Thursday, July 19, 2018

உன் கண்ணீரைக் கண்டேன்

நாளைய (20 ஜூலை 2018) முதல் வாசகம் (எசாயா 38:1-6,21-22,7-8

உன் கண்ணீரைக் கண்டேன்

நாம் அதிகமாகக் கேட்டுள்ள அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களில் ஒன்று 'விண்ணப்பத்தைக் கேட்பவரே' என்பது. இந்தப் பாடலின் பின்புலத்தில் எசாயா 38:1-6,21-22,7-8 இருந்ததாக அவரே பகிர்ந்துகொள்கின்றார். இந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கும். இந்த நிகழ்வும் எனக்குப் பிடிக்கும் என்பதால் இதைப்பற்றிப் பகிர விழைகிறேன்.

எசேக்கியா என்ற அரசன் நோய்வாய்ப்பட்டு சாகக் கிடக்கிறான். அவரைக் காண வருகின்ற இறைவாக்கினர் எசாயா, 'நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் நீர் சாகப் போகிறீர். பிழைக்க மாட்டீர்' என்கிறார்.

நோய்வாய்ப்பட்டு சாகக்கிடக்கிறவரைப் பார்க்க வருபவர், 'நீ கவலைப்படாதப்பா! நல்லா ஆயிடுவ!' என்று நம்பிக்கை வார்த்தை கூறினால்தானே நலமாக இருக்கும். அதைவிட்டு, 'நீ சாகப்போகிறீர்' என்று சொல்வதோடு, 'நீர் பிழைக்க மாட்டீர்' என மீண்டும் சொல்கிறார் எசாயா.

இதுவரை எசாயாவைப் பார்த்துக்கொண்டிருந்த எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்பக்கம் திருப்பிக்கொண்டு, 'ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும், உம் பார்வையில் நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்!' என மன்றாடுகின்றார். மன்றாடி கண்ணீர் சிந்தி தேம்பி தேம்பி அழுதார்.

தேம்பி தேம்பி என்றாவது அழுதிருக்கிறீர்களா?
சின்ன வயதில் நான் அழுததாக எனக்கு நினைவிருக்கிறது. தேம்பி அழும்போது உடல் வியர்க்கும், கண்கள் நிறைய நீர் சுரக்கும், வயிறும், நெஞ்சும் அப்படியே உள்ளே சென்று வெளியே வரும், மூச்சு விடும் காற்று வாயோடு சேர்ந்து வரும். கண்ணீர்விட்டு நாம் அழும் உச்சகட்ட அழுகை இதுதான் என நினைக்கிறேன். மேலும், தேம்பி தேம்பி அழும்போது சில நேரங்களில் விக்கல் வந்துவிடும். விக்கல் வந்துவிட்டால் இறந்துவிடுவார்கள் என்பது எபிரேய நம்பிக்கை. ஆக, மரண அழுகையாக இருக்கும் இதுதான் மனிதர்களின் உச்சகட்ட கையறுநிலை என்னும் அனுபவத்தின் வெளிப்பாடு. தேம்பி அழுபவர்கள் அப்படியே தூங்கிப் போவார்கள். பசியாற விரும்பமாட்டார்கள்.

ஒரு அரசன் தேம்பித் தேம்பி அழுகின்றான். இதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே நமக்கு அரசன்மேல் பரிவு வந்துவிடுகிறது.

நாட்டை ஆளும் அரசனே என்றாலும், அவனுக்கென்று எல்லாமே இருந்தாலும் நோய், மூப்பு, இறப்பு என்ற நிலைகளில் அவன் அழவே செய்கின்றான்.

எசேக்கியாவின் கண்ணீர் வீணாகவில்லை. அந்தத் தேம்பல் உடனடியாக ஆண்டவரை எட்டுகின்றது. மீண்டும் எசாயா வழியாக ஆண்டவரே பேசுகின்றார்: 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை 15 ஆண்டுகள் மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்.'

இந்த விண்ணப்பம் கேட்கப்பட்டது என்பதன் அடையாளமாக கதிரவனின் நிழல் பத்து பாத அளவு பின்னேறுமாறு செய்கின்றார் ஆண்டவர்.

இவ்வாறாக, ஒரே மன்றாட்டில் தனக்கான உடல் நலத்தையும், தன் மண்ணிற்கான வெற்றியையும் பெற்றுவிடுகின்றார் எசேக்கியா.

இன்னும் 15 ஆண்டுகள்தாம் வாழப்போகிறோம் என்ற வாழ்க்கை எசேக்கியாவிற்கு எப்படி இருக்கும்?

வாழ்க்கையில் வேகம் இருக்கும். முதன்மையானவற்றை மட்டும் அவர் செய்ய முற்படுவார். அவசியமானதை மட்டும் அடையாளம் கண்டு செயல்படுத்துவார்.

எசேக்கியாவின் மறுபிறப்பு இஸ்ரயேலின் மறுபிறப்பும்கூட.

கண்ணீர் கடவுளின் கதவைத் தட்டுகிறது என்பதற்கு எசேக்கியாவின் தேம்புதல் சாட்சி.

1 comment:

  1. ' கண்ணீர்' இது வலியது என்பது பலபேருக்குத் தெரிவதில்லை.இறைவனை சாட்சியாக வைத்து நாம் விடும் ஒரு சொட்டுக்கண்ணீர் கூட அதன் பலனை நமக்குக் கிட்டாமல் போகாது. கல் நெஞ்சர்களைக் கூடக் கலங்கடிக்கும் சக்தி தந்தை பெர்க்மான்சின் பாடல்களுக்கு உண்டு.அதில் ஒன்று தான் தந்தை குறிப்பிட்டுள்ள பாடல்.நம்முடைய சோதனையான நேரங்களிலும் " ஆண்டவரே! நான் உம் வழியில் உண்மை மனத்துடன் நடந்ததையும்,மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும்,உம் பார்வையில் நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்" என்று சொல்ல முடிந்தால் எத்துணை நலமாயிருக்கும்! ஒரு சாதாரண மனிதனின் கண்ணீர் கடவுளின் கதவைத்தட்டுகிறது எனில் ஒரு தாயின் கண்ணீர் தூங்கும் கடவுளையும் துயிலெழச்செய்யும்....புனித மோனிக்காவின் கண்ணீர் போல. அழகானதொரு பதிவு!
    தந்தையின் ஆராய்ச்சி ஒருவர் அழுவதைக்கூட விட்டுவைக்கவில்லை போல் தெரிகிறது. அழுகையின் பல படிகளை எத்துணை அழகாக விவரிக்கிறார்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete