Thursday, July 2, 2020

திதிம் என்னும் தோமா

இன்றைய (3 ஜூலை 2020) திருநாள்

திதிம் என்னும் தோமா

இன்று நம் தாய்த்திருநாட்டின் திருத்தூதர் என்றழைக்கப்படுகின்ற புனித தோமாவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். நான் புனே குருமடத்தில் பயின்றபோது, மலையாள சகோதரர்கள் இன்றைய நாளை தங்களுடைய திருஅவையை உருவாக்கியவர் (சீரோ மலபார் மற்றும் மலங்கரா ரீதிகள்) தோமா என்றும், அவராலேயே தாங்கள் இன்று கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று சொல்லிப் பெருமைப்படுவதுண்டு. 'எங்க ஊருக்கு தோமா வந்தார்' என்று அவர்கள் சொல்லும்போதெல்லாம், 'எங்க ஊரில்தான் (மயிலையில்) நாங்கள் அவரைக் கொன்றோம்' என்று தமிழ் மாணவர்கள் சொல்வதுண்டு.

தோமா என்னும் கதைமாந்தரை நாம் யோவான் நற்செய்தியிலும், மற்றும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி என்று சொல்லப்படுகின்ற, 'தோமையாரின் நற்செய்தியிலும்' பார்க்கின்றோம். இவர் நமக்குச் சொல்கின்ற வாழ்க்கைப் பாடங்களை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. பெயர்

யோவான் நற்செய்தி இவரை திதிம் என்னும் தோமா என்றும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி இவரை திதிம் யூதாசு தோமா என்றும் அழைக்கின்றது. 'திதிம்' (இரட்டை) என்ற சொல்லைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இவர் இரட்டையர்களில் ஒருவர் என்று அதிகமாகச் சொல்லப்படுவதுண்டு. நான், 'திதிம்' என்பதை இரு நிலைகளில் புரிந்துகொள்கிறேன்: (அ) 'திதிம்' என்பது தோமாவிடமிருந்த இரட்டிப்புத்தன்மையைக் குறிக்கிறது. இவர் தன்னிலேயே பிளவுண்ட மனிதர். இயேசு யூதேயாவுக்குச் செல்ல விரும்பும்போது, அவரோடு சென்று இறக்க விரும்புகிறார் (காண். யோவா 11:16). ஆனால், உயிர்த்த ஆண்டவர் மற்ற சீடர்களுக்குத் தோன்றியபோது, 'நான் நம்பமாட்டேன்' (காண். யோவா 20:25) என அவநம்பிக்கை கொள்கின்றார். ஒரே நேரத்தில் துணிவும் அவநம்பிக்கையும் கொண்டவர் இவர். (ஆ) இவருடைய நற்செய்தியில், 'இயேசுவும் நாமும் - எல்லா மனிதர்களும் - இரட்டையர்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இயேசுவைப் பற்றிய புதிய புரிதலையும், நம்மைப் பற்றிய புதிய புரிதலையும் தருகின்றது. இயேசு நம்மைப் போன்றவர். நாம் அனைவரும் இயேசு போன்றவர்கள். இன்னும் அதை நாம் உணராமல் இருக்கிறோம். அதுதான் பிரச்சினை.

2. கேள்வி கேட்பது நல்லது

யோவான் மற்றும் தோமா நற்செய்தி நூல்களில், தோமா கேள்வி கேட்கும் நபராக இருக்கின்றார். 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?' (காண். யோவா 14:5) என்று யோவானிலும், மற்றும் இறையாட்சி பற்றிய நிறைய கேள்விகளைத் தோமாவிலும் கேட்கின்றார். நம் வாழ்வில் எழும் கேள்விகளை இயேசுவிடம் - கடவுளிடம் - எழுப்புவது நலம் எனக் கருதுகிறேன்.

3. குழுமம் இன்றியமையாதது

உயிர்த்த இயேசு வந்தபோது தோமா அவர்களோடு இல்லை (காண். யோவா 20:24). குழுமம் இயேசுவின் சீடர்களுக்கு மிக முக்கியமானது. இந்தக் குழுமம் ஒருவர் மற்றவர்முன் இயேசுவைப் பற்றிச் சான்றுபகரும் இயங்குதளமாக அமைகின்றது.

4. இயேசுவே கடவுள்

'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' (காண். யோவா 20:28) என்று யோவானில் அறிக்கையிடுகிறார் தோமா. தோமா நற்செய்தியில் இயேசுவே தன்னைக் கடவுளாக அவருக்கு வெளிப்படுத்துகின்றார்.

5. காணாமல் நம்புதல்

நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக, அதுவும் காணாமலே நம்புவதற்கான பாடமாக நம்முன் என்றும் நிற்பவர் தோமா.

6. வழிப்போக்கனாய் இரு

தோமா நற்செய்தி (வசனம். 42) இயேசு சொல்லும் இந்தக் குறுகிய வசனத்தைக் கொண்டுள்ளது: 'வழிப்போக்கனாய் இரு!' அதாவது, எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் சுமக்காமல், எதன்மேலும் இலயிக்காமல், நீ தொடங்கிய புள்ளியையும், அடைய வேண்டிய புள்ளியையும் மனத்தில் வைத்து நடந்துகொண்டே இரு. அதிக சுமை தூக்கும் வழிபோக்கனும், அதிகமாய்க் கவனம் சிதறும் வழிப்போக்கனும் இலக்கை அடைவதில்லை.

சற்றே வித்தியாசமான ஒரு விடயமும் தோமா நற்செய்தியில் (வ. 16, 6) இருக்கிறது:

'நீங்கள் நோன்பிருந்தால் பாவம் செய்வீர்கள்.
செபித்தால் தீர்ப்புக்கு உள்ளாவீர்கள்.
தர்மம் செய்தால் உங்கள் ஆன்மாவுக்குத் தீங்கிழைப்பீர்கள்.
... ...
ஆனால், பொய் சொல்லாதீர்கள். நீங்கள் வெறுக்கும் ஒன்றை நீங்களே செய்யாதீர்கள்.
ஏனெனில், எல்லாம் உண்மையை நோக்கியே இருக்கிறது.'

தோமாவும் அவருடைய நற்செய்தியும் மறைபொருளே.

புரிவது போலவும், புரியாததுபோலவும் இருக்கும் அவரும், அவருடைய நற்செய்தியும், இன்றும் அவரை 'திதிம்' ('இரட்டை') என்றே அடையாளப்படுத்துகின்றன.

1 comment:

  1. தோமா...இவர் பெயரைத் தாங்கி நின்ற பேராலயத்தையொட்டிய விடுதியில் 5 வருடங்கள் தங்கிப்படித்த காரணத்தினாலேயே என் நெஞ்சுக்கு நெருக்கமாய்ப் போனவர். தந்தை அவரைப்பற்றிய பல புரிதல்களைத் தந்தாலும் இந்தப்பதிவில் என்னைக்கவர்ந்தது மட்டுமின்றி வாழ்வாக்கவும் நினைப்பது.... “ வழிப்போக்கனாய் இரு. எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் சுமக்காமல், எதிலும் இலயிக்காமல் தொடங்கிய புள்ளியையும்,அடையவேண்டிய புள்ளியையும் மனத்தில் வைத்துக் கொண்டே இரு.அதிக சுமை தூக்கும் வழிப்போக்கனும்,அதிகமாய் கவனம் சிதறும் வழிப்போக்கனும் இலக்கை அடைவதில்லை.” நாம் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் வரிகள். வாழ்ந்து பார்க்கலாமே! தந்தைக்கு நன்றியும்! திருநாள் வாழ்த்துக்களும்.!!!

    ReplyDelete