Tuesday, July 28, 2020

நான் தனியனாய்

இன்றைய (29 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 15:10,16-21)

நான் தனியனாய்

இன்று நாம் புனித மார்த்தாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கடந்த வாரம் தங்கைக்கு (மகதலா மரியா) திருநாள் கொண்டாடியதால் இந்த வாரம் அக்காவுக்குத் திருநாளா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், மகதலா மரியாவும் பெத்தானியாவின் மரியாவும் ஒன்றுதான் என்பது சிலரின் கூற்று.

மார்த்தா லூக்கா நற்செய்தியில் சொல்லும் வார்த்தைகளும், இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா சொல்லும் வார்த்தைகளும் ஒன்றாக இருக்கின்றன. ஆக, நம் சிந்தனை இவ்விருவரின் வார்த்தைகளை மையமாக வைத்தே இருக்கிறது.

மார்த்தா: 'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே!' (லூக் 10:40)

எரேமியா: 'உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்!' (எரே 15:17)

'என்னைத் தனியே விட்டுவிட்டாளே!' என்று, மார்த்து இயேசுவிடம் புலம்பியது, அவள் நெடுநாள் தன் மனத்தில் வைத்துப் பூட்டியிருந்த வார்த்தைகளாகத்தான் இருந்திருக்கும். மார்த்தா, மரியா, லாசர் என்னும் மூன்று குழந்தைகளும் இளவயதிலேயே தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கலாம். இந்த நிலையில், அக்காவாகிய மார்த்தா மற்ற இருவரையும், தாய் போல இருந்து, வளர்த்திருப்பாள். அக்காவைப் பெற்ற யாவரும் இரண்டு அம்மாக்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பது கூற்று. ஏனெனில், வீட்டில் உள்ள எல்லா அக்கமார்களும் தங்கள் தம்பிகள் மற்றும் தங்கையரிடம் ஓர் அம்மா போலவே அன்பு செலுத்துகின்றனர்.

டோஸ்டாவ்ஸ்கி எழுதிய, 'குற்றமும் தண்டனையும்' என்ற புதினத்தில், 'ஒரு சிலர் தங்கள் வாழ்வில் இறுகிய முகமும் மனமும் கொண்டு வாழ்வதேன்? அவர்கள் பிறக்கும்போதே அப்படிப் பிறக்கிறார்களா? அல்லது அவர்களின் சூழலும் பொறுப்புணர்வும் அப்படி மாற்றிவிடுகிறதா? அவர்கள் தனியாக இருக்க விரும்புவது ஏன்? அவர்களால் இயல்பாகச் சிரிக்க முடியவில்லை ஏன்?' என்று கதாநாயகன் ரோடி கேட்பான்.

மார்த்தாவும் இப்படித்தான் தனியாகவே வளர்ந்திருப்பாள். அவள் தன்னையே அம்மா நிலையில் வைத்திருந்ததால், தன் சகோதரன் மற்றும் சகோதரியோடு இயல்பாகப் பேசியிருக்க முடியாது. ஆக, அம்மா போலவும் இருக்க முடியாமல், அக்கா போலவும் இருக்க முடியாமல் தனக்குள் புழுங்கிக் கொண்டிருந்த மார்த்தா, இயேசுவைக் கண்டவுடன், 'என்னைத் தனியாக விட்டுவிட்டாளே!' என்று அழத் தொடங்குகின்றாள்.

அக்காமார்கள் இப்படித்தான் தங்களுக்கென்று தனிமையை மட்டுமே துணையாக்கிக் கொள்கிறார்கள். ரோஸா பாட்டியின் மூத்த மகள் கார்லாவும் இப்படித்தான். தன் தம்பி க்விதோவுக்காகவும், தன் தங்கை லூயிஸாவுக்காகவும் தன்னையே தனிமையாக்கிக் கொண்டாள். தன் அப்பா இறந்தவுடன், தன் அம்மா மற்றும் தம்பி, தங்கையை இவளே பார்த்துக்கொள்கிறாள். முழு அம்மாவாக இருக்க முடியாமல், முழு அக்காவாக இருக்க முடியாமல், தவிக்கும் அவள், அந்தத் தவிப்பிலும், தனிமையிலும் அமைதி காண்கிறாள்.

இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா, ஆண்டவரிடம் முறையிடுகின்றார்: 'உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்.'

கடவுளின் கை நம்மேல் இருந்தால் நாம் எல்லாரோடும் நல்ல நண்பர்களாகத்தானே இருக்க வேண்டும். பின் ஏன் தனியனாய் எரேமியா இருக்கிறார்?

கடவுளின் கையைத் தன்மேல் கொண்டிருக்கும் ஒருவர் வாழ்வில் தெரிவுகளைச் செய்ய வேண்டும். தெரிவுகளில் நிலைத்திருப்பவர்களின் நண்பர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். எடுத்துக்காட்டாக, நான் நண்பர்களோடு திரையரங்கிற்குச் செல்வது வழக்கம் என வைத்துக்கொள்வோம். திரைப்படங்கள் பார்ப்பது என் பணிக்கான நேரத்தை எடுத்துவிடுகிறது என்பதற்காக, நான் திரைப்படங்களுக்குச் செல்வதில்லை என உறுதி எடுக்கிறேன் என் உறுதிப்பாட்டைக் காணும் நண்பர்கள் என்னிடமிருந்து இயல்பாகவே பிரிந்துவிடுவர்.

