Monday, July 20, 2020

அவருடன் பேச வேண்டும்

இன்றைய (21 ஜூலை 2020) நற்செய்தி (மத் 12:46-50)

அவருடன் பேச வேண்டும்

'இயேசு மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருந்த போது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தனர்.'

அவருடன் பேச வேண்டும் என்றா?

அவருடன் அவர்கள் பேசியது இங்கே பதிவுசெய்யப்படவில்லை.

அவர்கள் பேச வேண்டியது என்ன? பேச நினைத்தது என்ன?

'நீ வீட்டிற்கு வா!' என இயேசுவை அழைக்கவா?

'கொஞ்சம் கவனமாய் இரு!' என அவரை எச்சரிக்கவா?

'நீ நல்லா சொல்ற! செய்ற! தொடர்ந்து செய்!' என அவரை வாழ்த்தவா?

'உன் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை!' என தகவல் சொல்லவா?

'உனக்கு மதிமயங்கிவிட்டது எனக் கேள்வியுற்றோம்!' என்னும் தகவலை உறுதிப்படுத்தவா?

'உன்னோடு நாங்களும் வரட்டுமா?' என அனுமதி கேட்கவா?

'உன் துணிகளைத் துவைத்துக் கொடுக்கவா?'  'உன் காலணிகளைத் தைத்துக் கொடுக்கவா?' என்று அவர்மேல் அக்கறை காட்டவா?

'இதோ! உனக்குப் பிடித்த உணவு. இதைச் சாப்பிடுவாயா?' என்று அவரின் விருப்பம் நிறைவேற்றவா?

'உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. பெண் பார்க்கட்டுமா?' என திருமணம் பற்றிப் பேசவா?

பாவம்!

அவர்கள் பேச வேண்டும் என வந்தார்கள்.

அவர்களைப் பேச விடாமல், இறுதிவரை அவரே பேசிவிட்டார்.

'என் தந்தையின் திருவுளம் நிறைவேற்றுபவர்களே என் சகோதரரும், சகோதரியும், தாயும் என்கிறார்.'

அவர்களைப் பேச விடாமல் செய்ய, அவர் இப்படிப் பேசினாரா?

அல்லது, அவர் இதைப் பேசி முடித்தபின், அவர்களிடம் அவர் பேசினாரா?

தெரியவில்லை.

பல நேரங்களில், நாம் பேச வேண்டும் எனக் கடவுளிடம் செல்ல,

அவரே, முன்னும் பின்னும் முரணானதை, நமக்குப் புரியாததைப் பேசி, அவரே நம்மை அனுப்பிவிடுகிறார்.

'நாம் பேச வேண்டும்' என நினைத்து, நமக்குள் நாமே வைத்துக்கொண்ட வார்த்தைகள் ஏராளம்!

அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாள், தான் பேச வந்ததையும் மனத்தில் வைத்துக்கொண்டே தன் இல்லம் சென்றிருப்பார்.


1 comment:

  1. பல நேரங்களில், நாம் பேசவேண்டும் எனக்கடவுளிடம் செல்ல
    அவரே முன்னும் பின்னும் முரணானதை, நமக்குப்புரியாததைப்பேசி,அவரே நம்மை அனுப்பி விடுகிறார்.
    ‘ நாம் பேச வேணடும்’ என நினைத்து,நமக்குள் நாமே வைத்துக்கொண்ட வார்த்தைகள் ஏராளம்!
    அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாள்,தான் பேச வந்ததையும் மனத்தில் வைத்துக்கொண்டே தன் இல்லம் சென்றிருப்பார்.

    ஒவ்வொரு முறை இயேசுவிடம் பேசி...பேச விரும்பி இல்லம் திரும்பும் நான் எதை சிந்திக்கிறேன்?

    அழகான கவிதை தந்த தந்தைக்கு நன்றியும்! வாழ்த்தும்!

    ReplyDelete