Friday, July 24, 2020

புனித பெரிய யாக்கோபு

இன்றைய (25 ஜூலை 2020) திருநாள்

புனித பெரிய யாக்கோபு

செபதேயுவின் மக்களில் மூத்தவரும், இயேசுவின் திருத்தூதர்களில் முதன்மை வட்டத்திலிருந்த மூவரில் ஒருவரும், எருசலேம் திருஅவையின் தலைவரும், இயேசுவின் சகோதரர் என அறியப்பட்டவருமான சந்தியாகப்பர் அல்லது பெரிய யாகப்பரின் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம்.

நான் வழக்கமாகப் பின்தொடரும் 'டேனியல் ஆலி' என்ற யூட்யூப் சேனலில், அதன் பதிவர், பின்வரும் கவரிகை ('போஸ்டர்') ஒன்றை ஒட்டியிருந்தார்:

'வாழ்வின் 3 எளிய விதிகள்:

1. நீ விரும்பும் ஒன்றின்பின் செல்லாவிட்டால், அது உனக்கு ஒருபோதும் கிடைக்காது.

2. நீ ஒன்றைக் கேட்காத வரை, அதற்கான விடை, 'இல்லை' என்றே இருக்கும்.

3. நீ முன்னால் நடந்து நகரவில்லை என்றால், நீ எப்போதும் அதே இடத்தில்தான் இருப்பாய்.'

இந்தக் கவரிகையின் பின்புலத்தில் இன்றைய திருநாள் கதைமாந்தர் பற்றிச் சிந்திக்க விழைகின்றேன்.

கலிலேயர். அதாவது, படிப்பறிவற்ற பாமரர்கள் வாழும் பகுதியிலிருந்து வந்தவர்.

மீன்பிடித் தொழில் செய்தவர். இவரும் இவருடைய சகோதரர் யோவானையும் இயேசு அழைத்தபோது, இவர்கள் தந்தையையும், படகுகளையும், பணியாளர்களையும் விட்டுவிட்டு வருகின்றனர். ஆக, படகு மற்றும் பணியாளர்களை அமர்த்தி வேலை பார்த்த செல்வம் படைத்தவர்கள்.

முதல் வட்டத்தில் இருந்தவர். இயேசுவிற்கு நெருக்கமாக 12 திருத்தூதர்கள் இருந்தாலும், அவர்களில், மூவர், இன்னும் அதிக நெருக்கமாக இயேசுவுடன் இருக்கின்றனர். பேதுரு, யோவான், யாக்கோபு என்னும் இந்த மூவர்தாம், இயேசுவின் உருமாற்றத்தின்போதும், இயேசு, யாயிரின் மகளுக்கு உயிர்தந்த போதும், இயேசு, கெத்சமேனித் தோட்டத்தில் துன்புற்ற போதும் உடனிருக்கின்றனர்.

மாற்கு நற்செய்தியில், இவரும் இவருடைய சகோதரர்களும், இயேசுவின் அமைச்சரவையில் இடம்பெற விரும்பி, இருக்கைகள் கேட்கின்றனர்.

எருசலேம் சங்கம் கூட்டியவர். புதிய நம்பிக்கையைத் தழுவியவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, உடனடியாக, திருத்தூதர்களை அழைத்து, விருத்தசேதனம் தேவையில்லை என்ற ஒரு முக்கிய முடிவை எடுக்கின்றார். ஒருவேளை அவர் அப்படி எடுக்கவில்லை என்றால், இன்று நாம் எல்லாரும், முதலில் யூதர்களாக மாறி, பின்தான் கிறிஸ்தவர்களாக மாறியிருக்க முடியும்.

இறுதியில், இவர் இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்விடுகின்றார். இவருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பெட்டியில், 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள்தாம், இயேசு என்ற வரலாற்று நபர் வாழ்ந்தார் என்பதற்கான, விவிலியத்திற்குப் புறம்பான சான்றாக இருக்கிறது.

ஆக,

மேற்காணும் விதிகளை இவர் வாழ்வில் பொருத்திப் பார்;த்தால்,

1. இவர், தான் விரும்பும் திருத்தூதுப்பணி என்னும் இலக்கை நோக்கைச் சென்றார். மறைசாட்சி என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

2. இயேசுவின் அருகில் அரியணை கேட்டார். அதிகாரத்தின்மேல் உள்ள விருப்பத்தால் அல்ல. மாறாக, இயேசுவுக்கு அருகிருக்கும் ஆசையில். இவர் அன்று கேட்டதால்தான், எருசலேமின் திருஅவைத் தலைவராக ஏற்படுத்தப்படுகிறார்.

3. மீனவர், சீடர், திருத்தூதர், முதல் வட்டத் திருத்தூதர், தலைவர், மறைசாட்சி என ஒவ்வொரு கட்டமாக நகர்ந்தவர்.

வாழ்வின் எளிய 3 விதிகள் என டேனியல் ஆலி அழைக்கின்ற விதிகள் நமக்குப் பொருந்துகின்றனவா?

2 comments:

  1. “ நீ ஒன்றின்பின் செல்லவில்லை எனில் அது உனக்குக்கிடைக்காது” என்பதும்,” நீ ஒன்றைக்கேட்காத வரை அதற்கான விடை ‘இல்லை’ என்றே இருக்குமென்பதும்,” நீ முன்னால் நடந்து நகரவில்லை என்றால் அதே இடத்தில் தான் இருப்பாய்” என்பதும் வாழ்வின் எளிய விதிகளெனில் அவை எனக்குப் பொருந்துகின்றனவா? கொளுத்திப் போட்டுள்ளார் தந்தை.அது எரிந்து,அணைந்து, சாம்பலாகி அதன் பின்னால் தான் தேடிப்பார்க்க வேண்டும் என்னில் என்ன மிச்சமுள்ளது என்பதை. தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. இன்றைய புனிதர் இறந்தது 44 ஆம் ஆண்டு. எருசலேம் திருச்சங்கம் நடந்தது 48 ஆம் ஆண்டு. வரலாறு கொஞ்சம் இடிக்கறது.
    அன்றாட இறைவார்த்தையை வித்தியாசமான கோணங்களில் தரும் தந்தைக்கு பாராட்டுகள் . நன்றி.

    ReplyDelete