Wednesday, June 24, 2020

செயல்கள்

இன்றைய (25 ஜூன் 2020) நற்செய்தி (மத் 7:21-29)

செயல்கள்

இன்றைய நற்செய்திப் பகுதியோடு இயேசுவின் மலைப்பொழிவு நிறைவு பெறுகிறது. 'அவரது போதனையைக் கேட்டு மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்கின்றனர்.'

தன்னுடைய சமகாலத்து ரபிக்களைப் போலவே தன் உரையை நிறைவு செய்கின்றார் இயேசு. ரபிக்கள் தங்களுடைய போதனையை நிறைவுசெய்யும்போது ஏதாவது ஒரு கதை அல்லது ஓர் உருவகத்தைப் பயன்படுத்துவர். மேலும், போதனையை மக்கள் பின்பற்றவேண்டும் என்ற நிலையில், ஓர் இரட்டைக் கருத்தோடு முடிப்பர்.

இயேசு தன் மலைப்பொழிவின் இறுதியில் 'இருவகை அடித்தளங்கள்' என்னும் உவமையையும், 'நான் எந்த அடித்தளத்தில் கட்டப் போகிறேன்?' என்ற கேள்வியையும் தன் சீடர்கள்முன் வைக்கின்றார்.

மனித வார்த்தைகள் சோப்பு நுரைகள் போன்றவை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சோப்புநுரை சில நிமிடங்களில் மறைந்துவிடும். ஆனால், செயல்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்ட உருவங்கள் போன்றவை. அவை அழியாது.

வெறும் வார்த்தைகள் மறைந்துவிடும் - மணல்மேல் கட்டிய வீடு போல!

ஆனால், செயல்கள் நிலைக்கும் - பாறைமேல் கட்டிய வீடு போல!

இன்று நாம் பல நேரங்களில் மணல்மேல் வீடு கட்டுவதோடு, அதாவது, வெறும் சொற்களை அடுக்குவதோடு நிறுத்திக்கொள்கிறோம். சொற்களையும் தாண்டிய செயல்கள் மிக முக்கியமானவை.

நான் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குப் போகிறேன் என வைத்துக்கொள்வோம். மருத்துவர் என்னிடம், 'இந்த மாத்திரை எடுங்க! இந்த ஊசி போடுங்க!' என்று சொல்கின்றார். அந்த வார்த்தைகளை அவர் உதிர்ப்பதாலும், அவ்வார்த்தைகளை நான் கேட்பதாலும் மட்டும் என் நோய் சரியாகிவிடுமா? இல்லை. மாத்திரைகளை எடுத்தால்தான் சரியாகும்.

வெறும் சொற்கள் மட்டுமல்ல. செயல்களே விண்ணரசின் கதவுகளைத் திறக்கும்.

1 comment:

  1. வெறும் வார்த்தைகள் மறைந்துவிடும்- மணல்மேல் கட்டிய வீடு போல!
    ஆனால், செயல்கள் நிலைக்கும்- பாறைமேல் கட்டிய வீடு போல!
    வெறும் சொற்கள் மட்டுமல்ல.செயல்களே விண்ணரசின் கதவுகளைத் திறக்கும்...அருமை!

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.... சிறுகச் சொல்லிப் புரிய வைத்த தந்தைக்க்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete