Tuesday, July 21, 2020

மரியாவும் ரபூனியும்

இன்றைய (22 ஜூலை 2020) திருநாள்

மரியாவும் ரபூனியும்

'இயேசுவின் இனியவள்' என்று ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்திகள் நமக்குச் சொல்கின்ற, அல்லது நற்செய்தி நூல்கள் சொல்வதுபோல, 'இயேசுவை இனியவன்' என்று ஏற்றுக்கொண்ட மகதலா நாட்டு மரியாளின் திருநாளை இன்று கொண்டாடுகிறோம்.

'மரியா! என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே! உன் கைகளுக்கு சேனிட்டைஸர் போட்டாயா?' என்று இயேசு, மகதலா நாட்டு மரியாவிடம் சொல்வதாக டுவிட்டரில் வெளியான மீம் என்றை என் நண்பர் எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தார்.

மகதலா மரியா இன்று நமக்குச் சொல்லும் பாடம் ... 'மூளையிலிருந்து அல்ல, இதயத்திலிருந்து வாழ்வது!' ('Living, not from the mind, but from the heart!')

'அறிவுக்குத் தெரியாத காரணம் ஒன்று இதயத்திற்குத் தெரியும்' என்று மெய்யியலில் சொலவடை ஒன்று உண்டு.

மகதலா நாட்டு இளவல் இதயத்திலிருந்து வாழ்ந்தாள். எப்படி?

1. இருப்பதை இனியவருக்காக வீணாக்குவது!

இயேசு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, 'அந்த மாதிரியான' பெண், மகதலா நாட்டு மரியாள் என்று இன்று ஏறக்குறைய அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். வருகிறாள். இயேசுவைக் காண்கிறாள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த நறுமணச் சிமிழை உடைக்கிறாள். இயேசுவின் காலடிகளில் ஊற்றுகிறாள். அர்ஜூனனுக்குப் புறாவின் கண் மட்டுமே தெரிந்ததுபோல, இவளுக்கு அந்தக் கூட்டத்தில் இயேசு மட்டுமே தெரிந்தார். இயேசுவை விருந்திற்கு அழைத்திருந்த பரிசேயர், சொட்டுச் சொட்டாய் அளந்து திராட்சை இரசத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, இவள் சிமிழைத் திறக்கக்கூட நேரம் இல்லாதவளாய், அப்படியே பாட்டிலை உடைத்து ஊற்றுகிறாள். அதன் மதிப்பு ஏறக்குறைய 300 தெனாரியம் என்கிறார் அங்கிருந்த யூதாசு செட்டியார். ஒரு தெனாரியம் என்பது ஒருநாள் கூலி. ஏறக்குறைய ஓராண்டின் கூலியை ஒரு தெருப்போதகரின் காலில் கொட்டித் தீர்க்கிறாள் மரியாள். இயேசுவின் முன், தன் இனியவனின் முன் அதன் மதிப்பு ஒன்றுமில்லை என்றுணர்ந்தாள் அவள். 'பரவாயில்லையே! அவரைப் பார்க்க முடிந்ததே! அவருடைய காலடிகளைத் தொட முடிந்ததே!' என்று தன்னைப் பாக்கியவதியாகக் கருதிய அவள், தன் பாவத்தையெல்லாம் நறுமணத் தைலத்தால் கழுவிக்கொள்கிறாள். மூளையிலிருந்து வாழ்ந்த யூதாசு கணக்குப் பார்க்கிறார். மூளையிலிருந்து வாழ்ந்த விருந்தினர்கள், 'என்ன மடமை!' எனக் கடிந்துகொள்கின்றனர். ஆனால், இதயத்திலிருந்து வாழ்ந்த அவள், அல்லது இதயத்திலிருந்து அவள் வாழ்ந்ததால் இயேசுவுக்காக, விலைமதிப்பெனத் தான் கருதியதை வீணாக்குகிறாள்.

2. இருள்நீங்குமுன்பே கல்லறைக்கு

வாரத்தின் முதல் நாள். இன்றைய ஞாயிற்றுக்கிழமை போல. லாக்டவுன் நேரம். கையில் இ-பாஸ் இருந்ததா என்று தெரியவில்லை. மாஸ்க் அணிந்திருந்தாளா என்ற குறிப்பு இல்லை. விடியுமுன், இருளாயிருக்கும்போதே கல்லறை நோக்கிப் புறப்படுகின்றாள். அதாவது, அவள் விடிய, விடியத் தூங்கவே இல்லை. இதயம் வெறுமையாய் வந்த அவள், கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டு வியந்து போகிறாள். 'நான் தூக்கிக் கொண்டு போக வேண்டும் என வந்தேன்! வேறு யாரோ முந்திக் கொண்டார்களே!' என்ற வியப்பும், 'ச்சே! இன்னும் கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாமே!' என்ற கோபமும் சேர்ந்து எழுகிறது. இதயத்திலிருந்து வாழ்பவர்கள் நேரத்தையும், இடத்தையும் கடந்துவிடுகிறார்கள். அவர்கள் நிரந்தரத்தில் வாழ்வதால், விடியலும் இருளும் அவர்களுக்கு ஒன்றுதான்.

3. கண்ணீர்த் துளி

பொல பொலவென்று கண்ணீர் வடிக்கின்றாள் மகதலா மரியாள். வெண்ணாடை அணிந்த வானதூதர்கள், 'அம்மா, ஏன் அழுகிறீர்?' எனக் கேட்கின்றனர். 'தோட்டக்காரர்', 'ஏனம்மா அழுகிறாய்?' எனக் கேட்கின்றார். துன்பம் என்னும் வெட்பம் அதிகம் ஆன்மாவைத் தாக்க, ஆன்மா உடனடியாக வியர்ப்பதுதான் கண்ணீர். மூளையிலிருந்து வாழ்பவர்கள் எளிதில் கண்ணீர் வடிப்பதில்லை. அவர்கள் கண்ணீர்த்துளிகளையும் கணக்குப் பார்த்தே வெளியேற்றுவார்கள். ஆனால், இதயத்திலிருந்து வாழ்பவர்கள் அழுதுவிடுவார்கள். ஏனெனில், அழுகையை அடக்கவோ, அல்லது மறைக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில், அடுத்தவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற அக்கறை அவருக்கு இல்லை.

4. 'என் ஆண்டவரை'

'என் ஆண்டவர்' என இயேசுவைக் குறிப்பிடுகின்றாள். இயேசுவின் சமகாலத்தில், மனைவி தன்னுடைய கணவனை அப்படித்தான் அழைப்பாள். வானதூதர்கள்முன் தன் மனத்தை இப்படித் திறக்கின்ற அவள், இயேசுவின் சீடர்களிடம், 'ஆண்டவர்' எனக் குறிப்பிடுகின்றாள். உணர்ச்சிவசப்பட்டவளாக இருந்தாலும், தான் சொல்வதையும், செய்வதையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றாள் இளவல்.

5. 'அவரை எடுத்துச் செல்வேன்'

தோட்டக்காரரிடம், 'ஐயா! நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்!' என்கிறாள் மரியாள். 'அவருடைய இறந்த உடலை எடுத்துச் சென்று என்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று சொன்னாளா? அல்லது 'இயேசு உயிர்த்துவிட்டார்' என்ற நம்பிக்கையில் அப்படிச் சொன்னாளா எனத் தெரியவில்லை. 'இறந்த உடலை வைத்து என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்கும் மூளை. ஆனால், 'இறந்த உடல் என்றாலும் பரவாயில்லை. அவர் என்னுடன் இருக்கட்டும்!' என்று சொல்லும் இதயம். அவள் இதயம் சொல்வதன்படியே நடக்கிறாள்.

6. 'மரியா' 'ரபூனி'

வரி வரியாகப் பேசியபோது, இயேசுவைக் கண்டறிய முடியாத மரியாள், 'மரியா' என்ற ஒற்றைச் சொல்லை இயேசு உதிர்த்தவுடன், அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். மற்றவர்கள் அவரை வேறு பெயர் கொண்டு அழைத்தார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை மற்றவர்கள் அவளுடைய தொழிலை வைத்து, பின்புலத்தை வைத்துப் பட்டப் பெயர்கள் சொல்லி அழைத்திருக்கலாம். அவளுடைய பெயர் என்ற அடையாளத்தை அவளுக்குக் கொடுக்கின்றார் இயேசு. மரியாளும் உடனடியாக, 'ரபூனி!' என்கிறார். 'ரபி' என்ற வார்த்தையை 'ரபூனி' என அழைக்கிறாள். 'போதகர்' என்ற வார்த்தையை, 'போதகர் செல்லம்!' 'போதகர்மா!' 'போதுகுட்டி!' என அழைக்கிறாள். அங்கே அருகிலிருந்த வானதூதர்களும் இப்போது அவளுக்கு மறந்து போயிற்று. இயேசு மட்டுமே தெரிகிறார் அவள் கண்களுக்கு. மூளையிலிருந்து வாழ்பவர்கள் சுற்றுமுற்றும் பார்ப்பார்கள். இதயத்திலிருந்து வாழ்பவர்கள் நேருக்கு நேர் மட்டுமே பார்க்கின்றனர்.

நிற்க.

இன்று நாம் எந்த வாழ்க்கை நிலையில் இருந்தாலும் - அருள்நிலை, பொதுநிலை, திருமணம் முடித்தவர்கள், மணத்துறவு ஏற்றவர்கள் - சில ஆண்டுகள் நாம் மூளையிலிருந்து வாழ்கிறோம். நம்மை நாமே அடுத்தவர்களுக்கு நிரூபிக்க விரும்பிறோம். அடுத்தவர்களோடு போட்டி போடுகிறோம். ஒப்பீடு செய்து பொறாமை கொள்கிறோம். ஆனால், மூளையிலிருந்து வாழத் தொடங்கும்போது, நாம் ஒப்பீடுகளையும், பொறாமையையும், நிரூபித்தல்களையும் கடக்கின்றோம்.

மூளையை அணைத்துவிட்டு, இதயத்தைத் தட்டி எழுப்பினால் அது செயலாற்றும்.

இதயம் விழித்திருப்பவர்கள் இனியவரை இரவிலும் கண்டுகொள்வர், இன்றைய முதல் வாசகம் (காண். இபா 3:1-4) சொல்வதுபோல.


1 comment:

  1. சிறிது காலத்திற்கு முன் வரை “ ஒரு மாதிரியானவள்” எனப்பார்க்கப்பட்ட “மகதலா மரியாவை” அண்மைகாலங்களில் உயரத்திற்குக் கொண்டு போயிருக்கின்றன தந்தை போன்றவர்களின் அவரைப் பற்றிய குறிப்புக்கள். இன்றைய பதிவும் அப்படித்தான்.இதயத்தை மூலப்பொருளாக வைத்து வாழ்ந்தவர்களுக்கு எடுத்துக்காட்டு அவள்.அவள் இயேசுவின் நிமித்தம் செலவழித்த நறுதணத்தைலபாட்டிலின் விலையை விலைமதிப்பற்ற விஷயமெனக் கருதியதும்,நிரந்தரத்தில் வாழ்ந்த அவளுக்கு விடியலும்,இரவும் கூட ஒன்றுதான் என்பதும்,ஆண்டவரைக்காணவில்லை என்றவுடன் சுற்றுப்புறம் மறந்து தன் இதயத்தின் கண்ணீரைத் தாரை தாரையாக வடித்ததும், இறந்த உடலெனினும் அது ‘தன்னவர்’ உடலென்பதால் தன்னோடே வைத்துக்கொள்ள அவா கொண்டதும், இறுதியாக அவளுடைய ‘ரபூனி’ அவளைப்பார்த்து ‘ மரியா!’ என விளித்தவுடன் அப்பப்பா..... நேருக்கு நேர் பார்த்துப் பூரித்துப் போனதும்......அத்தனையுமே அவள் தன் ‘இதயத்தின் வழியே’ உலகைப்பார்த்தாள் என்பதற்குச் சான்றுகள்

    இன்றும் கூட ‘அவள் ஒரு மாதிரி!’ என எத்தனையோ உதாசீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.நம் மூளையை அணைத்துவிட்டு,இதயத்தைத் தட்டினால் மட்டுமே நமக்குத்தெரியாத.....புரியாத அவர்களது “ இனியவர்” அங்கே உறைவதை அறிய முடியும்.

    இதயம் விழித்திருப்பவர்கள் இனியவரை இரவிலும் கண்டுகொள்வர்! ....கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டியதொரு பதிவு! ‘ இனியவர்’ தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றியும்! ஏனெனில் ‘ இந்தப் பதிவு’ வருவது மூளையிலிருந்தல்ல.....இதயத்திலிருந்து!



    ReplyDelete