Friday, June 12, 2020

குறுக்குசால்

இன்றைய (13 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 19:19-21)

குறுக்குசால்

'அவன் ஏன்யா குறுக்குசால் ஓட்றான்?'

'குறுக்குசால் ஓட்டுதல்' என்னும் சொலவடையை நான் மதுரையில்தான் கேட்டேன். இது ஒரு விவசாய சமூகச் சொல்லாடல். ஒருவர் மாட்டைப் பூட்டி ஏர் ஓட்டுகிறார். அப்படி ஓட்டும்போது நிலத்தைக் கிழித்துக்கொண்டே செல்லும் வரிக்குப் பெயர் சால். நேராக ஒருவர் ஓட்டிக்கொண்டிருக்க, இன்னொருவர் அவருக்குக் குறுக்கே இன்னொரு ஏர் பூட்டி ஓட்டினால் அது முதலாம் நபரின் வேகத்தைக் குறைப்பதோடு, உழுதல் சீராக இருப்பதையும் அது தடை செய்துவிடும். ஆக, ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் இடறல் தருதலுக்குப் பெயர்தான் குறுக்குசால் ஓட்டுகின்றார்.

குறுக்குசால் ஓட்டுதல் விவசாயிகளின் பார்வையில் தவறு எனத் தெரிந்தாலும், இறைவனின் செயலுக்கு அது அவசியமானதாக இருக்கிறது.

தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயின் வாழ்வில் குறுக்குசால் ஓட்டி அவரை எகிப்துக்கு அனுப்புகிறார் ஆண்டவர்.

மீன் பிடித்துக்கொண்டிருந்த முதற் சீடர்களின் வாழ்வில், வரி வசூலித்த மத்தேயு மற்றும் சக்கேயு வாழ்வில், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் வாழ்வில், தமஸ்கு நகர் செல்லும் பவுல் வாழ்வில் என கடவுள் சரமாரியாக குறுக்குசால் ஓட்டுகின்றார்.

கடவுள் ஓட்டும் குறுக்குசால் மனித வாழ்வையே புரட்டிப் போட்டுவிடுகின்றது.

ஆண்டவராகிய கடவுளின் கட்டளையை உடனே நிறைவேற்றுகின்றார் எலியா. 'உனக்குப் பதிலாக எலிசாவை இறைவாக்கினராக அருள்பொழிவு செய்' என்று சொன்னவுடன் ஓடிச் சென்று, எலிசாவை அருள்பொழிவு செய்கின்றார். இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் ஆர்வத்தில் அப்படிச் செய்தாரா அல்லது 'ஆள விட்டாப் போதும்!' என்று தன் பணியைத் துறந்துவிட நினைத்தாரா என்று தெரியவில்லை.

இந்த நிகழ்வில் சில விடயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

அ. ஏர் பூட்டி உழும் எலிசா

எலிசா அவருடைய அன்றாட வேலையில் மும்முரமாக இருக்கின்றார். பதினொரு ஏர்கள் முன் செல்ல, பன்னிரண்டாவதை ஓட்டிக்கொண்டு செல்கின்றார். பன்னிரண்டு என்பது நிறைவைக் காட்டுகிறது. மேலும், எல்லாருக்கும் இறுதியில் இவர் செல்வதால், மற்றவர்கள் ஓட்டுவதை இவர் கண்காணிக்கவும் முடியும். பன்னிரண்டு தேர்கள் ஓடும் அளவுக்கு உள்ள பெரிய வயல்பரப்பின் உரிமையாளராக இருக்கின்றார் எலியா. ஆக, கடவுள் நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டே நம்மை அழைக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் ஏரை வைத்து உழுதுகொண்டிருப்பதுதான். அழுது கொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இருக்க வேண்டும்.

ஆ. மேலாடை

எலியா எலிசாவின்மேல் தன் மேலாடையைத் தூக்கிப் போடுகின்றார். இதுதான் அவர் செய்த அருள்பொழிவு. ஒருவருடைய மேலாடை ஒருவரின் ஆற்றலை அடையாளத்தையும் குறிக்கின்றது. தான் பெற்றிருந்த அருள்பொழிவை தன் சீடர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் எலியா. இந்த மேலாடையை எலிசா தன் வாழ்வின் இறுதிவரை வைத்திருக்கின்றார். இதைக் கொண்டே யோர்தான் ஆற்றை இரண்டாகக் கிழிக்கின்றார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் தன் மேலாடை என்னும் அருள்பொழிவால் மூடியுள்ளார்.

