Tuesday, June 30, 2020

கடலில் விழுந்த பன்றிகள்

இன்றைய (1 ஜூலை 2020) நற்செய்தி (மத் 8:28-34)

கடலில் விழுந்த பன்றிகள்

நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ 'வழக்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள்' வாழவே விரும்புகிறோம்.

சில வாரங்களுக்கு முன்பாக நான் எங்களுடைய நிறுவனம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு மாலையில் தேநீர் பருக எல்லாரும் வந்திருந்தார்கள். நான் 'குட் ஈவ்னிங் ஃபாதர்ஸ்' என்றேன். ஆனால், யாரும் பதில் ஒன்றும் கூறவில்லை. 'ஏன்?' என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்த இல்லத்தின் தலைவர் என்னிடம் சொன்னார்: 'நாங்கள் மாலையில் டீ குடிக்கும்போது குட் ஈவ்னிங் சொல்ல மாட்டோம். இரவு உணவருந்தும் முன்தான் சொல்வோம்.'

வழக்கத்திற்கு மாறாக குட் ஈவ்னிங் கூட சில நேரங்களில் கிடையாது.

அன்று இரவு இன்னொரு ஆச்சர்யம் இருந்தது.

உணவருந்திவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அன்றைய செய்தித்தாளைச் சேகரித்து பெட்டியில் போட வாட்ச்மேன் வந்தார். வந்தவர் புலம்பிக்கொண்டே வந்தார். 'என்ன அண்ணன்? என்ன ஆச்சு?' எனக் கேட்டேன். 'இல்ல ஃபாதர்! வழக்கமா மாலை முரசுதான் வரும். இன்னைக்கு மாலை மலர் வந்திருக்கு! யாரும் ஒன்னும் கேக்கல! ஏன் இப்படி மாத்தி போட்டாங்கன்னு தெரியல!' என்று புலம்பிக் கொண்டே சொன்றார்.

வழக்கங்கள்தாம் நிறுவனத்தின் முதுகெலும்பைப் பிடித்து நிற்க வைக்கும் தசை நார்கள். வழக்கங்கள் மாறிவிட்டால் நிறுவனம் அசைந்துவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 5:14-15,21-24) இஸ்ரயேல் மக்கள், 'வழிபாடு' என்னும் வழக்கத்தில் தங்களுடைய பாதுகாப்பு தேடுவதை ஆமோஸ் வழியாக ஆண்டவராகிய இறைவன் கண்டிக்கின்றார். மக்களிடையே நீதியை நிலைநாட்டுவதை விட, எரிபலிகள், தானியப் படையல்கள் செலுத்தும், வீணைகள் இசைத்துப் பாடல் பாடுவது எளிது என்றும், அதுவே தங்களது வழக்கம் என நினைத்தனர் இஸ்ரயேல் மக்கள்.

ஆம்! வழக்கங்கள் எளிதானவை! வழக்கங்கள் ஆபத்தற்றவை! வழக்கங்கள் பாதுகாப்பானவை!

ஆனால், இருவர் அநீதியாக அடித்துக்கொல்லப்பட, நாம் அவர்களுக்கு ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி நிறைவேற்றிவிட்டு அமைதி கண்டால் அந்த வழக்கம் ஆபத்தானது. இஸ்ரயேலில் இதுதான் நடந்தது. மக்கள் ஒருவர் மற்றவரை அநீதியாக நடத்திவிட்டு, ஆலயத்தில் நல்லுறவுப் பலிகள் செலுத்தி தங்கள் மனச்சான்றை ஆற்றுப்படுத்திக்கொண்டனர். இவர்களைக் கண்டிக்கிற ஆமோஸ், 'நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாய்ப் பாய்ந்து வருக!' என்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 8:28-34), பேய்பிடித்த இருவர் கல்லறைகளில் அலைந்து திருகின்றனர். இன்னொரு பக்கம் பன்றிகள் கூட்டமாய் பேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆக, பேய்பிடித்தவர்கள் கல்லறைகளில் உலவுவதும், பன்றிகள் அதனருகே கூட்டமாய் மேய்வதும்தான் வழக்கம். ஆனால், இயேசு அந்த வழக்கத்தை உடைக்கின்றார். பேய்களை பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பி, அவர்களுக்கு நலம் தருகின்றார். இயேசு இந்த வழக்கத்தை உடைத்ததால் கதரேனர் அச்சம் கொள்கின்றனர். இயேசுவை எதிர்கொண்டு வந்து, தங்கள் பகுதியை விட்டு அவர் அகலுமாறு அவர்கள் வேண்டுகிறார்கள்.

வழக்கத்தை மீறுபவர்களுக்கு எந்நகரிலும் இடமில்லை என்பது இங்கே தெளிவாகிறது.

வழக்கத்தை மீறுபவர் கடவுளே ஆனாலும் அவருக்கு நகரில் இடமில்லை. இதுதான் இன்றைய நற்செய்தியின் நிகழ்வாக இருக்கிறது.

ஆனால், வழக்கங்கள் மீறப்படவில்லை என்றால் சமூகம் வளராது.

இந்திய மண்ணில் இன்னும் மனுஸ்ம்ருதி வழக்கமே இருந்தது என்றால், நீங்களும் நானும் இன்று நம் 'குலத்திற்கு' உரிய தொழில்களைச் செய்துகொண்டிருந்திருப்போம். என் கையில் மடிக்கணிணியும் உங்கள் கையில் செயல்திறன் பேசியும் இருந்திருக்காது. நம் பெண்கள் மேல்சட்டை அணியாமல் இருந்திருப்பர். நம் கழுத்தில் எச்சில் உமிழ்வதற்கு ஒரு கூடை கட்டப்பட்டிருக்கும். நாம் செருப்பணிய முடியாது.

வழக்கங்கள் மீறப்படுதல் நலம்.

நம்மைப் பிடித்திருக்கும் வழக்கம் என்னும் பேய், பன்றிக்கூட்டங்களுக்குள் புகுந்து அவை கடலில் வீழ்ந்தால் நலம்!

4 comments:

  1. 👍👌
    "Be the difference"

    I am for it 🤝

    Let us try our best for it.

    Thank you for your outstanding thought.

    ReplyDelete
  2. வழக்கங்கள்...வழி வழியாக வந்தவையே யாயினும் சமயத்தில் மீறப்படுகையில் விளையும் நன்மைகள் குறித்துப் பதிவிடுகிறார் தந்தை. காரணங்கள் காட்டித்தன் கூற்றில் உள்ள நியாயத்தையும் வெளிப்படுத்துகிறார்.
    நம்மைப் பிடித்திருக்கும் வழக்கம் எனும் பேய், பன்றிக்கூட்டங்களுக்குள் புகுந்து அவை கடலில் விழுந்தால் எத்தனை நலம்! (ஆனாலும் இயேசு அந்தப்பேய்களைப்பன்றிகளுக்குள் அனுப்பியிருக்க வேண்டாமென பலமுறை நான் நினைத்த துண்டு.)
    புரிந்த பல விஷயங்களேயாயினும் அவற்றில் மறைந்துள்ள காரணகாரியங்களின் புரிதலை....தேடுதலை மெய்ப்பிக்கும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    நீதி வெள்ளமெனப் பொங்கிவரவும்,நேர்மை வற்றாத ஆறாய்ப் பாய்ந்து வரவும் இன்றும் பல ஆமோஸ்கள் எழுந்து வரட்டும்!

    ReplyDelete