Wednesday, July 1, 2020

உன் பிழைப்பைத் தேடிக்கொள்

இன்றைய (2 ஜூலை 2020) முதல் வாசகம் (ஆமோ 7:10-17)

உன் பிழைப்பைத் தேடிக்கொள்

நான் மதுரை உயர்மறைமாவட்டத்தில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்படுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், என்னுடன் அருள்பணி மாணவ பயிற்சியில் இருந்த ஒரு சகோதரர் (இன்று அவரும் ஓர் அருள்பணியாளர்) ஒருநாள் மாலை என்னிடம், 'உங்களுக்கு வேற வேலை கிடைக்காது என்பதற்காகவும், உங்களுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்க என்பதற்காகவும்தானே நீங்க குருமடத்தில் சேர்ந்தீர்கள்!' என்று கேட்டார். அவர் அன்று மட்டுமல்லாமல், என்னைப் பார்க்கும்போதெல்லாம் அப்படிக் கேட்டார். எனக்கு முதலில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கொஞ்ச நாள்கள் கழித்து அவர் கேட்கும்போது கோபம் வந்தது. மூன்றாவது, நான்காவது முறை கேட்கும்போது என்னுள்ளே சிறு சந்தேகமும், என் தன்னம்பிக்கையில் தளர்வும்கூட இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் சிறிய உருவில் இருந்ததாலும், மிக ஏழ்மையான பின்புலத்திலிருந்து நான் வந்திருந்ததாலும் என் அழைத்தல் மேலேயே எனக்கு தளர்ச்சியும், 'நான் கடவுளை ஏமாற்றுகிறேனோ!' என்ற ஒருவித குற்றவுணர்வும் கூட வந்தது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் இன்றும் அவர் கேட்டது என் நினைவிற்கு வருகிறது. ஆனால், என் அழைத்தல் பற்றிய நம்பிக்கையும், நன்றியுணர்வும்தான் இன்று மேலோங்கி இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில்  ஆமோஸ் ஏறக்குறைய இதே கேள்வியை எதிர்கொள்கின்றார்:

'உன்னுடைய பிழைப்புக்காகவா நீ இங்கே இறைவாக்குரைக்க வந்தாய்! வேறு எங்காவது போய் பிழைப்பைத் தேடிக்கொள்! காட்சி காண்பவனே! போய்விடு! ஓடிவிடு!'

இந்த நிகழ்வின் பின்புலம் என்ன?

சாலமோன் அரசருக்குப் பிறகு, ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடு என்பது வடக்கே இஸ்ரயேல் என்றும், தெற்கே யூதா என்றும் பிரிந்தது. இஸ்ரயேலின் தலைநகராக பெத்தேலும், யூதாவின் தலைநகராக எருசலேமும் இருந்தது. யூதாவிலிருந்து புறப்படுகின்ற ஆமோஸ் இஸ்ரயேல் சென்று அங்கே பெத்தேலில் இறைவாக்குரைக்கின்றார். பெத்தேலில் குருவாக இருப்பவர் அமட்சியா. ஆமோஸின் வருகை அவருக்குப் பிடிக்கவில்லை. அரசருக்கு அதுவரை குருதான் எல்லாமாக இருந்தார். குரு சொல்வதையே அரசர் கேட்டார். இப்போது புதியதாக அவருடைய எல்லைக்குள் இறைவாக்கினர் ஒருவர் வருவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பழைய ஏற்பாட்டில், 'குரு' என்ற நிறுவன அமைப்பிற்கும், 'இறைவாக்கினர்' என்ற நிறுவன அமைப்பிற்கும் இடையே நிறைய போட்டி இருந்தது. இந்த இருவரில் யார் 'அரசன்' என்ற அமைப்பைத் தாங்குவது என்ற போட்டியும் இருந்தது. ஆனால், இந்த மூன்று பணிகளையும் ஒன்றாக்கி, ஒவ்வொரு அருள்பணியாளரும், 'அரசர், இறைவாக்கினர், குரு' என்று திருஅவை நமக்குக் கற்பிக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் வரவிருந்த அசீரியப் படையெடுப்பு பற்றி அரசனை எச்சரிக்கவும், நாடு முழுவதும் நீதியை நிலைநாட்ட மக்களைத் தூண்டவும் செய்கிறார். 'இது நடக்காது' என்று தானாகவே நியாயப்படுத்துகின்ற அமட்சியா, ஆமோஸின் இறைவாக்குப் பணி போலியானது என சொல்கின்றார்.

அதற்கு ஆமோஸ் பின்வருமாறு பதில் கூறுகின்றார்:

'நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, 'என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்!'

அதாவது, 'உன்னைப் போல குருவாக இருந்து பிழைப்பு நடத்துபவன் அல்லன்! எனக்கு வேறு பிழைப்பு இருந்தது. இன்னும் இருக்கிறது. நிறைய சொத்துக்களும், வேலையாள்களும், தோட்டங்களும் இருந்தன. ஆனால், அவர் என்னை அழைத்ததால் நான் வந்தேன்' என்று சொல்கின்றார்.

இது ஒரு பக்கம், ஆமோஸ் பெற்றிருந்த இறைவாக்கினர் பணி உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் செய்தியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆமோஸின் தன்னறிவை நமக்குக் காட்டுகிறது. அதாவது, தான் யார் என்பதையும், தன்னை யார் அழைத்தார் என்றும், தன் பணி என்ன என்பதையும் நன்றாக அறிந்திருந்தார்.

மேலும், தொடர்ந்து துவண்டு போடாமல் தான் கொண்டு வந்த செய்தியை அவர்களுக்குச் சொல்கின்றார்.

இந்த இறைவார்த்தைப் பகுதி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

ஒவ்வொரு அருள்பணியாளரும் தன்னுடைய பின்புலம், அழைத்தல், மற்றும் பணி பற்றி எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும் - ஆமோஸ் போல!

இன்று என் 11 வருட அருள்பணி வாழ்வைத் திருப்பிப் பார்க்கும்போது என்னிடம் இரு பெரிய பிரச்சினைகளை உணர்கிறேன்: 'Entitlement' மற்றும் 'Self-Sufficiency'. இதை சற்றே விளக்கமாகப் பார்ப்போம். 'Feeling Entitled' என்பதைத் தமிழில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், 'ஒன்றை உரிமை எனக் கருதும் உணர்வு' என்று சொல்லலாம். அதாவது, நான் அங்கி போட்டு கார் ஓட்டினால் எல்லாரும் என்னை அருள்பணியாளர் என்று அடையாளம் கண்டு, எழுந்து, வணங்கி, ஆராதிக்க வேண்டும் என நினைப்பது. 'என் அங்கி' அல்லது 'என் அருள்பணி நிலை' எனக்கு அந்த உரிமையைத் தருகிறது என நினைப்பது. இன்னொரு உணர்வு, Self-Sufficiency அதாவது, 'எனக்கு எல்லாம் இருக்கிறது. எனக்கு எந்தக் குறையும் இல்லை. நான் ஒரு மிஸ்டர் பெர்ஃபெக்ட் என நினைப்பது. இந்த இரண்டு உணர்வுகளுமே, நன்றியுணர்வின் எதிரிகள். இந்த இரண்டும் இருப்பவர் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவும், சகோதர சகோதரிகள்மேல் இரக்கம் காட்டவும் இயலாது.

ஆமோஸ் இந்த இரண்டு உணர்வுகளையும் மிக அழகாகக் கையாளுகின்றார். அப்படித்தான் இருக்க வேண்டும். நான் என் அழைத்தல் வாழ்வின் முதல் நாளை - அரை டவுசர், வெறுங்கால், சிறிய பெட்டி, ஒரு வாளி என்று குருமடத்திற்குள் நுழைந்த அந்த நாளை - நினைக்கும்போதெல்லாம் மேற்காணும் இரு உணர்வுகளும் மறைந்துவிடுகின்றன.

இன்னொரு பக்கம், நாம் மற்ற அருள்பணியாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், மேலோட்டமாக அவர்களைப் பார்க்காமல், அவர்களின் உள் இருக்கும், அவர்களை உள்ளிருந்து அழைக்கும் இறைவனைப் பார்க்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 9:1-8), இயேசுவுக்கும் இதே நிலை ஏற்படுகிறது. முடக்குவாதமுற்ற ஒருவருக்கு அவர் நலம் தந்தபோது, அவரிடம் விளங்கிய இறைவல்லமையைக் காணாமல், 'இவன் கடவுளைப் பழித்துரைக்கிறான்' என்று சொல்கிறார்கள்.

'கடவுளைப் பழித்துரைக்கும் ஒருவர்' எப்படி கடவுளின் பெயரால் செயலாற்ற முடியும்?


5 comments:

  1. Excellent!
    உருக்கமான பதிவு
    தலை வணங்குகிறேன்.🙏

    உண்மை எப்போதும் ஆழமானது.
    இருபக்கமும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்துவது.

    You are a special gift for very many.

    ReplyDelete
  2. தங்களை ஆரம்ப நாட்களில் இழிவாகப்பார்த்த...கேட்ட அந்த அருள்பணியாளருக்காக இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.ஏனெனில் இன்று தங்கள் அழைத்தல் பற்றிய நம்பிக்கையும்,நன்றியுணர்வும் மேலோங்கி நிற்பதற்குக் காரணம் அவரே! இந்த உணர்வே தாங்கள் அடுத்த அருள்பணியாளரை மேலோட்டமாகப்பார்க்காமல் அவரின் உள்ளிருக்கும்...அவர்களை உள்ளிருந்து பார்க்கும் இறைவனையும் அறிந்து கொள்ள உதவியுள்ளது.இறைவாக்கு உரைப்பதெல்லாம் இரண்டாம் பட்சமே! சரியான வார்த்தைகள்...அதற்குத்தகுதியான அருள்பணியாளரின் உள்ளத்திலிருந்து! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. For who hath despised little days? Zechariah 4:10. I have read about your posts when you entered the Seminary. The small post card stuck at the gap of your home door. I was thinking of it many days, Father. What if that post card went missing? How could one post card change one's life? God makes great things from simple things only. You are a priest not because of your financial background or anything. You are a priest, because you ought to be one. In one of your posts on your ordination anniversary, you had said like this - ' Many have asked me what I have gained becoming a priest. I would answer them , 'I would have lost many if I hadn't become one'. - I think that happens only when a priest realises his mission.

    ReplyDelete
  4. Great!
    Dear Catherine...
    You have well said...

    ReplyDelete
  5. Hats off to u Ms.Catherine for ur comments. U couldn’t ‘ve better explained Father’s journey to reach the place where he is now. How can anyone forget his post card episode? He deserves every single good word that is mentioned in ur comments.If only every Priest has someone to pat on their back, they’ll surely prove worthy of their Priesthood.
    A word of appreciation to u too.Love...

    ReplyDelete