Tuesday, December 10, 2013

இங்கு உனக்கு என்ன வேலை?

அவர்கள் மீக்காவின் வீட்டருகே இருந்தபோது, லேவியரான இளைஞரின் குரலைக் கண்டு கொண்டு, அவர் பக்கம் திரும்பிச் சென்று, அவரிடம் 'உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? இங்கு உனக்கு என்ன வேலை?' என்று கேட்டனர். அவர் அவர்களிடம் மீக்கா தமக்குச் செய்ததனைத்தையும் பற்றிக் கூறியபோது, 'அவர் என்னை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நான் அவரிடம் குருவாக இருக்கின்றேன்' என்றார். அவர்கள் அவரிடம், 'நாங்கள் செல்லும் பயணம் வெற்றிகரமாக இருக்குமா என்பதை நாங்கள் அறியுமாறு கடவுளிடம் கேள்' என்றனர். குரு அவர்களிடம், 'மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்ட பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார்' என்றார். (நீதித் தலைவர்கள் 18:3-6)

மீக்காவின் வீட்டில் தந்தையாக, குருவாக, புதல்வராக இருக்கும் லேவியை வேவு பார்க்க வந்த தாணின் குலத்தார் கண்டு பிடிக்கின்றனர். அவரிடம் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, லேவி அவர்களுக்குக் கடவுளின் வாக்கைக் கூறுகின்றார்.

'குறி கேட்டல்' என்பது இன்னும் தொன்மையான மதங்களில் முக்கியமானதாக இருக்கின்றது. 'குறி கேட்டல்', 'பூ போட்டுப் பார்த்தல்', 'அருந்ததி பார்த்தல்' போன்ற அடையாளங்கள் இன்று கிறிஸ்தவ சிந்தனைக்குத் தீமையாகத் தெரிந்தாலும், கிறிஸ்தவ மதம் ஊற்றெடுத்த யூத மதத்தில் இவைகள் முக்கிய அங்கங்களாகவே இருந்திருக்கின்றன. நம் லேவி எப்படிக் கடவுளி;ன் வாக்கைக் கேட்டறிந்தார் என்பது பற்றி நமக்கு ஆசிரியர் குறிப்பிடவில்லை. ஏனென்றால் எப்படி லேவி இறைவனின் திருவுள்ளத்தைத் தெரிந்து கொள்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்திருக்கலாம். ஆகையால் அதைப்பற்றி அவர் எழுதாமல் விட்டிருக்கலாம்.

லேவியரின் வார்த்தைகள் இரண்டு நிலைகளில் அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன:

1. மன அமைதியுடன் செல்லுங்கள். இறைவனின் திருமுன் நாம் வருவதற்கு முக்கியக் காரணமும் இதுதான். இறைவனின் பிரசன்னம் நமக்கு முதன்மையாகத் தருவதும் இதுதான். எல்லாம் இருந்து மன அமைதி இல்லையென்றால் எப்படி இருக்கும்? வீட்டில் எல்லா மின் உபகரணங்களும் இருந்து மின்சாரம் இல்லையென்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான்.

2. ஆண்டவர் கண்ணோக்குவார். உங்களை ஆண்டவர் கண்ணோக்குவார் என்ற நம்பிக்கையைத் தருகின்றார் லேவி. நம்மை யார் கண்ணோக்கவில்லையென்றாலும் ஆண்டவர் கண்ணோக்குவார்.

லேவியரின் இந்த நம்பிக்கை வார்த்தைகள் தாம் இன்று ஒவ்வொரு குருவின் வாயிலிருந்தும் வர வேண்டும். 

'அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்.
உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார்.
இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை.
உறங்குவதும் இல்லை.
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்.
அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்.
அவரே உமக்கு நிழல் ஆவார்.
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது.
இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்.
அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
நீர் போகும் போதும் உள்ளே வரும்போதும்
இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.'
(திருப்பாடல் 121:3-8)

1 comment:

  1. Anonymous12/10/2013

    மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் 'அமைதி'யின் அருமை பற்றி.அக அமைதி, புற அமைதி...இரண்டையுமே நமக்குத் தருவதுதான் இந்த 121ம் சங்கீதம் லேவியர்களுக்கு மட்டுமல்லல ..குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. ''இதோ இஸ்ராயேலைக் காக்கிறவர் அயர்வதுமில்லை.உறங்குவதுமில்லை''...இந்த வரிகளின் அர்த்தம் மட்டும் நம் தலைவர்களுக்குப் புரிந்தால் அவர்கள் தங்கள் 'security.க்கென்று செய்யும் அனைத்து செலவுமே வீண் என்பதும் புரிந்து விடும்.இந்த சங்கீதத்தை உரத்துச் சொன்ன ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete