Thursday, June 11, 2020

விந்தையான கடவுள்

இன்றைய (12 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 19:9-16)

விந்தையான கடவுள்

வாழ்க்கை பல நேரங்களில் நம் முகத்தில் செங்கல்லாலும் சம்மட்டியாலும் அடிக்கும்.

ஒரு ரபியிடம் வருகின்ற இளவல், 'ரபி, நான் எல்லாருக்கும் நல்லதையே செய்கிறேன். யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. ஆனால், நான் மற்றவர்களை நடத்துவதுபோல அவர்கள் என்னை நடத்துவதில்லையே!' என முறையிடுகிறார். அதற்கு ரபி, 'தம்பி! நீ வெஜிடேரியன் மெனு அருந்துகிறவன் என்பதற்காக பாய்ந்து வரும் மாடு உன்னை முட்டாமல் விடுமா? நீ இறைச்சி உண்கிறாயோ, காய்கறி உண்கிறாயோ! மாடு அதைப் பொருட்படுத்துவதில்லை! அது தன் சுபாவத்தில் செயல்படும்! நாய் குரைப்பது அதன் சுபாவம்! ஆக, மனிதர்கள் செயல்பாடும் அவர்களுடைய சுபாவம்!'

எலியா நானூறு பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றுவிடுகிறார்.

மற்றவர்கள் முன் தன் கடவுள் யாரென்று நிரூபித்த அவருக்கு தன் கடவுள் யாரென்று தெரியவில்லை. தெரியாமல் தவிக்கின்றார். நானூறு இறைவாக்கினர்களைக் கொன்று பாகால் வழிபாட்டை நிறுத்திய அவருக்கு, கடவுள் நன்மை அல்லவா செய்திருக்க வேண்டும்? ஆனால், கடவுள் ஒரு நன்மையும் செய்யவில்லை. நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவருடைய உயிருக்கே உலை வைக்கின்றார். இசபெலுக்கு தப்பி ஓடுகின்றார் எலியா.

பாவம் அவர்! அவர் செய்த நன்மையை கடவுள் அவருக்குத் திருப்பிச் செய்யவில்லை!

ஆகையால்தான், 'ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்! என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' என்று தற்கொலை எண்ணத்தால் அலைக்கழிக்கப்படுகிறார். உலகை வென்ற ஒருவர் தன்னையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்கும் போவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால் வரும் வெற்றிடமே இந்த எண்ணத்திற்குக் காரணம்.

இந்த வெற்றிடத்தை நிரப்ப கடவுள் முன் வருகின்றார். எலியாவுக்குத் தன்னை மெல்லிய ஒலியில் வெளிப்படுத்துகின்றார். சூறாவளியிலும் தீயிலும் கடவுள் இல்லை. இதை ஓர் உருவகமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எலியாவின் உள்ளம் சூறாவளி போலும், தீ போலும் எரிந்துகொண்டிருக்க, அங்கே கடவுள் இல்லை. மனம் இளைப்பாறி தென்றல் மாதிரி ஆனவுடன் அங்கே கடவுள் வருகின்றார்.

இங்கே கடவுளை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. ஏன்?

முதலில், கடவுள்தான் எலியாவிடம், 'வெளியே வா! மலைமேல் என் திருமுன் வந்து நில்!' என்கிறார். ஆனால், தன்னை வெளிப்படுத்தும்போது, 'எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?' எனக் கேட்கிறார்.

கடவுளுக்கு அம்னேசியாவா அல்லது அல்ஸைமர் நோயா என்று தெரியவில்லை.

'யோவ்! நீ தான இங்க நிக்கச் சொன்ன! இப்ப இங்க என்ன செய்றனு? கேட்கிற!' என்று மனதுக்குள் முனகியிருப்பார். ஏனெனில், எலியா கோபக்காரர்.

எலியாவை கடவுள் ஒரு வார்த்தைகூட சொல்லிப் பாராட்டவில்லை.

மாறாக, 'உன் வேலை முடிந்துவிட்டது' என்கிறார். எவ்வளவு கொடுமை!

ஒரு தலைவரிடம், 'ஐயா, வேலை முடிந்து விட்டது!' என்று பணியாள் சொல்ல, 'நீ போகலாம்! உனக்குப் பதிலாக வேறு ஆள் போட்டாயிற்று!' என்று சொன்னாள் அவனுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எலியாவுக்கு.

இந்த நிகழ்விலிருந்து என்ன தெரிகிறது?

ஒன்று, நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மையே கிடைக்கும் அல்லது நடக்கும் என்பது முட்டாள்தனம்.

இரண்டு, தீமையை ஒரு நாள் அழிக்கப்படும் என நினைப்பதும் முட்டாள்தானம். எலியா பாகால் இறைவாக்கினர்களை அழித்துவிட்டதால் இஸ்ரயேலில் பாகால் வழிபாடு முடிந்துவிடவில்லை. அது இன்னும் அதிகமாக தொடர்ந்தது.

மூன்று, கடவுள் விந்தையாகச் செயலாற்றுபவர். 'போய் அவனை அடி!' என்பார். அவனைப் போய் அடித்தால், 'ஏன் அவனை அடித்தாய்?' என்பார். ஏனெனில் கடவுள் என்பவரே முரண்தான்.

நான்கு, இந்த உலகில் நம்மை விட்டால் யாருமில்லை என்ற நினைப்பு பெரிய மடமை. அப்படி எலியா நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், 'நீ போய் எலிசாவை அருள்பொழிவு செய்!' என அவரை அனுப்பிவிடுகின்றார்.

நற்செயல்: இந்த நான்கு பாடங்களில் ஏதாவது ஒன்றை நம் வாழ்வோடு பொருத்திப் பார்த்தல்.

3 comments:

  1. “சூறாவளி போலும்,தீ போலும் எரிந்து கொண்டிருந்த எலியாவின் மனத்தில் கடவுள் இல்லை; மனம் இளைப்பாறி தென்றல் மாதிரி ஆனவுடன் அங்கே கடவுள் வருகிறார்.”.... நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜம். கடவுளின் பல முரண்பாடுகளாகத் தந்தை எடுத்து வைக்கும் விஷயங்களை நான் ஒத்துக்கொள்வதா வேண்டாமா எனும் போராட்டம் ஒரு புறமிருக்க ‘நம்மை விட்டால் யாருமில்லை’ என்ற நினைப்பு எலியாவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக “ நீ போய் எலிசாவை அருள் பொழிவு செய்” எனும் கடவுள் இன்னும் கொஞ்சம் தேவையாகப்படுகிறார்.காரணம் ...பல நேரங்களில் “இவ்வுலகமே நம் தலைமேல் தான் இயங்குகிறது எனும் நினைப்பில் தன்னையும் குழப்பிக் கூட இருப்பவர்களையும் குழப்புபவர் பலர்.... என்னையும் சேர்த்து.”
    கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் இன்றைக்கு இந்தக்கோணத்தில் கடவுளை நினைத்தால் தான் அவர் நம் உணர்வுகளைப் புரிந்துகொள்வார் போல் தெரிகிறது. ரொம்ப ப்ராக்டிக்கலானதொரு பதிவு.தந்தைக்குப் பாராட்டு!

    அந்த நான்காவது பாடம் தான். “என்னைச்சுற்றி இருப்பவர்கள் என்னைவிட மேலானவர்கள்” என்ற நினைப்பை என்னில் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உணரச் செய்த தந்தைக்கு நன்றிகள்!!!.

    ReplyDelete