Sunday, June 7, 2020

காகங்கள் வழி உணவு

இன்றைய (8 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 17:1-6)

காகங்கள் வழி உணவு

நான் கடந்த ஆண்டு எங்கள் கல்லூரியில், 'ஐந்நூல்கள்' பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். 'எகிப்தின் பத்துக் கொள்ளை நோய்கள்' பற்றி நடத்திக்கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் என்னிடம், 'ஃபாதர், பத்துக் கொள்ளை நோய்களை வரிசையாக அனுப்புவதற்குப் பதிலாக, கடைசியாக உள்ள கொள்ளை நோயை முதலில் அனுப்பியிருக்கலாமே? அல்லது முதலிலேயே பாரவோனை அழித்துவிட்டு ஆண்டவர் விடுவித்திருக்கலாமே? அல்லது பாரவோனின் மனதைக் கடினப்படுத்துவதற்கு முன்பாக, அவனுடைய மனதில் இரக்கத்தை வருவித்து மக்களை வெளியேற்றியிருக்கலாமே?' என்று கேட்டார்.

மோசே பாரவோனிடம் கேட்டவுடன், பாரவோன் அவர்களைப் போகுமாறு அனுமதித்திருந்தால், விடுதலைப் பயண நிகழ்வு, மோசேயின் நாவன்மையாலும், பாரவோனின் பெருந்தன்மையாலும் நடந்ததாக ஆகியிருக்கும். ஒரே கொள்ளை நோயுடன் நிறுத்தியிருந்தால் அது ஒரு வரலாற்று விபத்தாக இருந்திருக்கும். பாரவோனை முதலில் அழித்திருந்தால் மக்கள் அதை எதார்த்த நிகழ்வாகப் பார்த்திருப்பார்கள்.

ஒவ்வொரு கொள்ளை நோயின் இறுதியிலும், 'இதனால் நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்' என்று ஆண்டவர் மோசே வழியாக பாரவோனிடமும் இஸ்ரயேல் மக்களிடமும் கூறுகின்றார்.

ஆக, வாழ்வின் நிகழ்வுகளின் நாயகர் ஆண்டவர் என்று காட்டவே ஆண்டவர் பத்துக் கொள்ளை நோய்களை அனுப்புகின்றார்.

தொடர்ந்து, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை மறந்துவிட்டு பாகால் வழிபாடு செய்தபோது, ஆண்டவர் தன் மக்களுக்கு தன்னைக் காட்டுவதற்காக கொடிய பஞ்சத்தை வருவிக்கின்றார். இந்த நேரத்தில் இறைவாக்குரைத்த எலியாவை வியத்தகு முறையில் காக்கின்றார்.

'ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேன்' என்று எலியாவிடம் சொல்கிறார் ஆண்டவர்.

காகங்களை ஏன் ஆண்டவர் தேர்வு செய்ய வேண்டும்?

விவிலியத்தில் 'காகம்' 11 முறை வருகிறது. நோவா பெட்டகத்திலிருந்து வெளியேறிய முதல் பறவை காகம் (காண். தொநூ 8:7). ஆனால், அது திரும்ப வரவில்லை. இறந்த மீன்களைத் தின்னச் சென்றிருக்கலாம். இதுவே தண்ணீர் வற்றியதற்கான அடையாளமாக நோவாவுக்குத் தெரிகிறது. உண்பதற்கு விலக்கப்பட்ட பறவைகள் பட்டியிலில் காகம் இருக்கிறது (காண். லேவி 11:13,15). ஏனெனில், அதன் கால்கள் விரிந்திருக்கும். கால்கள் விரிந்திருக்கும், குளம்புகள் விரிந்திரிக்கும் அனைத்து பறவைகளும் விலங்குகளும் இஸ்ரயேல் மக்களுக்குத் தீட்டானவை. இனிமைமிகு பாடலில், காதலின் தன் காதலனின் தலைமுடி காகத்தைப் போல கறுப்பாய் இருப்பதாக வர்ணிக்கிறாள் (காண். இபா 5:11). திபா 147:9இல், 'கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் இரை கொடுக்கின்றார்' என்ற வரியில் இறைவனின் பராமரிப்பை வாசிக்கின்றோம். இறுதியாக, இயேசு, 'காகங்களைக் கவனியுங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. அவற்றுக்குச் சேமிப்பறையும் இல்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார்' (காண். லூக் 12:24) என தன் சீடர்களுக்கு கடவுளின் பராமரிப்பை எடுத்துரைக்கின்றார்.

காகத்தை யாரும் ரசிப்பதில்லை.

ஆனால், காகத்தின் அருகில் நிற்கும் வாய்ப்புக் கிடைத்தால் நின்று பாருங்கள். அதன் கழுத்து மிகவும் வசீகரமாக இருக்கும்.

காகத்தைக் கொண்டு ஏன் எலியாவுக்கு உணவு தந்தார்?

அ. காகம் மட்டுமே எஞ்சிய பறவையாக இருந்திருக்கலாம். மற்ற பறவைகளை மக்கள் தங்கள் பஞ்சத்தில் அடித்து சாப்பிட்டிருக்கலாம்.

ஆ. காகத்தை யாரும் ஒரு பொருட்டாகப் பார்க்க மாட்டார்கள். ஆக, அது போகும் வரும் இடத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள். அப்படி என்றால், எலியா ஒளிந்திருக்கும் இடம் யாருக்கும் தெரியாது.

இ. காகம் தீட்டு என்றாலும், அது சுமந்து வரும் உணவு தூய்மையானது என்று எலியாவுக்கு உணர்த்தி, இவ்வுலகில் தீமையும் நன்மையும், அழுக்கும் தூய்மையும் இணைந்தே தான் இருக்கும் என்று காட்டுவதற்காக இருக்கலாம்.

ஆனால்,

மனிதர் பார்வையில் ஒன்றுமில்லாமல் இருக்கின்ற ஒரு பறவை உயிர்காக்கும் கருவியாக மாறுகிறது இறைவனின் கைகளில்.

நம்முடைய தான்மை அல்லது அடையாளம் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் அல்ல, மாறாக, கடவுள் நம்மை எப்படிப் பார்க்கிறார் அல்லது பயன்படுத்துகிறார் என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை நாம் இந்த நிகழ்வின் வழியாக உணர்ந்துகொள்ளலாம்.

பறவை இனங்களில் உணவைப் பகிர்ந்து உண்ணும் இனம் காகம்தான் என்று பாரதியும் பாடுகின்றார்.

மேலும், குயில் முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சு பொறிக்கும் இனமும் காகமும்தான். காக்கா குரலைக் கேட்டுத்தான் குயில் குஞ்சுகள் பாட ஆரம்பிக்கின்றன என்பதும் இயற்கையின் ஆச்சர்யம்.

நற்செயல்: இறைவனின் பார்வையில் நான் மதிப்புக்குரியவன், மதிப்புக்குரியவள் என்ற மனவுறுதி பெறுதல்.

3 comments:

  1. மனிதனின் பார்வையில் மதிப்பற்ற ஒரு காகமே இன்றையப் பதிவின் கதாநாயகன்.மனிதனால் ஓரங்கட்டப்பட்ட ஒரு பறவை விவிலியத்தில் இத்தனை சிறப்புப் பெற்றுள்ளது எனும் புரிதல் நம் புருவங்களைத் தூக்க வைக்கிறது.தாகம் தீர்த்துக்கொள்ள ஓடை இருப்பினும் எலியாவின் பசி தீர்ப்பதென்னவோ ஒரு காகமே எனும் உண்மை ஒரு பாடலின் “அன்று காகத்தினால் எலியாவைப் போஷித்தவர் இன்று உன் பசி ஆற்றிடாரோ!” எனும் வரிகளில் அழகாக சொல்லப்படுகிறது. காக்கை இயற்கைக்கும்,மற்ற உயிரினங்களுக்கும் விரித்துக்கொடுக்கும் சேவைகளைப் பட்டியலிடும் தந்தை ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பார் போல் தெரிகிறது.வாழ்த்துக்கள்!

    பெரியவை,சிறியவை எல்லாமே மனிதனின் கண்களில் உள்ள கோளாறின் வெளிப்பாடே! ஆனால் இறைவனின் பார்வையில் “நான் மதிப்பிற்குரியவள்” எனும் நேர்மறை எண்ணம் நம்மில் இருப்பின் விண்ணையும் தொடமுடியும் ஒருவரால்!

    நான் அதிகமாக இரசித்த இன்றையப்பதிவிற்காகத் தந்தைக்கு சிறப்பான பாராட்டுக்கள்! நன்றிகள்!


    ReplyDelete
  2. 5 இட்லி சாப்பிட்டு பசி அடங்கிச்சுனா , அஞ்சாவது இட்லியை மொதல்லே சாப்ட்ருக்கலாமே ..

    ReplyDelete