Thursday, July 5, 2018

என்னைப் பின்பற்றி வா

நாளைய (6 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:9-13)

என்னைப் பின்பற்றி வா

நாளைய நற்செய்தி வாசகத்தில் மத்தேயுவின் அழைப்பைப் பற்றி வாசிக்கின்றோம். இத்தாலிய ஓவியர் காரவாஜ்ஜோ என்பவரின் வண்ணத்தில் ஒளிரும் 'மத்தேயுவின் அழைப்பு' என்னும் ஓவியம் மிகவும் பாராட்டுதற்குரியது. வெறும் 'வெளிச்சம்' 'இருட்டு' என்ற இரு கூறுகளை வைத்து மிக அழகாக கதைமாந்தர்களை வரைந்துள்ளார் ஓவியர். இந்த ஓவியத்தின்படி வரி வசூல் மையத்தில் அமர்ந்திருக்கும் மத்தேயு குனிந்து நாணயங்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவரைச் சுற்றிலும் சில இளவல்கள் அமர்ந்திருப்பர். அவர்கள் அவரின் நண்பர்களாக இருக்கலாம். அல்லது வரிகொடுக்க வந்தவர்களாக இருக்கலாம். அல்லது உடன் அலுவலர்களாக இருக்கலாம். வாசலிலிருந்து இவரை நோக்கி ஒரு ஒளிக்கற்றை வரும். அந்த ஒளிக்கற்றையின் பின்புலத்தில் ஓர் இளைஞர் இவரை நோக்கி விரல் நீட்டுவார். இயேசுவை ஓர் அழகான இளைஞராக பதிவு செய்திருப்பது ஓவியரின் அடுத்த பண்பு. இயேசுவின் விரல் நீ;ட்டப்பட்ட அந்நேரம் எல்லாருடைய விரல்களும் மத்தேயுவை நோக்கி நீளும். இறுதியில் விரல் யாரை நோக்கி நீட்டப்படுகிறது என்பதை ஓவியத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும்தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வியப்பு மற்றும் ஆச்சர்யத்தோடு இருக்கிறது இந்த ஓவியம்.

இந்த ஓவியத்தைவிட ஆச்சர்யம்தான் மத்தேயுவின் அழைப்பு.

'என்னைப் பின்பற்றிவா' என்று இரண்டு வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் வேலை, தன் குடும்பம், தன் ப்ரையாரிட்டி என அனைத்தையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றார் மத்தேயு. 10 அல்லது 12 ஆண்டுகள் குருமடத்தில் பயிற்சி எடுத்தாலும், இயேசுவின் 'என்னைப் பின்பற்றி வா' என்ற அழைப்பு எனக்கு கஷ்டமாக இருக்கிறது. மத்தேயு எப்படி உடனடியாக எழுந்து போனார்?

போனபின் மத்தேயு செய்த செயல்தான் மிகவும் ஆச்சர்யத்திற்குரியது.

இயேசுவுக்கு ஒரு விருந்தளிக்கின்றார் தன் இல்லத்தில்.

எதற்காக இயேசுவைத் தன் இல்லத்திற்கு அழைத்தார் மத்தேயு?

'நான்தான் இது' என்று காட்டுவதற்காகத்தான் என நினைக்கிறேன். 'என் குடும்பம், என் பின்புலம், என் நண்பர்கள், என் உடன்பிறந்தவர்கள்' என தன்னைப் பற்றி இயேசுவுக்குக் காட்டுவதற்கும், தன் நண்பர்கள் எல்லாம் 'பாவிகள், வரிதண்டுபவர்கள்' என்று தன் உடைந்த நிலையைக் காட்டுவதற்கும்தான்.

இயேசு விருந்திற்குச் சென்றது அவருடைய எதிரிகளின் கண்களில் தூசியாக உறுத்தினாலும், தான் இரக்கத்தையே விரும்புவதாகவும், தான் பாவிகளையே நாடுவதாகவும் சொல்கின்றார் இயேசு.

ஆக, இயேசுவிடம், 'நான் இதுதான்' என்று மனம் திறக்க நமக்கு நமக்கு மனத்திடம் தருகின்றார் மத்தேயு.

1 comment:

  1. " நான் தான் இது; என் குடும்பம்,என்பின்புலம், என் உடன் பிறந்தவர்கள் ' எனத்தன்னைப்பற்றி இயேசுவுக்குக் காட்டுவதற்கும், தன் நண்பர்கள் எல்லாம் 'பாவிகள்,வரி தண்டுபவர்கள்' என்று தன் உடைந்த நிலையைக்காட்டவுமே மத்தேயு இயேசுவைத்தன் இல்லத்திற்கு அழைத்ததாகச் சொல்கிறது இன்றையப்பதிவு! இது மத்தேயுவின் குணத்தின் எளிமையைப்பறை சாற்றுகிறது.கடுகளவு விஷயத்தையும் மலையாக்க்காட்டும் மனிதரிடையே ' நான் இதுதான்; என் குணம் இதுதான்; என் இயல்பும்,இயலாமையும் இதுதான்' என எந்த சாயப்பூச்சுமின்றி வாழும் மனிதர் மிகச்சிலரே. இந்த வரிசையில் நான் தந்தையையும் சேர்த்தே பார்க்கிறேன்.இவரை... இந்த அருட்பணியாளரை.... இவரின் குருத்துவத்தை இறைவன் ஆசீர்வதித்துக் காப்பாராக!

    ReplyDelete