Friday, June 19, 2020

மரியாளின் மாசற்ற இதயம்

இன்றைய (20 ஜூன் 2020) திருநாள்

மரியாளின் மாசற்ற இதயம்

இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் மரியாளின் மாசற்ற இதய நினைவு கொண்டாடப்படுகிறது. காலையில் உணவறையில், 'அப்படியே சூசையப்பரின் இதயத்திற்கும் நினைவு கொண்டாடி இருந்தால் நலமாக இருக்குமே!' என்றேன். அப்போது இன்னொரு அருள்பணியாளர், 'ஆமாம்! சரிதானே! சூசையப்பருக்கும் இதயம் இருந்ததுதானே!' என்று உதவிக்கு வந்தார். இன்னொருவர், 'ஆம்! இருந்ததுதான்! ஆனால் அது மாசற்று இருந்ததா?' என்று கேள்வி கேட்டார்.

கொரோனா காலத்தில் சும்மா இருப்பதால்தான் இத்தனை கேள்விகள்.

ஆனாலும், வளனாருக்கும் விழா எடுத்திருக்கலாம்.

எதற்காக மரியாளின் இதயத்திற்கு விழா கொண்டாடப்படுகிறது? என்று யோசித்து தேடுபொறியில் தேடியபோது, இந்த விழாவிற்கான அடிப்படையாக லூக் 2:19 குறிப்பிடப்பட்டிருந்தது: 'மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார்.' இங்கே கூறப்படுகின்ற 'உள்ளம்' என்பது இதயம் என்றும், மரியாளின் 'அமல உற்பவம்' அவருடைய 'மாசற்ற' என்றும் மாறியிருக்கிறது.

மரியாள் கூட உள்ளத்தில் பட்டதை அவ்வப்போது பேசினார். ஆனால், பாவம் வளன்! பேசாமலேயே அனைத்தையும் மனத்தில் வைத்துக் கொண்டு மறைந்து போனார்.

நிற்க.

மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவாக மட்டுமே திருச்சபை கொண்டாடுகிறது. சில இடங்களில் இதற்கு விழா அல்லது பெருவிழாவும் எடுக்கப்படுகிறது.

மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம்.

வானதூதரின் வார்த்தை கேட்டு, 'இது எத்தகையதோ?' என்று வியப்பில் கலங்குகிறது இதயம்.

'இது எங்ஙனம் ஆகும்?' என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம்.

'எலிசபெத்துக்கு குழந்தையா?' என்று துள்ளிக் குதித்து உதவ ஓடுகிறது இதயம்.

'சத்திரத்தில் இடமில்லையா?' - பயம் கொள்கிறது இதயம்.

'வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?' - வியப்பு கொள்கிறது இதயம்.

'பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!' - ஆச்சர்யம் கொள்கிறது இதயம்.
'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?' - மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம்.

'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!' - ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம்.

'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!' - இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம்.

'இதோ! உம் மகன்!' - மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம்.

'மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?' - மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.

இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.

காயம்படுவதற்கும், குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.

1 comment:

  1. அன்னை மரியாளின் கலங்குகிற...தயங்குகிற...துள்ளிக்குதித்து உதவ ஓடுகிற....பயம் மற்றும் வியப்பு கொள்கிற...மகனின் கேள்வி கேட்டுக் குழம்புகிற....ஊராரின் உளறல் கேட்டுப் பதைபதைக்கிற....இல்லத்தாரின் இழுக்கு பற்றி கவலை கொள்கிற....சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்ப்பதா வேண்டாமா என்று துடிக்கிற......எல்லாமே தன் மகனுக்காக மட்டுமின்றி தன்னைச்சுற்றி கையறு நிலையில் நின்ற அனைவருக்காகவும் தான். ஆனால் காணாமல் போன மகனைக்கோவிலில் கண்டு “ மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தீர்?” என்று கேட்ட தாயிடம் “ நான் என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று பளிச்சென்று வருகிறது பதில்.பெற்ற தகப்பன் கண் முன்னே நிற்க இயேசுவின் இந்த வார்த்தை அந்தப் பெற்றோரை எத்தனை புறக்கணிப்புக்குள்ளாக்கியிருக்கும்? பதில் சொல்கிறார் தந்தை.... “ காயம் படுவதற்கும்,குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.” மரியாளின் உள்ளக்குமுறலை தனக்கே உரித்தான நடையில் தந்தை படைத்திருப்பதை வாசிக்கையில் ஒரு தாயாக என் மனம் கனக்கிறது.வாசிப்பவரை அப்படியே உறையவைக்கும் எழுத்து! இறைவன் தந்தையை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete