Sunday, June 21, 2020

துரும்பை எடுக்கட்டுமா?

இன்றைய (22 ஜூன் 2020) நற்செய்தி (மத் 7:1-5)

துரும்பை எடுக்கட்டுமா?

'கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் கல் எறியக்கூடாது' என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு.

அடுத்தவரின் குறையைச் சுட்டிக்காட்டுமுன் ஒருவர் தன்னுடைய குறையை அறிதல் அவசியம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்களுக்கு வழக்கறிஞர்களாகவும், மற்றவர்களின் குற்றங்களுக்கு நீதிபதிகளாகவும் இருக்கிறோம்' என்றும் சொல்லப்படுவதுண்டு. என்னுடைய குற்றம் என்றால் அதை நான் நியாயப்படுத்தவும், மற்றவர் குற்றம் செய்யவில்லை என்றாலும் அவருக்குத் தீர்ப்பு எழுதவும் நான் வேகமாகத் துடிக்கிறேன்.

இந்த மனப்பாங்கைத் தன்னுடைய சீடர்கள் கொண்டிருக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார் இயேசு. இன்றைய நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரின் மலைப்பொழிவுப் பகுதியில் அமைந்துள்ளது. 'தீர்ப்பு அளித்தல் - அளவையால் அளத்தல் - குறை காணுதல்' என்னும் மூன்று பகுதிகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.

தன் கண்ணில் மரக்கட்டை வைத்திருக்கும் ஒருவர் இன்னொருவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கும் நோக்கில், 'துரும்பை எடுக்கட்டுமா?' என்று கேட்டால் என்ன ஆகும்?

அ. இவருடைய கண்கள் ஏற்கனவே மரக்கட்டையால் மறைக்கப்பட்டிருப்பதால் மற்றவரின் கண்ணில் உள்ள துரும்பு தெரியாது.

ஆ. அப்படி அவர் எடுக்கும் முயற்சியில் அடுத்தவருடைய கண்களைக் காயப்படுத்துவதோடு தனக்கே தீங்கு விளைவிக்கவும் சாத்தியம் உண்டு.

இ. துரும்பு தானாகவே விழுந்துவிடும். மரக்கட்டையை எடுக்கத்தான் முயற்சி தேவை.

இயேசு இன்றைய நாளில் நம் பார்வையைச் சரி செய்ய அழைக்கின்றார்.
அகுஸ்தினார் தன்னுடைய 'ஒப்புகைகள்' நூலின் இறுதியில், தூய்மைப்படுத்துதல் பற்றிப் பேசுகின்றார். முதன்மையாக அவர் எழுதுவது, 'நம் புலன்களைத் தூய்மைப்படுத்துதல்' - குறிப்பாக, நம் பார்வையைச் சரி செய்தல். பார்வையைச் சரி செய்தல் என்பது, அடுத்தவரை இறைவனின் சாயலாகப் பார்த்தல், முற்சார்பு எண்ணங்களை அகற்றிவிட்டுப் பார்த்தல், தீர்ப்பிடும் கண்ணோட்டம் இல்லாமல் பார்த்தல். மேலும், நம்முடைய பார்வைக்கு தடையாக இருப்பது நம் தனிநபரின் பெருமை அல்லது இறுமாப்பு என்கிறார் அகுஸ்தினார்.

இன்று, எல்லார் கண்களிலும் துரும்பு அல்லது மரக்கட்டை இருக்கத்தான் செய்யும். நான் சகோதர அன்பில் அடுத்தவரைத் திருத்துகிறேன் என்றால், முதலில் என் தவற்றை நான் சரிசெய்தல் அவசியம். என் தவற்றை நான் சரிசெய்ய, 'நானும் தவறக்கூடியவன்' என்று ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சி அவசியம்.

2 comments:

  1. தந்தையின் அந்தக் கடைசிப்பாராவே என் மனத்தில் மேலோங்கி நிற்கிறது.நாம் அடுத்தவரைத் திருத்த முற்படுவது என் சகோதர அன்பினால் தானா? எனும் கேள்வியை என்னிடமே கேட்டு பதில் ‘ஆம்!’ என்று வந்தால் முதலில் ‘நானும் தவறக்கூடியவளே’ எனும் தாழ்ச்சி மனப்பான்மையோடு என்னையே சரிசெய்தல் வேண்டும்.சொல்லுமளவுக்கு எளிதல்ல. ஆனாலும் முயற்சிக்கலாம். இதை இன்னும் கொஞ்சம் கூடுதலாக புனித.அகுஸ்தினாரின் பார்வைக்கு இட்டுச்செல்கிறார் தந்தை.’நான் தான் எல்லாம்’ எனும் இறுமாப்பு களைந்து அடுத்தவரை எந்த முற்சார்பு எண்ணமும்,தீர்ப்பிடும் கண்டோட்டமும் இல்லாமல் பார்ப்பதுவே அது.இது அத்தனையும் சரியாக நடக்கும் பட்சத்தில் ‘என்னுடைய குற்றங்களுக்கு நானே நீதிபதியாக முடியும்’ என்கிறது இன்றைய வாசகம்.அழகான வாழ்வியல் பாடங்களை நாளைக்கொன்றாகத் தரும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    மேலே உள்ள அந்தப்படத்தைப் பார்த்தவுடன் சிரித்து விட்டேன்.சிரித்தது இதற்காக மட்டுமல்ல....அண்மையில் தொலைக்காட்சியில் வரும் ஒரு குளிர்பான விளம்பரத்திற்கும் சேர்த்தேதான்!

    ReplyDelete