இ. நான் விடைபெற்று வர அனுமதியும்

தன் தாய் தந்தையிடம் சென்று வர அனுமதி கேட்கின்றார் எலிசா. உடனே அனுமதி அளிக்கின்றார் எலியா. ஆனால், இயேசுவோ தன் சீடர்களுக்கு அப்படிப்பட்ட அனுமதியை மறுக்கின்றார். ஏனெனில், இறையரசின் அவசரம் அப்படி. விடைபெற்று வருதல் என்பது தன் பழைய காலத்தை மறத்தல். அதை அடையாள முறையில் நிறைவேற்றுகின்றார் எலிசா. எல்லாருக்கும் விருந்து கொடுக்கின்றார்.

ஈ. படகுகளை எரித்தல்

தன் வாழ்வாதாரத்திற்கான ஏர்கள் மற்றும் மாடுகளை எரிக்கின்றார் எலிசா. ஆங்கிலத்தில், படகுகளை எரித்தல் என்ற சொல்லாடல் வழியாக இதை அழைக்கிறோம். அதாவது, திரும்பிச் செல்லும் வாய்ப்புக்களை அழித்துவிட்டு, 'வாழ்வா-சாவா' என்ற நிலையில் வாழ்க்கையோடு ஒற்றைக்கு ஒற்றை போராடுதல்.

இந்த நான்கும் அருள்பணி நிலையில் இருப்பவர்கள் அல்லது அழைக்கப்படுபவர்கள் தங்கள் மனத்தில் நிறுத்த வேண்டியவை:

அ. தங்கள் அன்றாட வாழ்வில் இறைவனின் குறுக்கீட்டை உணர வேண்டும்.

ஆ. அவர்தரும் அருள்பொழிவை ஏற்க வேண்டும்.

இ. பழைய வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டும்.

ஈ. தன் பாதுகாப்பு வளையங்களை, தான் சாய்ந்துகொள்ளும் தூண்களை உடைத்து எரிக்க வேண்டும்.

இன்றைய நாளில் நாம் நினைவுகூரும் புனித பதுவை நகர் அந்தோனியார் இந்த நான்கையும் செய்கின்றார். அன்பின் கோடிஅற்புதராக இன்றும் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

இவர் மேலும் ஒரு துயரத்தை அனுபவித்தார்.

தன்னோடு இருப்பவர்களின் நிராகரிப்புதான் அது.

தன் திறன்கள் மற்றும் திறமைகள் நிராகரிக்கப்பட்டு, பாத்திரம் தேய்க்கும் பணிக்கு அவர் ஒதுக்கப்பட்டபோது, அவர் தன் வாழ்விலிருந்து விலகிக்கொள்ளவில்லை. விடாமுயற்சியோடு தொடர்ந்தார். அதனால்தான், அவரை அந்த நிலைக்கு அனுப்பியவர் வெறும் அருள்பணியாளராக நின்றார், இவர் புனிதராக உயர்ந்தார்.

நாமும் உயரலாம். அல்லது வாழ்க்கை முழுவதும் பாத்திரம் தேய்த்துக்கொண்டே இருக்கலாம்.

எங்கிருந்தாலும், தன் ஏரோடும், மாடுகளோடும் அங்கே குறுக்குசால் ஓட்ட வருவார் ஆண்டவர்.

2 comments:

  1. அழுது கொண்டே இருந்தாலும் உழுதுகொண்டே இருந்த ஒரு எலிசா போல்...தன் திறமைகள் ஒதுக்கப்பட்டு பாத்திரம் தேய்க்கும் பணிக்கு ஒதுக்கப்பட்ட போதும் தன் வாழ்க்கை முறையிலிருந்தும்,இறைவனிடமிருந்தும் விலகாத புதுவை அந்தோணியார் போல் ஒருவர் தன் வாழ்க்கையில் இறைவனின் குறுக்கீட்டை உணர்ந்தவராக..அவர் தரும் அருள்பொழிவை ஏற்பவராக..பழைய வாழ்க்கையிலிருந்து விடுபட்டவராக...தன் பாதுகாப்பு வளையங்களை உடைத்தெறிபவராக இருப்பின் எங்கிருந்தாலும் தன் ஏரோடும்,மாடுகளோடும், அங்கே குறுக்கு சால் ஓட்ட வருவார் ஆண்டவர்! அருமையானதொரு பதிவு.” குறுக்கு சால்” அர்த்தம் செறிந்த புது வார்த்தை. ‘இறைவனை முன்னிறுத்துபவருக்கு எல்லாமும் செல்வமே!’ வாழ்ந்து காட்ட வேண்டிய அழகானதொரு பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. அழுதுகொண்டே இருந்தாலும்,
    உழுதுகொண்டே இருக்க வேண்டும்..👌

    அவரை அந்த நிலைக்கு அனுப்பியவர்,வெறும் அருட்பணியாளராக இருந்தார்;
    இவர் புனிதரானார் 🤝👍

    ReplyDelete