Sunday, June 28, 2020

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

இன்றைய (29 ஜூன் 2020) திருநாள்

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா' (காண். மத் 16:18) என்று பேதுருவையும், 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.

இவர்கள் நமக்குத் தருகின்ற வாழ்வியல் பாடங்கள் எவை?

அ. உயிர்ப்பு அனுபவம் (Resurrection Experience)

பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்' (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.

ஆ. பொருந்தக் கூடிய தன்மை (Compatibility)

பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: 'ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் ... யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் ... நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்' (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.

இ. எழுத்துக்கள் (Writings)

'பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்' என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.

1 comment:

  1. தங்களுக்குள் எதிரும் புதிருமாயிருந்த புனித.பேதுரு மற்றும் பவுலை ஒன்றிணைத்தது இயேசுவின் உயிர்ப்பு அனுபவமும்,அவரின் நற்செய்தியை எடுத்தியம்பும் பணியுமே என்கிறார் தந்தை. எதிரெதிரான இரண்டு தூண்கள் இயேசுவின் பெயரால் இணையமுடியுமெனில் நாமும் கூட நம்மிடமுள்ள வேற்றுமைகளைக் களைந்து அவர் நிமித்தம் ஒரு குடும்பமாய் இணையலாம் எனும் வாழ்வியல் பாடத்தைக் கற்றுத்தருகிறார்கள் இன்று நாம் விழா எடுக்கும் திருஅவையின் தூண்கள்.

    எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில்,நெருப்பு,தண்ணீர்,கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும்,நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.........தந்தையின் விளக்கம் திருஅவைக்கு இன்னொரு தூண் தயாராகிறார் என்பதைக் காட்டுகிறது.தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete