Wednesday, July 11, 2018

கொடையாக பெறுதலும், கொடுத்தலும்

நாளைய (12 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:7-15)

கொடையாக பெறுதலும், கொடுத்தலும்

இயேசு தன் சீடர்களைப் பணிக்கு அனுப்பும்போது கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானதாக நான் பார்ப்பது இதைத்தான்: 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்.'

இயேசுவின் பணியாளர் மட்டுமல்ல, நாம் அனைவருமே கொண்டிருக்க வேண்டிய வாழ்க்கைப்பாடமாக இது இருக்கலாம் என நினைக்கிறேன்.

நம் பிறப்பே ஒரு கொடைதான். ஏனெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உறவுப்பரிமாற்றத்தில் பகிரப்படும் திரவத்தில் மிகச் சிறிய ஒன்று வெற்றிபெற நாம் பிறக்கிறோம். மற்ற அனைத்தும் அப்படியே அழிந்துவிடுகின்றன. இது இயற்கையின் செயலோ அல்லது இறைவனின் செயலோ ஏதோ ஒரு வகையில் நாம் பாக்கியசாலிகள். அந்த நேரத்தில், 'எனக்கு இது வேண்டும்' என்றும், 'எனக்கு இது தகுதி இருக்கிறது' என்றும் அந்தத் துளி சொல்வதற்கு வழி இல்லை. இது ஒரு ப்யூர் சான்ஸ். கொடையாக வரும் சான்ஸ்.

நாம் பிறக்கும்போது இந்த உலகில் நம்மைக் கைகளில் ஏந்தி எடுக்க நீட்டப்பட்ட முதற்கைகள் நாம் பெற்ற கொடைகளே. தொடர்ந்து ஒவ்வொரு பொழுதும் வாழ்க்கை நம்மைக் கொடைகளால் உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. ஆனால் வளர வளர இந்த உணர்வு மறைந்து, 'இது நானே செய்தது,' 'இது நான் உழைத்தது,' 'இது நான் படித்தது,' என 'நான் பெற்ற உணர்வு' என்னை ஆள்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த உணர்வோடு சேர்ந்து சோர்வும், விரக்தியும் வந்துவிடுகிறது. சோர்வு, ஏனெனில் என் மூளை 'இன்னும் அதிகம்' என்று ஓடிக்கொண்டே இருக்க நினைக்கிறது. விரக்தி, ஏனெனில் என் உழைப்பிற்கேற்ற கனி நிறைய நேரம் கிடைப்பதில்லை (உழைக்காமலேயே சிலருக்கு கனி கிடைக்க, அவரோடு என் மனம் ஒப்பிட்டு விரக்தியை இன்னும் அதிகமாக்குகிறது).

ஆனால், நான் பெற்றது அனைத்தும் கொடையே என்னும் எண்ணம் என்னில் உதித்துவிட்டால் என்னில் நன்றி, நிறைவு, அன்பு என்னும் மூன்று உணர்வுகள் இயல்பாகவே வந்து குடிகொள்ளும். இந்த மூன்று உணர்வுகளால் என் அகம், புறம் என அனைத்தும் பிறருக்கான கொடையாகவே மாறிவிடும்.

ஆக, என் வாழ்வியல் இருப்பு என்பது வெறும் குழாய் போன்று ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் கொடுப்பவர், இந்தப் பக்கம் பெறுபவர். கொடுக்கும் இறைவனுக்கும், பெறும் மற்றவருக்கும் இடையே நான் வெறும் குழாயாக இருக்கிறேன். காலப்போக்கில் என் இருப்பு மறக்கப்பட்டாலும், என் பயன்பாடு மற்றவருக்கு இருந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு, என் வாழ்வின் இருப்பு மற்றும் இயக்கத்தை நான் பெற்ற கொடையாகவும், நான் வழங்கும் கொடையாகவும் உணர்ந்தால் எத்துணை நலம்!

2 comments:

  1. Good Reflection Yesu

    ReplyDelete
  2. " கொடையாகவே பெற்றீர்கள்; கொடையாகவே கொடுங்கள்" எத்தனை அழகான விஷயம் ..இதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு நம்மால் இதை வாழ்வாக்க முடிந்தால்!" நம் வாழ்வே ஒரு கொடைதான்"... இந்த வரியில் இருக்கும் உண்மையை மெய்ப்பிக்கத் தந்தை எடுத்திருக்கும் முயற்சியைப்பாராட்டுகிறேன். "நான் பெற்றது அனைத்தும் கொடையே எனும் எண்ணம் நம்மில் வந்துவிட்டால் என்னில் 'நிறைவு', 'நன்றி','அன்பு' எனும் மூன்று உணர்வுகள் தாமாக வந்து குடிகொள்ளும்.இந்த உணர்வுகளால் நம் அகம்,புறம் என அனைத்தும் பிறருக்கான கொடையாக மாறிவிடும்.எத்தனை அழகான உண்மை! இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.நாம் ஒருவருக்குக் கொடையாக மாறுகையில் இன்னொரு கொடை நமக்காக்க் காத்திருக்கும் என்பதும் உண்மை.இதை மனத்தில் கொண்டே நம் பெரியவர்களும் " இறைக்கிற கிணறுதான் சுரக்கும்" என்றும்," முன் கை நீண்டால் தான் முழங்கை நீளும் என்றும் சொல்லியிருப்பார்களோ?! ஆகவே "கொடுப்போம்! அலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம். கொடுத்தலின் பெருமை சொல்லும் ஒரு அழகான பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete