Wednesday, July 4, 2018

எது எளிது?

நாளைய (05 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:1-8)

எது எளிது?

முடக்குவாதமுற்ற மனிதரைக் குணமாக்கும் இயேசு, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். 'பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உண்டு' இயேசுவின் சமகாலத்தவரின் நம்பிக்கை. ஆக, கடவுளுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை இவர் பயன்படுத்துவதால் இவர் தன்னையே கடவுளாக்கி கொள்கிறார் என்பதும், கடவுளுக்குத் தன்னையே இணையாக்குகிறார் என்பதும், ஆகவே இது பழித்துரைத்தல் என்பதும் அவர்கள் வாதம். முடக்குவாதத்தைவிட அவர்களின் வாக்குவாதம் பெரிதாக இருக்கிறது.

'எது எளிது?' எனக் கேட்ட இயேசு, 'எழுந்து நட!' என்பதா? அல்லது 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா?  எனக் கேட்கிறார்.

'எழுந்து நட' என்பது எளிதுதான். ஆனால், பாவமே நோய்க்குக் காரணம் என்பதால் நோயை நீக்குவதைவிட காரணத்தை நீக்க வேண்டும் என விழைந்த இயேசு கடினமான ஒன்றைத் தெரிந்து கொள்கின்றார். மேலும் இப்படிச் செய்வதன் வழியாக பாவத்தால் இந்த உலகின் காரணிகளைக் கட்டுவித்த நிலையையும் சாடுகின்றார். ஆக, ஒருவன் ஒரு மாதிரி இருக்கிறான் என்றால் அவன் அப்படி இருக்கிறான் அவ்வளவுதான். அதில் போய் பாவம், புண்ணியம் ஆகியவற்றை எல்லாம் சேர்க்க முடியாது.

வெளியே முடக்கவாதத்தையும், உள்ளே இவர்களின் தீய எண்ணத்தையும் ஒன்றாகக் குணமாக்குகிறார் இயேசு. அடுத்தவருக்கு நல்லது நடப்பதைத் தடுக்கும் எண்ணமே தீய எண்ணம்.

1 comment:

  1. சாலக்குடி போன்ற இடங்களில் நாம் தியானம் செய்தோமெனில் நமது குழந்தைப்பருவத்திலிருந்தே நமக்குத் தெரிந்தோ,தெரியாமலோ நம்மில் விழுந்த அத்தனை தழும்புகளும், இரணங்களும் நம் நோய்க்கு மூலகாரணம் என்கிறார்கள். "நோய் நாடி,நோய் முதல் நாடி" எனபதன் பொருளை விளங்கிக்கொள்ளாமல் நாம் பல சமயங்களில் வெளியே கண்ணுக்குத்தெரியும் நோய்க்கே வைத்தியம் பார்க்கிறோம்.இங்கு தான் நிற்கிறார் நம் பரமன் நமக்கு முன்னோடியாக...நம் உள்ளும் புறமும் நோய்தீர்க்கும் மருந்தாக! எத்தனை முறை நாம் நம்மை அடுத்தவருக்கு ஒரு நல்லது நடப்பது கண்டு புழுங்கிச்சாகிறோம்.இதை நாம் மேற்கொண்டாலே போதும் நம் உள்ளும்,புறமும் சுகமாக.மற்றபடி " பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது" என்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது. என்னை அடித்தவனை நான் திருப்பி அடிக்காமல் விடுவது என் மன்னிக்கும் குணத்தினாலே தானன்றி அங்கு இறைவனை எப்படி அழைக்க முடியும்?.இறைவன் நம் தீச்செயல்களை மன்னிக்கிறார் எனில்,அடுத்தவர் நமக்குச் செய்யும் தீச்செயல்களை மன்னிக்கும் நாமும் கூட இறைவனுக்குச் சம்மானவர் தானே! கொஞ்சம் குழப்புகிறேன் என்று நினைக்கிறேன்.தந்தை என்னை மன்னிக்க வேண்டும்....

    ReplyDelete