக்குள்ளே எவ்வளவு நேரம் இருக்க முடியும்? 'கடவுள் தான் கூப்பிட்டார்னு!' நினைச்சு நற்கருணைப் பெட்டி முன்னாலே உட்கார்ந்திருந்தாலும் எதார்த்தைவிட்டு ஓடிவிட முடியுமா?
'ஒன்றும் தெரியாத பருவத்தில் உள்ளே நுழைந்து விட்டோமோ' என்றுப் புலம்பும் வேளையில் சாத்தான் ஒரு சோதனை தான். அந்தச் சோதனைதான் 'martyr complex'. 'எல்லாவற்றையும் உன் கடவுளுக்காக ஏற்றுக்கொள்!' 'நீ ஒரு தியாகி!' 'நீ ஒரு புனிதன்' 'நீ மட்டும் மோட்சம் போவாய். உன் பங்கில் உள்ளவர்கள். உன் பிஷப். உன் உடன்குருக்கள். அனைவருக்கும் நரகம்தான்'. 'நீ அனைத்தையும் பொறுத்துக்கொள். எல்லாம் மாறிவிடும்' இப்படியெல்லாம் ஆழ்மனம் பேச ஆரம்பித்தால் அருட்பணியாளரே கவனம்: 'martyr complex' அருள்நிலையில் மட்டும் அல்ல. பொதுநிலையிலும் இச்சோதனை வரலாம். 'என்ன கஷ்டம்னாலும் நான் என் குடும்பத்திற்காகப் பொறுத்துக்கொள்கிறேன்!' எனத் தியாக எண்ணம் வந்தால் கவனம். இந்த எண்ணம் நம்மை எதார்த்தத்திலிருந்து தப்ப வைக்கும் ஒரு போதை மருந்து.
நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் பிரச்சனையை. அதைத்தான் மோசே செய்கிறார். 'என்னை ஏன் அழைத்தீர்?' 'என்னை ஏன் அனுப்பினீர்?' என முறையிடுகிறார். அதுதான் ஒரு அருட்பணியாளருக்குத் தேவை. அதை விடுத்து 'என் மக்களுக்காக, என் கடவுளுக்காக நான் பார்வோனின் துன்பங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்' என்று மோசே சொல்வாரானால் அது தவறான நிலைப்பாடு.
'நான் நல்லது செய்ய நினைத்து அதை தீயதாக முடிந்துவிட்டதே!' என முறையிடுகின்றார் மோசே. அன்று இறைவன் உடனே பதில் கொடுத்தார். ஆனால் இன்று நற்கருணையின் முன் 'ஐயோ! கஷ்டமாக இருக்கின்றதே!' என்று அருட்பணியாளர்கள் முறையிடும்போது எங்கும் 'மௌனம்'தானே இருக்கிறது. இறைவன் என்று குரல் கொடுப்பார்?
'இறைவன் குரல் கொடுக்க மாட்டார்' என்று நிலைகுலைந்து 'அருட்பணி' நிலையை விடுத்துப் 'பொதுநிலையை'த் தழுவிக் கொள்ளும் அருட்பணியாளர்களை 'ex-priest' என்ற பட்டம் வாழ்க்கை முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு நாள் திருப்பலியிலும் அருட்பணியாளர் திராட்சை இரசத்தோடு கலப்பது தண்ணீர் அல்ல. அது அவர் தன் தனிமையில் வடிக்கும் கண்ணீர்!
'எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?'