Wednesday, July 29, 2020

குயவன் வீடு

இன்றைய (30 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 18:1-6)

குயவன் வீடு

இன்றைய முதல் வாசகத்தில், 'குயவன் வீட்டிற்கு' எரேமியாவை அனுப்பும் ஆண்டவராகிய ஆண்டவர், 'குயவன் கையில் இருக்கும் களிமண்ணை' உருவகமாகக் காட்டி, 'இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்!' என்கிறார்.

தரையில் கிடக்கும் மண், உணவு சமைக்கும் பானையாக, தண்ணீர் சேமிக்கும் பானையாக, தண்ணீர் சேகரிக்கும் பானையாக, தானியம் சேமிக்கும் பானையாக, கழிவுநீர் சுமக்கும் பானையாக, இறுதிச் சடங்கில் பயன்படும் பானையாக, எப்படி வேண்டுமானாலும் வனையப்படலாம். 'நான் இப்படித்தான் உருவாகுவேன்!' என்று களிமண் குயவனிடம் முறையிட முடியாது. அல்லது அப்படி முறையிட்டால், அது வெறும் மண்ணாகக் காய்ந்துதான் கிடக்கும். அல்லது குயவனால் உடைத்து எறியப்படும்.

இஸ்ரயேல் வீட்டார் செய்த பாவம் இதுதான். 'நாங்கள் இப்படித்தான் இருப்போம்' என்று தங்களுடைய பிடிவாதத்திலும், இறுமாப்பிலும் நின்றார்கள். அவர்களை எச்சரிக்கின்றார் ஆண்டவராகிய கடவுள்.

இந்த உருவகத்தில் ஒரு மெய்யியல் சிக்கல் இருக்கிறது.

இறைவனின் கையில் நான் களிமண் என்றால், எனக்கு எந்தவொரு சுதந்திரமும் கிடையாதா?

சுதந்திரம் உண்டு என்றால், எந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் உண்டு?

இப்படி ஓர் உருவகத்தை எடுத்து வாழ்வதில், சுதந்திரமும் இருக்கிறது, பொறுப்பின்மையும் இருக்கிறது.

இது ஏறக்குறைய அருள்பணி வாழ்வில் நாம் எடுக்கும் அல்லது கொடுக்கும் 'கீழ்ப்படிதல் வாக்குறுதி' போல.

இந்த வாக்குறுதியை ஏற்பதில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. அதாவது, என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவை நான் என் ஆயரின் அல்லது மாநிலத் தலைவரின் கைகளில் விட்டுவிடுவதால் நான் சுதந்திரமாக இருக்க முடியும்.

அதே வேளையில், என்னுடைய பணித்தளத்தில் ஏதாவது பிரச்சினையை நான் உருவாக்கும்போது, மக்கள் என்னைக் கேள்வி கேட்கும்போது, 'நானா இந்த இடத்திற்கு வந்தேன்! ஆயர் அல்லது மாநிலத் தலைவர்தான் அனுப்பினார்! அவரைப் போய்க் கேளுங்கள்' என்று நான் சொன்னால், அங்கே, அதே கீழ்ப்படிதல் வாக்குறுதி, பொறுப்பின்மையாக மாறிவிடுகிறது.

இஸ்ரயேல் மக்கள், சுதந்திரமாக மற்ற தெய்வங்களை வழிபட்டனர். கடவுள் அவர்களைக் கேட்டபோது, பொறுப்பின்மையோடு செயல்பட்டனர்.

கடவுளின் கையில் நான் களிமண் என்று சொல்வது ஆன்மீகக் காதல் உருவகம் போல் இருக்கிறது. ஆனால், அவரின் கையில் நான் களிமண்ணாக என்னையே அளிக்க நான் நிறைய தியாகம் செய்ய வேண்டும்.

மண்ணிலிருந்து அவர் என்னைப் பிரித்தெடுக்கும்போது அந்த தனிமையை நான் ஏற்க வேண்டும்.

தண்ணீர் விட்டு அவர் என்னைப் பிசையும்போது எனக்குள் உருவாகும் இறுக்கத்தை நான் ஏற்க வேண்டும்.

சக்கரத்தில் வைத்து அவர் என்னைச் சுற்றும்போது எனக்குள் உருவாகும் சோர்வை நான் ஏற்க வேண்டும்.

நெருப்பில் வைத்து அவர் என்னைச் சுடும்போது அந்தச் சூட்டை நான் ஏற்க வேண்டும்.

வர்ணம் எனக்கு அவர் பூசும்போது அதன் வாடையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வளவும் கடந்தால்தான், நான் அழகிய பானை ஆவேன்.

பானை ஆகியவுடன் நான் 'ஆல் பவர்ஃபுல்' கிடையாது.

ஓர் ஆட்டுக்குட்டியின் பின்னங்காலும் கூட என்னைத் தள்ளி உடைத்துவிடும் அளவுக்கு நான் பலவீனமாகிவிடுவேன்.

என் பலவீனத்தோடு நான் தொடர்ந்து போராட வேண்டும். வெயில், மழை, வெப்பம், குளிர் அனைத்தையும் தாங்க வேண்டும்.

ஏனெனில், நான் பானையாக இருந்தாலும் என்நேரமும் நான் களிமண்ணே. எந்நேரமும் நான் அந்நிலைக்குத் திரும்பத் தயாராக இருக்க வேண்டும்.

களிமண் தன்னைக் குயவன் கையில் ஒப்படைத்தாலும் இறுதியில் அது களிமண்தானே தவிர, குயவன் அல்ல.

விதி என்னும் சக்கரத்தில், என்னை வைத்து ஆட்டும் அந்தப் பெயரில்லா (அல்லது பல பெயர் கொண்ட) குயவன், பல நேரங்களில் சக்கரத்தில் வைத்து என்னைச் சுற்றவிட்டு, சோறு சாப்பிடப் போய்விடுகிறான். இதோ! நான் இன்னும் சுற்றிக்கொண்டே இருக்கிறேன்!

2 comments:

  1. “குயவன் கைகளில் களிமண்”. .....பல நேரங்களில்ப, பலர் வழியாக நம் காதில் வந்து விழுந்த உருவகம் தான்.இவன் கைகளில் உள்ள களிமண் பானையாக, அது கடந்து வரவேண்டிய பாதை தனிமை,இறுக்கம்,சோர்வு,சூடு,வாடை, என்று எத்தனை எத்தனை தியாகங்கள் நிறைந்தது.அதன் பின்பும் கூட ஒரு ஆட்டின் பின்னங்கால்களும் அதை மீண்டும் பழையநிலைக்கே மாற்றக்கூடிய ‘வலுவின்மை’. தந்தை தரும் இந்த வியாக்கியானம் களிமண்ணிலிருந்து பிறக்கும் பானைக்கு மட்டுமா? எத்தனை மனிதருக்கும் பொருந்தும்! வாழ்வெல்லாம் உழைக்கும் ஓடாக...ஓலையாக கேட்பாரற்று குயவன் கைளில் உள்ள சக்கரத்தின் பற்களாக ஓய்வின்றி உழைத்தும் அவர்களுக்கு மிஞ்சுவதெல்லாம் தனிமையும்,சோகமும் தானே.! நம்மால் முடிந்தால் யாரேனும் சுதந்திரமென்பதே என்னவென்று தெரியாத ஒரு குயவனை( அதற்கு சம்மான ஒருவரை)
    கண்டுபிடிப்போம்.நம்மால் இயன்ற அளவுக்கு நம் கைகளை நீட்டுவோம்.இறைவன்( ஆயர்) கையின் பானைகளையும்( அருட்பணியாளர்கள்) நம்மவர்களாக ஏற்றுப் போற்றுவோம். களிமண்ணிலும் கவிதை வடிக்கலாம்! தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    குயவனின் கையில் களிமண்... “Have Thine own way Lord; Have Thine own way
    Thou art the potter; I’m the clay“ .... எனும் அழகான பாடலை நினைவூட்டுகிறது.தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. இறைவனின் கையில் நான் களிமண் என்றால், எனக்கு எந்தவொரு சுதந்திரமும் கிடையாதா?

    // Million dollar question Father...when someone tells me Giving ourselves to His Providence, I ask them back ' what's the point?'

    ReplyDelete