Wednesday, July 15, 2020

காற்றைப் பெற்றெடுத்தல்

இன்றைய (16 ஜூலை 2020) முதல் வாசகம் (எசா 26)

காற்றைப் பெற்றெடுத்தல்

வாழ்க்கை சில நேரங்களில், வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் சில நேரங்களில் நண்டு சாப்பிடுவதுபோல ஆகிவிடும். அது என்ன நண்டு சாப்பிடுவது? நண்டு சாப்பிடுவதில், நம் முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. நாம் அதை நம் சட்டையில் பட்டுவிடாமல் மெதுவாக அழுத்தி உடைத்தாலும், அல்லது முள்கரண்டி அல்லது கத்தியை வைத்து குத்தி இழுத்தாலும், அதன் கால்களை, மெதுவாக, கால்களுக்கும் வலிக்காமல், நம் நாக்கையும் குத்திவிடாமல் இழுத்தாலும், எஞ்சுவது என்னவோ விரல்களுக்கு இடையே சிக்கும் சில சதைப் பகுதிதான். நாம் அதற்குக் கொடுக்கும் நேரம், ஆற்றல், முயற்சிக்கு ஏற்ற 'அவுட்புட்' கிடைப்பதில்லை.

நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள், தாங்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான முயற்சி அனைத்தும் 'நண்டு சாப்பிடுவதுபோல' ஆகிவிட்டது என்பதை, வேறு வார்த்தைகளில் புலம்புவதாக இறைவாக்கினர் எசாயா பதிவு செய்கின்றார்:

'பேறுகாலம் நெருங்குககையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே நாங்களும் உம் முன்னிலையில் நிற்கின்றோம். நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம். ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்!'

இன்று நாம் வைத்திருக்கும் ஸ்கேன் வசதிகள் அன்று கிடையாது. பெண்களின் வயிறு பெரிதாக இருந்தால், அவர் கருவுற்றிருப்பதாக எண்ணினர். பேறுகால வலி அவருக்கு வந்துவிட்டது என்று காத்திருந்து, கடைசியில் அது வயிற்றில் உள்ள 'கேஸ்' என்ற நிலை அறியப்பட்டது. இதற்கு மருத்துவத்தில், 'எம்னெயுமாடோஸிஸ் இன்டெஸ்டினினாலிஸ்' (empneumatosis intestinalis) என்பது பொருள்.

இந்த ஒரு மருத்துவ நிலையை மிக அழகாக இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைக்குப் பொருத்துகிறார் எசாயா.

வயிறு பெரிதாக இருப்பது, வலி எடுப்பது, வலியால் துடிப்பது என அனைத்தும் உண்மை. ஆனால், குழந்தைக்குப் பதில் வயிற்றில் இருப்பது காற்று.

இஸ்ரயேல் மக்கள் இறைவனை நோக்கிக் கதறி அழுவது, தங்கள் துன்பங்களால் வருந்தி வாடுவது அனைத்தும் உண்மை. ஆனால், அவற்றால் ஒரு பயனும் இல்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் பழைய வாழ்வைவிட்டுத் திரும்பவில்லை.

நம் முயற்சிகள் இப்படி இருந்தால் எவ்வளவு பரிதாபத்துற்குரியவர்கள் நாம்!

ஆனால், பல நேரங்களில் நாம் தேவையற்ற துன்பங்கள் ஏற்கிறோம், வலிகளைச் சுமக்கிறோம். அவற்றால் ஒரு பயனும் இல்லை என்றாலும் அவற்றுக்காகக் துன்புறுகிறோம். நமக்கு நாமே வலிகளைக் கொடுத்து இன்புறுகிறோம்.

இப்படிப்பட்ட சூழலில் நம்மை எதிர்கொள்கின்ற இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 11:28-30), 'என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது' என ஆறுதல் கூறுகின்றார்.

வலிக்கு ஏற்ற பலன் இருந்தால் நலம்.

வலி மட்டுமே மிஞ்சினால் வாழ்வு ஏமாற்றமே.

2 comments:

  1. பல நேரங்களில் தேவையற்ற வலிகளை நாம் சுமப்பது எத்தனை நிஜமோ,அத்தனை நிஜம் சில நேரங்களில் அந்த வலிகள் தரும் சுகமும்.நம் பழைய வாழ்க்கையை விட்டுத் திரும்பாத வரையில் நம் துன்பமும்,அழுகையும்,வலியுமே விழலுக்கிறைத்த நீர் என்கிறார் தந்தை.ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான பொழுதுகளிலும் அவருடைய ‘அழுத்தாத நுகத்தையும்,எளிதான சுமையையும்’ நமக்குத்தர ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே நமக்கு ஆறுதல்.பல சமயங்களில் நம் முயற்சிக்கேற்ற பலன் நமக்குக்கிடைப்பதில்லை என்பதைப் புரியவைக்க நண்டு சாப்பிடுவதைத் தந்தை உதாரணமாக்க் காட்டியிருப்பது அவரது presence of mindக்கு ஒரு எடுத்துக்காட்டு.நண்டும் சுவையாகவே இருந்தது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete