Friday, July 13, 2018

ஆன்மாவைக் கொல்ல இயலாமல்

நாளைய (13 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:24-33)

ஆன்மாவைக் கொல்ல இயலாமல்

'ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்' என்று தம் சீடர்களுக்கு நாளைய நற்செய்திப் பகுதியில் அறிவுறுத்துகின்றார் இயேசு.

நிற்க.

கே. பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் 1969ல் வெளிவந்த 'இருகோடுகள்' திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, நாகேஷ் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் கலக்கிய திரைப்படம் இது. 'இருகோடுகள்' என்ற தலைப்பு இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் ('கோபிநாத்') அவர்களின் இரண்டு மனைவிரை - சௌகார் ஜானகி ('ஜானகி'), ஜெயந்தி ('ஜெயா') - ஆகியோரைக் குறித்தாலும், இது சொல்ல வரும் கருத்து இதுவன்று. அதாவது, வாழ்வில் இரு கோடுகள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. நாம் இந்த இருகோடுகளைக் கையாளுவதைப் பொறுத்தே நம் வாழ்வின் வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அமைகிறது. எப்படி? இன்று காலையில் நான் உடையைத் தேர்ந்தெடுத்து அணியும்போது சட்டையில் ஒரு பட்டன் உடைந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். புதிய சட்டை, எனக்குப் பிடித்த சட்டையில் பட்டன் உடைந்துவிட்டதே என்று கொஞ்சம் வருத்தம் வருகிறது. இருந்தலும் அத்தோடு காலை சாப்பாட்டுக்குப் போகிறேன். உப்புமாவில் கடலை என்று நான் கடித்த கல்லால் என் பல் ஒன்ற உடைந்துவிடுகிறது. இரத்தம் வருகிறது. பல் உடைந்துவிட்டது என்ற வருத்தம். இந்த வருத்தத்தில் பட்டன் இல்லாத வருத்தம் காணாமல் போய்விடுகிறது. ஆக, பெரிய வருத்தம் வரும்போது சின்ன வருத்தம் மறைந்துவிடுகிறது.

நிற்க.

இயேசுவின் போதனை பெரும்பாலும் இருகோடுகள் போதனையாக இருக்கிறது. இரண்டு கோடுகளைப் போட்டு, அதில் நாம் எந்தக் கோட்டை நீட்ட வேண்டும், எந்தக் கோட்டைக் குறைக்க வேண்டும் என்ற தெரிவை அவர் நம்மிடமே விடுகின்றார்.

எ.கா. உணவை விட உடலும், உடையைவிட உயிரும் மேலானதல்லவா!

இதில், உணவு என்பது சின்னக் கோடு, உடல் என்பது பெரிய கோடு. உடை என்பதும் சின்னக்கோடு, உயிர் என்பதும் பெரியகோடு. சின்னதைப் பற்றிய கவலை மறைய பெரியதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

இப்படித்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில், 'ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களைக் குறித்து அஞ்சாதீர்கள்' என்கிறார் இயேசு.

உடல் சின்னக் கோடு என்றால், அதைவிட பெரிய கோடு ஆன்மா.

ஆக, சின்னதை விடுத்து பெரியதை நோக்கி நம் வாழ்வு அமைய வேண்டும்.

இதைத்தான் மேலாண்மையியலில் முதன்மைப்படுத்துதல் என்கிறார்கள். முதன்மைப்படுத்துதல் இல்லாததால்தான் நாம் பல நேரங்களில் தேவைற்றவற்றிற்குப் பயப்படவும், கவலைப்படவும், குற்றவுணர்வுகொள்ளவும் செய்கிறோம்.

இரு கோடுகள் - இடுவோம் சரியாக!

1 comment:

  1. "சின்னக்கோடு- பெரிய கோடு"... இவை எல்லோருக்கும் ஒன்று போல இருப்பதில்லை.அவரவர் ப்ரயாரிட்டியைப் பொறுத்தே அமைகிறது.உணவு சின்னக்கோடு என்றால் உடல் பெரிய கோடு என்றும்,உயிர் சின்னக்கோடு என்றால் ஆன்மா பெரிய கோடு என்றும் கூறுகிறார் தந்தை.ஆனால் இந்த உடலையும்,உயிரையும் காத்துக்கொள்ள எப்படி எப்படியோ வாழ்கிறார்களே! அவர்களுக்கு " ஆன்மா" எனும் சொல் ஏதேனும் பொருளைத்தருமா என்ன? பெரிய விஷயங்களுக்காக சிறிய விஷயங்களைத் தியாகம் செய்வது தப்பில்லை என்கிறது இன்றையப்பதிவு.ஆனால் ' இரு கோடுகள்' என்பவை நாம் இடும் கோடுகள் இல்லையே! நமக்கென்று யாரோ இட்ட கோடுகளை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதுதானே விஷயம்! ஆனாலும் பாலச்சந்தரின் ' "இருகோடுகளைக்" கண் முன் காட்டிய தந்தை இந்தக்கால இரசிகர்களையும் விஞ்சி நிற்கிறார். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete