Tuesday, July 7, 2020

ஒருநிலை

இன்றைய (8 ஜூலை 2020) முதல் வாசகம் (ஓசேயா 10:1-3,7-8,12)

ஒருநிலை

நேற்று மாலை 'கன்ஸிஸ்டென்ஸி' (Consistency) என்ற காணொளியை யூடியுபில் 'ஸி.ஆர்.பி.' (CRP) சேனலில் பார்த்தேன். 'கன்ஸிஸ்டென்ஸி' என்ற வார்த்தையை தமிழில் 'ஒருநிலை,' 'நிலைப்புத்தன்மை,' 'தன்முரண்பாடின்மை,' 'இசைவு' என மொழிபெயர்க்கலாம்.

கன்ஸிஸ்டென்ஸி என்பது நான் ஒன்றை விரும்புகிறேனோ அல்லது விரும்பவில்லையோ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறது. இதுவே கன்ஸிஸ்டென்ஸி.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுப்பவர்களை மூன்று வகைகளில் பிரிக்கலாம்.

முதல் வகையினர், மாத்திரை எடுப்பதால் இனிப்பு எதுவும் எடுக்கமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு சோதிக்கப்பட்டாலும், கட்டாயப்படுத்தப்பட்டாலும் இனிப்பைத் தொட மாட்டார்கள். இவர்கள் கன்ஸிஸ்டென்ஸி (consistency) வகையினர்.

இரண்டாம் வகையினர், மாத்திரை எடுப்பர். எப்போதாவது இனிப்பு எடுப்பர். கட்டாயத்தின்பேரில் எடுப்பர். அல்லது விருப்பத்தின்பேரில் எடுப்பர். சர்க்கரைச் சத்து கூடியதுபோல நினைத்தால் உடனடியாக கூடுதல் மாத்திரை போட்டுக்கொள்வர். இது குற்றவுணர்வுடன் கூடிய கன்ஸிஸ்டென்ஸி (consistency with guilt).

மூன்றாம் வகையினர், நிறைய இனிப்பு எடுப்பர். இனிப்பு எடுக்கும் அளவிற்கு மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என சமரசம் செய்துகொள்வர். இது முழுமையான இன்கன்ஸிஸ்டென்ஸி (total inconsistency).

இந்த உருவகத்தை அப்படியே அறநெறிக்குப் பொருத்திப் பார்ப்போம்:

முதல் வகையினர், எந்த வகையிலும் தவறு செய்ய மாட்டார்கள்.

இரண்டாம் வகையினர், எப்போதாவது ஏதாவது ஒரு தவறு செய்துவிட்டால், உடனடியாகக் கடவுளிடம் மன்னிப்பு வேண்டுவர்.

மூன்றாவது வகையினர், தாங்கள் தவறு செய்தால் அதற்கேற்ற நல்லது செய்தால் பிரச்சினையில்லை என நினைப்பர். அதாவது, நான் ஒருவரைக் கொலை செய்துவிட்டால், அந்தக் கொலைக்கு ஈடாக அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டால் போதும் என நினைப்பவர்கள். அல்லது, நான்தான் நிறைய நல்லது செய்கிறேனே. ஆகையால், தவறுகள் செய்தால் பரவாயில்லை. கடவுள் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார். நான் கள்ளக்கணக்கு எழுதி ஒரு லட்சம் எடுத்துக்கொள்கிறேன் என்றால், ஐம்பதாயிரத்திற்கு நான் நல்லது செய்துவிட்டேன், அல்லது கோவிலுக்குக் கொடுத்துவிட்டேன் என்றால், கடவுள் என்னைத் தண்டிக்க மாட்டார் என நினைப்பர்.

முதல் ஏற்பாட்டில், இறைவாக்கினர் ஓசேயா காலத்தில் இஸ்ரயேல் மக்கள் முதல் நிலையிலிருந்து, இரண்டாம், மற்றும் மூன்றாம் நிலை எனக் கடந்து வாழ்ந்தனர். இவர்கள் தங்களுடைய உடன்படிக்கை பிரமாணிக்கத்தில் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான், மணமகன்-மணமகள் உருவகத்தைப் பயன்படுத்தும் ஆண்டவர், இஸ்ரயேல், தன்னுடைய பிரமாணிக்கத்தை மறந்து, வேற்று தெய்வங்களுக்குப் பின் சென்று வேசித்தனம் செய்தது என்று சாடுகின்றார்.

இஸ்ரயேல் எவ்வளவுக்கு மிகுதியாகக் கனி கொடுத்ததோ அந்த அளவுக்கு பாவம் செய்கிறது.

ஆண்டவரும், 'இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள்' என்று அவர்களைச் சாடுகின்றார்.

சர்க்கரையும் வேண்டும், மாத்திரையும் வேண்டும் என நினைப்பது இருமனம்.

தவறும் வேண்டும், நன்மை செய்யவும் வேண்டும் என நினைப்பது இருமனம்.

கனி தரவும் செய்வேன், பாவமும் செய்வேன் என நினைப்பது இருமனம்.

இருமனம் கொண்டிருப்பது இன்கன்ஸிஸ்டென்ஸி.


2 comments:

  1. “ஒரு நிலை”...இதன் ஆங்கில வார்த்தை “consistency”. இதற்குத் தந்தை தரும் மூன்று வகையான consistency யில் அந்த முதல்வகையில் கண்டிப்பாக நான்இருக்க முடியாது.ஏனெனில் நான் ஆதாமின் மகள்.மூன்றாம் வகையில் சேருமளவிற்கு மனத்தைரியமும் கிடையாது.அப்படியெனில் நான் இரண்டாம் வகையைச்சேர்ந்தவளா?”consistency with guilt“..... guilt அல்லது குற்ற உணர்வு வந்துவிட்டாலே நாம் ஆசாபாசத்துக்குட்பட்டவர் என்பதும்,குற்றம் செய்தபின் வருந்திப்பின் மீண்டும் மீண்டும் குற்றம்புரிந்து...திருந்தி இப்படியாக வாழ்க்கையை ஓட்டுபவர். மந்தையில் முக்கால் வாசிப்பேர் இந்த வகுப்பைத்தான் சார்ந்தவராயிருப்போம்.இதை நான் நியாயப்படுத்தவில்லை.ஆனால் விழுவதும் பின் எழுவதும் தானே மனித சுபாவம்.விழுந்தபின் எழ முயற்சிசெய்யாமலிருப்பதுதான் தவறு.மனித இயல்போடு இருப்பது inconsistency எனில் பரவாயில்லை...அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.ஆயினும் தந்தை தரும் விழிப்புணர்வை ஏற்றுக்கொள்கிறேன்.நன்றிகள்!!!

    ReplyDelete
  2. ( contd) பின்னூட்டத்தை வாசித்துப் பார்த்ததில் ஏதோ சரியில்லை போல் உணர்ந்தேன்.எனவே தொடர்கிறேன்...நான் மேலே குறிப்பிட்டுள்ள என் உணர்வுகள் acceptable ஆக இருக்கலாம்; ஆனால் idealஆ என்றால் ‘ இல்லை’ என்றே தோன்றுகிறது. எத்தனை கடினமாயிருப்பினும் நாம் இருக்குமிடத்திலிருந்து ‘இருக்கவேண்டிய’ இடத்திற்கு முன்னேறிச்செல்ல முயல்வதே மனித மாண்பு. தந்தை குறிப்பிட்டுள்ள இரண்டாம் இல்லை மூன்றாம் வகையில் நாமிருப்பினும் நம் பலவீனம் அனைத்தையும் ஓரங்கட்டி ‘அந்த’ முதல் வகைக்கு முன்னேறிச் செல்ல முயல்வதே சால்பு.இறைவன் நம் முயற்சியையும்,எண்ணங்களையும் ஆசீர்வதிப்பாராக! அன்புடன்....

    ReplyDelete