ஆகையால்தான், பவுலோ கொயலோ, 'தெ வின்னர் ஸ்டேன்ட்ஸ் அலோன்' (The Winner Stands Alone) என்கிற தன்னுடைய புதினத்தில், வெற்றியாளர்களுக்கு நண்பர்கள் யாரும் இருப்பதில்லை என்றும், வெற்றியாளர்களுக்கு நண்பர்கள் தேவையில்லை என்றும் சொல்கிறார். ஏன்? தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய இருத்தலின் பொருளையும் தனக்கு வெளியே தேடுபவர்தான் நண்பரைத் தேடுவார். அவற்றைத் தன்னுள்ளே கண்டுகொண்ட ஒருவருக்கு நண்பர்கள் தேவையில்லை.

எரேமியா, தான் இறைவன் சார்பாக நின்று, மக்களின் குற்றத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்ததால், அவர் 'தனியன்' நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.

'எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்?'

என அவர் புலம்பினாலும்,

'நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன்.
என்முன் வந்து நிற்பாய்.
பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.
அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்.
நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.'

எரேமியா, தான் தனியனாய் விடப்பட்ட நிலையில், தனக்கென நண்பர்களைத் தேடிச் செல்கின்றார். தனியன் என்பதே உன் அழைப்பு என அவரை மீண்டும் அழைக்கிறார் ஆண்டவர்.

பயனில நீக்கிப் பயனுள பேசின் இறைவாக்கினனன்.

பயனில நீக்கத் தொடங்கினால் பாதி நண்பர்கள் போய்விடுவார்கள்.

பயனுள்ளது பேசத் தொடங்கினால் மற்றவர்களும் போய்விடுவார்கள்.

தனியனே இறைவாக்கினன்.

தனியள் என நின்ற தமக்கை மார்த்தா, தன் குடும்பத்திற்காக அந்நிலை ஏற்றாள்.

தனியன் என நின்ற இறைவாக்கினன் எரேமியா, தன் நாட்டிற்காக அந்நிலை ஏற்றார்.

தனியர்கள் பிறப்பதில்லை. சூழல்களே அவர்களை உருவாக்குகின்றன.

1 comment:

  1. “ தனியர்கள் பிறப்பதில்லை; அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.” போன்ற பல உண்மைகளை உள்ளடக்கிய நேர்த்தியானதொரு பதிவு.அக்கா மார்த்தா போன்றோரின் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை எனபதும், அக்காவைப்பெற்ற யாவரும் இரு அம்மாக்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் நாம் அன்றாடம் குடும்பங்களில்
    பார்க்கும் விஷயம் தான்.இதில் ரோசாப்பாட்டியின் குடும்பம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? “ என்னைத்தனியே விட்டுவிட்டாளே!” என்று புலம்பும் மார்த்தாவும் சரி, “ உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்” என முறையிடும் எரேமியாவும் சரி, ......இவர்கள் இறைவனின் பார்வையில் விசேஷித்தவர்கள்; அவரின் அன்பை அணு அணுவாக உணர்பவர்கள். இப்படித்தான் நான் இவர்களைப் பார்க்கிறேன். மார்த்தா- மரியா நிகழ்வு எத்தனை விவாதங்களுக்குட்படுத்தப்பட்டாலும் நான் என்றுமே “ மார்த்தா” வழிதான்.ஏனெனில் நான் கூட என் ‘அக்கா’ வில் ஒரு மார்த்தாவைப்பார்க்கிறேன்.
    இன்றையப்பதிவின் மார்த்தா மற்றும் எரேமியாவைத்தாண்டி என் மனத்துக்கு நெருக்கம் தந்தது தந்தையின் “ ரோசாப்பாட்டி” குடும்பம் பற்றிய நெகிழும் நிகழ்வுகள். உரோமைநகரை விட்டு வந்து வருடங்கள் கடந்திருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை..அவர் குடும்பத்தைப்பற்றிய நல்ல விஷயங்கள்! மலரும் நினைவுகள்! எத்தனை தூரம் அந்தக்குடும்பம் தந்தையையின் உள்ளத்தில் உறைந்து போயிருந்தால் காலம் கடந்தும்,கண்களை விட்டு அவர்கள் மறைந்தும் தந்தை அவர்களை இத்தனை நெருக்கமாக நினைவில் வைத்திருப்பார்.ரோசாப்பாட்டியைப்பற்றிய நல்ல விஷயங்களைக்கேட்டுக் கேட்டே அவர் எனக்கும் நெருக்கமாகிப்போனவர்.
    திரும்பவும் தந்தையின் இறுதிவரியே என் இறுதியாகவும் இருப்பதை உணர்கிறேன்.ஆம்!” தனியர்கள் பிறப்பதில்லை. சூழல்களே அவர்களை உருவாக்குகிறது.”

    எனக்குள்ளும் பல “ மலரும் நினைவுகளைத்” தட்டி எழுப்பிய தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete