Tuesday, June 9, 2020

சொன்னபடியே செய்

இன்றைய (9 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 17:7-16)

சொன்னபடியே செய்

நேற்றைய முதல் வாசகத்தில் காகங்களின் வழியாக எலியாவுக்கு உணவளித்தார் ஆண்டவராகிய கடவுள். அந்த உணவை உண்டு, ஓடையில் நீர் பருகினார் எலியா. ஓடையும் வற்றிவிட்டது. ஆக, அவரை சாரிபாத்து நகர் கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார் ஆண்டவர்.

'பானையிலிருந்து மாவு தீரவில்லை. கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை'

- உணவு குறையாமல் இருப்பது என்பது பல மத நூல்களில் காணப்படுகின்ற ஓர் அற்புதம்.

மகாபாரதத்தில் ஆரண்ய பருவத்தில், துர்வாச முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் பாண்டவர்கள் உணவு வழங்கும்போது, அங்கிருந்த பாத்திரம் குறையவே இல்லை.

மணிமேகலையிலும் இதையொத்த நிகழ்வைப் பார்க்கிறோம்.

ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் உணவுப் பாத்திரத்தையும் தாண்டி நிறைய அற்புதங்கள் நடக்கின்றன:

ஒன்று, எலியாவின் நீண்ட பயணம். யோர்தானுக்கு கிழக்கே உள்ள கெரித்து ஓடையிலிருந்து பெனிசியப் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் பயணம் செய்கிறார் எலியா. ஏறக்குறைய 150 கிமீ தூரம் நடக்கின்றார். இந்தப் பயணத்தில் அவருக்கு உணவும் தண்ணீரும் எப்படிக் கிடைத்தன? இது முதல் அற்புதம்.

இரண்டு, 'சாரிபாத்துக் கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டுள்ளேன்' என்கிறார் ஆண்டவர். யாவே ஆண்டவர் புறவினத்துப் பகுதியில் இறைவாக்குரைத்ததும், அந்த இறைவாக்கை அக்கைம்பெண் புரிந்துகொண்டதும் எப்படி?

மூன்று, 'எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு' என்று கேட்கின்றார் எலியா. உடனே அப்பெண், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை' என்கிறார். அதாவது, இவர்தான் அந்த இறைவாக்கினர் என்று அந்தப் பெண் எப்படிக் கண்டுகொண்டார்? மேலும், யாவே இறைவனை வாழும் கடவுளாகிய ஆண்டவர் என அந்தப் பெண்ணால் எப்படி அறிக்கையிட முடிந்தது.

ஆக, உணவையும் தாண்டி நிறைய அற்புதங்கள் இங்கே நடக்கின்றன.

புதிய ஏற்பாட்டில் நாம் இயேசுவின் இறுதி இராவுணவை வாசிக்கின்றோம். இங்கே, பழைய ஏற்பாட்டில், ஒரு குடும்பத்தின் இறுதி இராவுணவு பற்றி வாசிக்கின்றோம்: '...இதோ, இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்.'

அந்தக் கைம்பெண்ணின் கடைசிக் கலய உணவில் பங்கு கேட்கின்றார் எலியா. 'அதன்பின் சாகத்தான் வேண்டும்' என்ற பெண்ணின் வார்த்தை, அவளுடைய கடைசிக் கலய உணவுதான் அவளுக்கு இருந்தது என்பதை நமக்குக் காட்டுகிறது.

இங்கே, எலியா, 'அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய்!' என்கிறார்.

அந்தப் பெண், 'சாகப் போகிறோம்' என்கிறாள். இவரோ, 'போய்! நீ சொன்னபடியே செய்!' என்கிறார்.

ஆனால், 'அவள் சொன்னபடி செய்வதற்கு முன்', 'ஆண்டவர் சொல்வதுபோல செய்!' என்று இன்னொரு கட்டளை கொடுக்கின்றார். அந்தக் கட்டளையே வாக்குறுதியாகவும் இருக்கிறது.

நிகழ்வின் இறுதியில், 'எலியா சொன்னபடி செய்கிறார்' அந்தப் பெண்.

ஆக,

'நீ சொன்னபடி'

'ஆண்டவர் சொன்னபடி'

'எலியா சொன்னபடி'

என்று மூன்று பேரின் குரல்கள் இங்கே கேட்கின்றன. ஆண்டவரின் குரலும், ஆண்டவரின் மனிதன் எலியாவின் குரலும் ஒன்றுதான் என எடுத்துக்கொள்ளலாம்.

ஆண்டவரின் குரலுக்கும் என் குரலுக்கும் உள்ள இடைவெளிதான் அற்புதம் நடக்கும் இடம்.

என் குரல் எனக்குச் சாவைத் தரலாம்.

ஆண்டவரின் குரல் எனக்கு எப்போதும் வாழ்வைத் தரும்.

அவரின் குரல் கேட்கும் இடத்தில், 'பானையிலிருந்து மாவு குறைவதுமில்லை. கலயத்திலிருந்து எண்ணெய் குறைவதுமில்லை.'

இதையே திருப்பாடல் ஆசிரியரும்,

'என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகின்றது' (திபா 23:5) என்று பாடுகின்றார்.

1 comment:

  1. புதிய ஏற்பாட்டில் இயேசுவின் இறுதி உணவையும்,பழைய ஏற்பாட்டில் ஒரு குடும்பத்தின் இறுதி உணவையும் இணைக்கிறார் தந்தை, இன்றையப் பதிவின் வழியே! நாம் மட்டும் இறைவனுக்கு இசைந்து விடின் ஓராயிரம் அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் நம் இறைவன் என்பது எலியாவிற்கும் சரி..சாரிபாத்தின் கைம்பெண்ணிற்கும் சரி நன்றாகவே தெரிந்திருந்தது.வாழ்வைத்தரும் ஆண்டவரின் குரலுக்கு நம் செவிகளைத் தந்தால் “என் பானையிலிருந்து மாவு குறைவதுமில்லை; கலயத்திலிருந்து எண்ணெய் குறைவதுமில்லை.” அது மட்டுமா? “ என்னுடைய பாத்திரமும் நிரம்பி வழியும்” என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.
    “ சொன்னபடி செய்வது மட்டுமே என் வேலை; அனைத்தையும் பார்த்துக்கொள்வார் ஆண்டவர்”........ நம்பிக்கையூட்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete