Monday, July 9, 2018

ஆயனில்லா ஆடுகள்

நாளைய (10 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:32-38)

ஆயனில்லா ஆடுகள்

இயேசுவின் பரிவுள்ளத்தைப் பற்றிப் பதிவு செய்கின்ற மத்தேயு நற்செய்தியாளர், 'திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்' என்கிறார்.

ஆயனில்லா ஆடு எப்படி இருக்கும் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார் மத்தேயு: 'அலைக்கழிக்கப்படும்,' 'சோர்ந்திருக்கும்.'

நான் என் வாழ்வில் அடிக்கடி உணர்ந்த ஒன்று இதுதான். நாளை செய்வதற்கு இதெல்லாம் இருக்கிறது என்று தூங்கப் போகும்போது அடுத்த நாள் மிக அழகாக, நேரத்தோடு விடியும். சுறுசுறுப்பு நிறைய இருக்கும். 'நாளைக்கு செய்ய ஒன்னுமில்லையே' என்ற எண்ணத்திலோ, 'என்ன செஞ்சி என்ன ஆகுப்போது?' என்ற எண்ணத்திலோ தூங்கச் செல்லும்போது என்னால் நேரத்திற்கு எழ முடிவதில்லை. எழுந்தாலும் நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும். ஆக, 'நாளைக்கு இதைச் செய்ய வேண்டும்,' 'இப்படி போக வேண்டும்' என்ற திசை சரியாக இருந்தால் சோர்வு இருப்பதில்லை. திசை சரியாக இல்லாதபோது மனம் அலைக்கழிக்கப்படுகிறது. 'இதுவா, அதுவா, இதுவும் அதுவுமா' என்று மனம் அலைக்கழிக்கப்படும்போது சோர்வு படுக்கை விரித்துப் படுத்துக்கொள்கிறது.

இந்த திசை உணர்வு நம் உள்ளிருந்து வரலாம். அல்லது வெளியிருந்து வரலாம்.

மிகவும் கொடிய உணர்வுகளில் ஒன்று சோர்வு. இந்தச் சோர்வு அலைக்கழிக்கப்படுவதால் வருகிறது என்றால் அது இன்னும் கடினம். ஆக, நான் சோர்வுறாவண்ணம் என் திசை உணர்வை சரியமைத்துக்கொள்ளவம், திசையின்றி திரிவோருக்கு பரிவு காட்டுவதும் என் எண்ணமாய், செயலாய் இருந்தால் எத்துணை நலம்!



1 comment:

  1. விவிலியத்தின் வரிகளைப்படிக்கையில் என்னைக் கண்கலங்கச்செய்யும் பல வரிகளில் ஒரு வரி..." திரண்டிருந்த மக்கள் மேல்( அவர்கள் ஆயனில்லா ஆடுகளாக இருப்பது கண்டு)அவர் பரிவு கொண்டார்" என்பதாகும். " பரிவு" என்பது நாம் காண முடியா தெய்வத்திற்கு மட்டுமல்ல...நம் கண்கள் காணும் தெய்வங்களான நம்மைப் பெற்றவர்களுக்கும் உரியதாகும்.மற்றவர்களிலிருந்து பெற்றவரை வேறுபடுத்திக் காட்டுவது இந்தப் " பரிவு" மட்டும் தான்.ஆனால் பெற்ற பிள்ளைகளிடமிருந்து அவர்களுக்கு அது திருப்பிக்கிடைக்குமா எனில் அது கேள்விக்குறியே! ஒருவர் மனம் அலைக்கழிக்கப்படுவதும்,சோர்வடைந்து போவதும் இந்த "பரிவு" கிடைக்காதபோதுதான்..முதலில் ஒருவர் "தான் சோர்வுறாமல் தன் திசை உணர்வை சரியமைத்துக்கொள்ளவும்,அடுத்து திசையின்றித் திரிவோருக்கு பரிவு காட்டுவதும் அவரின் எண்ணமாய்,செயலாய் இருந்தால் எத்துணை நலம்!" என்கிறார் தந்தை. "பரிவு"... எனும் அழகான வார்த்தை நம் வாழ்க்கையின் செயல் வடிவமாகிட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!.....தந்தைக்கும் சேர்த்து!!

    ReplyDelete