Sunday, June 14, 2020

மூதாதையர் சொத்து


இன்றைய (15 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 21:1-16)

மூதாதையர் சொத்து

நான் உரோமையிலிருந்து நார்வே நாட்டிலுள்ள பெர்கனுக்கு உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஈழத் தமிழர்களின் நிறைய இல்லங்களைச் சந்தித்தேன். தங்கள் இல்லங்களை விட்டு அவர்கள் இன்று வெளியே இருந்தாலும், வெளிநாட்டில் நல்ல நிலையில் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். அப்படி நான் சென்ற இல்லங்களில் உள்ள ஒருவரிடம், 'அண்ணன்! நீங்கள் சொந்த நாட்டில் இருந்தால்கூட இந்த நிலையில் இருந்திருக்க முடியாதல்லவா! முதன்மையான மருத்துவம், கல்வி, இல்லம் உங்களுக்குக் கிடைத்திருக்காதல்லவா! அப்படி இருக்க நீங்கள் ஏன் உங்கள் சொந்த நாடு திரும்ப வேண்டும் என ஆவல் கொள்கிறீர்கள்?' எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தந்தது: 'இங்கு எல்லாம் இருந்தாலும் இது என் மண் அல்ல. அங்கு எனக்கு எதுவும் இல்லை என்றாலும் அது என் மண்' என்றார்.

நாம் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டோம் என்பது நிறைய வகையில் உண்மை என்றே நினைக்கிறேன். ஏனெனில், நாம் பிறந்த மண்தான் நம் எல்லாமாக இருக்கிறது. நம் மண்ணில் விளையாத எதுவும் நம் உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை. நம் மணத்தின் வாசம் நமக்கு இனிமையாக இருக்கிறது.

வெளியூர்களில் திருமணம் முடித்துச் சென்ற எங்க ஊர் அக்காமார்கள் திருவிழா மற்றும் சுப நிகழ்வுகளுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம், வெறும் தரையில் அப்படியே வீட்டிற்குள் படுத்திருப்பார்கள். எத்தனை மெத்தையில் எங்கெல்லாம் தூங்கினாலும் சொந்த மண்ணில் தூங்குவதுபோல வராது என்பார்கள். மேலும், நாம் வாழும் இந்த உலகில் நமக்கு என்று கொஞ்சம் மண்ணையாவது (நிலத்தையாவது) உரிமையாக்கிக் கொள்ள நினைக்கிறோம். நம் மண் அல்லது இடத்தில் வேறு யாராவது நுழைந்தால் அந்த அத்துமீறலை எதிர்க்கிறோம்.

ஆனாலும், அதிகாரம், பணம், ஆள்பலத்தால் இன்று நிலம் அத்துமீறல் செய்யப்படுகிறது. இந்த அத்துமீறலில் அநீதியாக அதிகாரமற்றவர்கள் இரத்தம் சிந்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் மூன்று அத்துமீறல்கள் நடக்கின்றன:

அ. அதிகார அத்துமீறல்

ஆகாபு ஓர் அரசன். அவனுடைய அரண்மனைக்கு அருகில் நாபோத்து என்பவரின் திராட்சைத் தோட்டம் இருக்கிறது. 'அதை எனக்குக் கொடு. நான் அதில் காய்கறி போட வேண்டும்' என அரசன் கேட்கிறார். ஆனால், அரசனையும் எதிர்க்கிறார் நாபோத்து. தன் மூதாதையரின் சொத்து தன்னைவிட்டுப் போய்விடக் கூடாது என இறைவனிடம் மன்றாடுகின்றார். ஏமாற்றத்தில் அரசன் முகவாட்டமாய் இருக்கின்றான். அங்கே வருகின்ற அரசி ஈசபேல், 'இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்து கொள்வது?' எனக் கேட்கின்றாள். அதாவது, 'அரசன் அழலாமா? கெஞ்சியா கேட்டாய்? நீ அடித்து அல்லவா பறித்திருக்க வேண்டும்' என்று யோசனை சொல்கிறாள். கணவனின் கையாலாகத நிலையில், அவளே கடிதம் எழுதி, அவனுடைய முத்திரையைப் பயன்படுத்தி, நாபோத்தைக் கொல்ல ஏற்பாடு செய்கிறாள். அரசனின் அதிகாரத்தை அத்துமீறல் செய்கிறாள் ஈசபேல். அந்த அத்துமீறலுக்கு இடம் கொடுக்கின்றான் அரசன்.

ஆ. நில அத்துமீறல்

நாபோத்து பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்படுகின்றார். உடனே ஆகபா அந்த திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கப் புறப்பட்டுப் போகின்றார். ஆக, தனக்குத் தேவை என்றால், தன் தேவை நிறைவேற வேண்டுமென்றால், இன்னொருவனை அழித்து அத்துமீறல் செய்யலாம் என்ற இன்றைய இழி மதிப்பீட்டின் தலைமகனாகின்றான் ஆகாபு. அந்தத் தோட்டத்தில் அவன் நுழையும்போதெல்லாம் அவனுடைய மனச்சான்று அவனுக்கு உறுத்தலாக இருக்காதா?

இ. இறைக்கட்டளை அத்துமீறல்

இங்கே ஆகாபும், ஈசபேலும், அவர்கள் அனுப்பிய இழி மனிதர்களும் மூன்று கட்டளைகளை மீறுகின்றனர்:  'பிறர் உடைமையை விரும்புகின்றனர்,' 'பொய் சொல்கின்றனர்,' மற்றும் 'கொலை செய்கின்றனர்.' நில அத்துமீறல் வெளியே நடந்தேறுமுன் ஆகாபின் உள்ளத்தில் பேராசையாகவும், ஈசபேலின் உள்ளத்தில் வன்மமாகவும், இழிமனிதர்களின் உள்ளத்தில் பொய்மையாகவும் ஊற்றெடுக்கிறது.

அத்துமீறல்கள் என்றும் ஆபத்தானவை.

ஆனால், அத்துமீறல் செய்கிறவர்கள் மட்டுமே இன்று நன்றாக இருக்க முடியும். 

நாபோத்தின் குரலைக் கேட்டு எலியாவை அனுப்பிய ஆண்டவர், இன்று யார் அழுகுரலையும் கேட்டு யாரையும் அனுப்புவதில்லை.


3 comments:

  1. இறைவாக்கினர்களைவிட ,Strong ஆக
    அமைந்துள்ளது, தங்கள் வாக்கியங்கள் ஒவ்வொன்றும்...
    I see a prophet in you.

    " எந்த அத்துமீறல்களுக்கும், உடந்தையாகாமல்,நிச்சயமாக எங்களை
    பார்த்துக்கொள்கிறோம்.
    நன்றி.🙏

    ReplyDelete
  2. இன்றைய காலகட்டத்திலும் நிறைய நாபோத்துக்களும், அவர்களுக்கு சாவி கொடுக்கும் ஈசபேல்களும் மட்டுமல்ல.... ஏமாறவென்றே காத்திருக்கும் ஆகாபு போன்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.’அத்துமீறல்’ அதிகாரம்,நிலம்,இறைக்கட்டளை சம்பந்தப்பட்டது மட்டுமா..... இன்னும் பேர்,புகழ் தலைமை,வாரிசு போன்றவை மிச்சமிருக்கிறதே! தவறு..அத்துமீறல் செய்பவர்கள் மட்டுமே நன்றாக இருப்பதில்லை...அப்படி இருப்பதுபோல் நமக்குக் தெரிகிறார்கள்.
    காலன் அவர்களை நோக்கி வருகையில் தான் அவர்களின் உண்மை நிலை புரியும்.
    அது மட்டுமல்ல....நாபோத்தின் குரல் கேட்டு எலியாவை அனுப்பிய ஆண்டவர் இன்று யார் அஉழ குரலையும் கேட்டு யாரையும் அனுப்பாமல் இல்லை.அவரின் செவிகளில் விழும்படி நம் அழுகை இல்லை என்றே புரிகிறது.ஆனாலும் எல்லாவற்றையும் மீறி என் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்ட வார்த்தைகள்....” இங்கு எல்லாம் இருந்தாலும் இது என் மண் அல்ல.அங்கு எனக்கு எதுவும் இல்லையென்றாலும் அது என் மண்.”

    “ மண் வாசனை” பொங்கி வழியும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. ஆனால், அத்துமீறல் செய்கிறவர்கள் மட்டுமே இன்று நன்றாக இருக்க முடியும்.

    நாபோத்தின் குரலைக் கேட்டு எலியாவை அனுப்பிய ஆண்டவர், இன்று யார் அழுகுரலையும் கேட்டு யாரையும் அனுப்புவதில்லை.



    // நீங்களே இப்படி சொன்னா எப்படி சாமி? Faith and hope are those that drive us in this difficult times. Your words should be an encouragement to those in distress. After all, we come to church to ease our burden.. if we listen to your sermons, it's like ' கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா...' .. அத்துமீறல் நடக்குது ன்னு எங்களுக்கு தெரியாதா சாமி..யாரும் வரமாட்டாங்கன்னு தெரியும் சாமி. அப்படி இருந்தாலும் என்ன செய்யணும்- அதை ஏன் யாரும் சொல்லமாட்டேங்குறாங்க?

    ReplyDelete