Tuesday, July 10, 2018

தத்தி தத்தி

நாளைய (11 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:1-7)

தத்தி தத்தி

இயேசுவிடம் குழு உணர்வு மற்றும் இன உணர்வு இருந்தது என்று காட்டுவதற்கு மூன்று எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுவது வழக்கம்:

அ. பன்றிக்கூட்டத்திற்குள் தீய ஆவியை அனுப்பியது - யூதர்கள் ஆடுகளை தூய விலங்குகளாகவும், பன்றிகளை தூய்மையற்ற விலங்குகளாகவும் கருதினர்.

ஆ. பெனிசிய நகரப் பெண்ணிடம் பிள்ளைகளுக்கு உரியதை எடுத்து நாய்களுக்குப் போடுவதில்லை என்று சொன்னது - இங்கே இஸ்ரயேல் மக்கள் பிள்ளைகள் எனவும், புறவினத்து மக்கள் (நீங்களும், நானும்) நாய்கள் என்றும் சொல்லப்படுவது.

இ. நாளைய நற்செய்தி வாசகப் பகுதி - 'பிற இனத்தாரின் பகுதிக்கோ, சமாரியாவின் நகருக்கோ செல்ல வேண்டாம். இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்' என்று சொல்வது.

இயேசுவுக்கு இன உணர்வு அல்லது குழு உணர்வு இருந்ததா? என்ற கேள்வியை இங்கே எழுப்புதல் வேண்டாம். இன உணர்வு இருந்திருக்கும். இருந்திருந்தால் வியப்போ தவறோ இல்லை. ஏனெனில், மனிதர்கள் தங்கள் பாதுகாப்பின்மைக்கு மாற்றாகத் தேடுகின்ற முதல் உணர்வு குழு உணர்வே.

இயேசு ஏன் தன் மக்களிடம் பணியை செய்யச் சொல்லி அனுப்புகின்றார்?

மாற்றத்தைத் தன் இல்லத்திலிருந்து, தன்னிடமிருந்து தொடங்க நினைக்கின்றார் இயேசு. மேலும், தன் இல்லத்தைச் சரி செய்யாமல் அடுத்தவரை சரி செய்ய முயன்றால் அது உயர்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும். ஒருவேளை பணி கடினமானதாக இருந்தால் தொடக்கத்திலேயே சீடர்கள் களைப்படைவர். தெரிந்த இடத்தில் தொடங்குவது பணியை இலகுவாக்கும்.

ஆக, இன்று எனக்குத் தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கு நான் கடந்து செல்ல வேண்டும் - கொஞ்சம் கொஞ்சமாக. குழந்தை தத்தி தத்தி நடை பயிலுவது போல.


2 comments:

  1. Good reflection Yesu

    ReplyDelete
  2. " இயேசுவுக்கு இன உணர்வு இருந்திருக்கும்.இருந்திருந்தால் வியப்போ,தவறோ இல்லை.ஏனெனில் மனிதர்கள் தங்கள் பாதுகாப்பின்மைக்கு மாற்றாகத் தேடுகின்ற முதல் உணர்வு குழு உணர்வே." உண்மையே! இரத்தமும்,சதையுமாக உள்ள நம் உறவுகளை,இனங்களை நேசிக்க முடியாத ஒருவனால் அடுத்தவரை நேசிப்பதோ,சரி செய்வதோ இயலாத ஒன்று. ஆனால் 'இனம்' என்னும் பெயரில் 'சாதி' எனும் ஒரு உணர்வு விஷ விருட்சமாக வளராதவரை இந்த 'இன உணர்வு' ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். தத்தித் தத்தி நடை பயிலும் ஒரு குழந்தையாக அகத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை புறத்திற்கு எடுத்துச்செல்வதே " இன உணர்வின்" அர்த்தம் புரிந்து கொண்ட ஒருவனின் செயலாகும்....செயலாக இருக்க வேண்டும்.
    எல்லாவற்றிலும் நல்லது- தீயது இருப்பது போல மக்கள்- மாக்கள் எனும் விஷயமும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.ஆனாலும்இயேசு இஸ்ரயேலரைப் பிள்ளைகள் எனவும்,புறவினத்தாரை அதாவது உங்களையும் என்னையும் நாய்கள் எனவும் குறிப்பிட்டிருப்பாரா என்பது நெருடலான ஒரு விஷயம்.தந்தைதான் விளக்க வேண்டும்........

    ReplyDelete