Friday, July 17, 2020

இறுதிவரை நன்மை

இன்றைய (18 ஜூலை 2020) நற்செய்தி (மத் 12:14-21)

இறுதிவரை நன்மை

இயேசுவின்மேல் பகைமை பாராட்டுகின்ற பரிசேயர்கள் அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர். அதை அறிந்த இயேசு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றார். செல்லும் வழியில் பலர் அவரைப் பின்தொடர்கின்றனர். அவர்களுடைய நோய்களை எல்லாம் குணமாக்குகின்றார்.

தன் எதிரியின் சூழ்ச்சியும்,

தன்னைப் பின்தொடர்பவர்களின் அன்பும்

இயேசுவின் இயல்பை மாற்ற இயலவில்லை.

எதிர்ப்பு வந்தாலும், பாராட்டு வந்தாலும் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை இயேசு.

இன்று, ஒரு நாளைக்கு எத்தனை முறை நான் என்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டே இருக்கிறேன்?

எனக்குப் பிடித்தவர்கள் முன் ஒரு மாதிரியும்,

எனக்குப் பிடிக்காதவர்கள் முன் வேறு மாதிரியும்,

தெரிந்தவர்கள் முன் ஒரு மாதிரியும்,

தெரியாதவர்கள் முன் வேறு மாதிரியும்,

என் அறைக்கு வெளியே ஒரு மாதிரியும்,

என் அறைக்கு உள்ளே வேறு மாதிரியும்

என என் இயல்புகள் மாறிக்கொண்டே இருக்கக் காரணம் என்ன?

எனக்கு வெளியில் இருப்பவர்களும், இருப்பவைகளும் என்னைத் தம் பிடிக்குள் வைத்திருக்குமாறு நான் அனுமதிக்கும்போதெல்லாம், நான் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், என்னையே நான் வெற்றிகொண்டால், என் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், என் இயல்பு மாறாமல் இருக்கும்.

மாறாத தன் இயல்பில், வலுவற்றோர் பக்கம் துணைநிற்கிறார் இயேசு.

வலுவற்ற நாணலை அவர் முறிக்கவில்லை.

துயருற்ற திரியை அவர் அணைக்கவில்லை.

ஏனெனில், அவை தன் இயல்பைக் காத்துக்கொள்ள நினைக்கின்றன என்பது அவருக்குத் தெரியும்.

தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத ஒருவர், அடுத்தவர் தன்னுடைய இயல்பில் இருப்பதையே விரும்புவார்.

2 comments:

  1. "மாறாத தன் இயல்பில்,வலுவற்றோர் பக்கம் துணை நிற்கிறார் இயேசு"

    எனக்கு வலுவூட்டுகிறவரின், துணை கொண்டு , அவர் விருப்பம் என் செயலாக.....🙏

    ReplyDelete
  2. ஊரையே தூக்கும் அளவுக்கு சூறாவளியும்,தாயைப்போல் நம்மைத் தாலாட்டும் அளவிற்குத் தென்றலும் இருப்பது அதனதன் இயல்பு. தன்னுடைய படைப்புகள் பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தினாலேயே அவற்றை அதனதன் போக்கில் விட்டார் இயேசு.தன்னை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்ற நினைத்த முனிவரை மீண்டும் மீண்டும் கொட்டிய தேளையும், தன்னைக்கொட்டிய தேளை மீண்டும் மீண்டும் ஆற்றுக்குள் விட நினைத்த முனிவரையும் பற்றித்தான் நமக்குத் தெரியுமே!( இது ஒருவரை அவர் போக்கில் விடாத காரணத்தால் வந்த விளைவு)
    தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத ஒருவர்,அடுத்தவர் தன்னுடைய இயல்பில் இருப்பதையே விரும்புவார்.....அருமை! நல்லதோ,கெட்டதோ...அவராகத்தெரிந்து கொள்ளும் வரை அவர் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.நல்ல வாழ்க்கைப்பாடம்.தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete