Monday, June 29, 2020

காரணம் இல்லாமல்

இன்றைய (30 ஜூன் 2020) முதல் வாசகம் (ஆமோ 3:1-8, 4:11-12)

காரணம் இல்லாமல்

'நெருப்பின்றி புகையாது' என்பது பழமொழி.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலத்தில் இருக்கின்ற பிரச்சினை இரண்டு:

ஒன்று, இஸ்ரயேல் மக்கள் ஆமோஸின் இறைவாக்கை ஏற்க மறுக்கின்றனர். அவர் தானாக இறைவாக்குரைக்கின்றார் என்றும், அவரைக் கடவுள் அனுப்பவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

இரண்டு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்குக் காரணம் தாங்கள் இல்லை என்று கருதி, தங்கள் பாவங்களைப் பற்றி அக்கறையற்றவர்களாக, குறிப்பாக, அவர்கள் இழைத்த சமூக அநீதிகளைப் பற்றி அக்கறை இல்லாமல், பொறுப்புணர்வின்றி இருந்தனர். அதாவது, நம் அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் குறிப்பிட்டுருப்பது போல. அதாவது, சாத்தான்குளத்தில் சிறையில் இறந்தவர்களின் இறப்பு லாக்-அப் டெத் அல்ல. லாக்-அப் டெத் என்றால் அவர்கள் லாக்-அப்பிற்குள் இறந்திருக்க வேண்டும். இவர்கள் மருத்துவமனையில் இறந்தார்கள். ஆகவே, இது சாதாரண இறப்பு என்றார். இது எப்படி இருக்கிறது என்றால், பாம்பு கடித்த ஒருவர் கடித்த இடத்திலேயே இறந்தால்தான் அவர் பாம்பு கடித்து இறந்தார் என்று சொல்லப்படுவார். மாறாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் இறந்தால் அது ஏதாவது மூச்சுத்திணறல் அல்லது காய்ச்சலால் இறந்திருக்கலாம் அல்லது தானாக விரும்பி இறந்தார் என்றும் சொல்லப்படலாம். இதுதான் பொறுப்புணர்வற்ற நிலை.

இறைவாக்கினர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற பின்புலத்தையும், இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை என்ற பின்புலத்தையும் வைத்து இறைவாக்குரைக்கின்ற ஆமோஸ், அவர்களுடைய சமகாலத்து நடைமுறை வாழ்வில் உள்ள சில எடுத்துக்காட்டுக்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் தவற்றை அவர்களுக்கு உணர்த்துகின்றார். அவர் சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டுக்கள் மிகவும் எதார்த்தமானவையாக இருக்கின்றன:

'தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களா?'

'இரை அகப்படாமல் சிங்கம் கர்ச்சிக்குமா?'

'வேடன் தரையில் வலைவிரிக்காமல் பறவை கண்ணியில் சிக்குமா?'

'ஒன்றும் சிக்காமல் பொறி தரையிலிருந்து துள்ளுமா?'

'நகரில் எக்காளம் ஊதப்பட்டால் மக்கள் அஞ்சாமல் இருப்பார்களா?'

'ஆண்டவர் அனுப்பாமல் நகருக்குத் தீமை வருமா?'

ஆக, காரணம் இல்லாமல் காரியம் இல்லை. காரியம் என்பது காரணத்தின் மறுஉருவம். இதைப் புரிந்துகொள்பவர்கள் பொறுப்புணர்வுடன் நடப்பர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 8:23-27), இயல்பாக நடக்கின்ற இயற்கையின் சீற்றத்திற்கும், அதனால் எழும் தன் சீடர்களின் அச்சத்திற்கும் பொறுப்பேற்கின்ற இயேசு, காற்றையும் கடலையும் கடிந்துகொள்கிறார்.

இன்றைய நாளின் சிந்தனை இதுதான்:

பொறுப்பேற்பவருக்கு வாழ்வில் அனைத்தும் கட்டுப்படும்.

பொறுப்பைத் தட்டிக் கழிப்பவருக்கு அச்சமும் கலக்கமும் மிஞ்சும்.

1 comment:

  1. “காரணம் இல்லாமல் காரியம் இல்லை; காரணமென்பது காரியத்தின் மற்ற உருவம்; இதைப்புரிந்துகொள்பவர்களே பொறுப்புடன் நடப்பர்.....
    அப்படிப் பொறுப்பேற்பவருக்கு வாழ்வில் அனைத்தும் கட்டுப்படும்.
    பொறுப்பைத்தட்டிக் கழிப்பவர்களுக்கு அச்சமும்,கலக்கமும் மிஞ்சும்.”
    அசரீரியாக வந்து விழுகின்றன தந்தையின் வார்த்தைகள். எத்தனை ஆமோஸுகள் வந்திடினும் சிலரை மாற்றவே முடியாது..... என்பதற்கு சிறந்த உதாரணம் அமைச்சர் கடம்பூர் ராஜு போனறவர்கள்.
    பொறுப்பான விஷயங்களைப் பொறுப்புணர்வோடு பகிர்ந்து கொள்ளும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete