Sunday, December 8, 2013

எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர்!

மீக்கா லேவியிடம், 'என்னுடன் தங்கும். எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர். நான் உமக்கு ஆண்டொன்றுக்குப் பத்து வெள்ளிக் காசுகளும் உடையும் உணவும் தருவேன்' என்றார். லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார். அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல இருந்தார். மீக்கா இளைஞரான அந்த லேவியரின் கைகளை நிரப்பினார். அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார். மீக்கா, 'இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன். ஏனெனில் ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார்' என்றார். (நீதித் தலைவர்கள் 17:10-13)

இன்று மதுரை உயர்மறைமாவட்டத்தில் இரண்டு திருத்தொண்டர்கள் அருட்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இருவரும் என் நண்பர்கள். மேலும் இன்று இங்கு என் பங்குத்தளத்தில் உதவிப் பணியாளராகப் பணிபுரியும் ஒரு அருட்பணியாளரின் குருத்துவ 50ஆம் ஆண்டு விழாவை இங்கு நாங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். மதுரையில் ஞானாவில் இன்று பெரிய கூட்டம் இருந்திருக்கும். இங்கும் பெரிய கூட்டம். ஒன்றரை ஆண்டுகளாகக் கோவிலில் கண்டிராதவர்களையெல்லாம் இன்று கண்டேன். இவருடைய உறவினர்கள் யாரும் இல்லை. உடன்பிறந்தவர்கள் பிரேசில் நாட்டில் இருக்கிறார்கள். பின் எந்த உறவை வந்து இன்று இங்கும், இன்று ஞானாவிலும் இவ்வளவு கூட்டம்? 

முன்பின் தெரியாத ஒருவரை 'லேவியர்' என்ற ஒரே காரணத்திற்காக தன் வீட்டில் ஏற்றுக் கொள்கின்றார் மீக்கா. முன்பின் தெரியாத ஒருவரையும் 'குரு' என்ற ஒரே காரணத்திற்காக இன்றும் எங்கு சென்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அருட்பணி நிலையின் அர்த்தம் என்ன?

மீக்காவின் வீட்டில் நடந்ததை மையமாக வைத்துச் சிந்திப்போம். 

'தந்தையாகவும், குருவாகவும் இருப்பீர்!' என லேவியரை வேண்டுகின்றார் மீக்கா. இன்றும் அருட்பணியாளர்களைத் 'தந்தை' என அழைப்பதற்குக் காரணம் பழைய ஏற்பாட்டு இந்த நிகழ்வுதான். குருவாக இருப்பவரின் முதல் பணி தந்தையாக இருப்பது. தந்தையாக இருப்பது என்பது வெறும் தந்தை என்ற பட்டத்தை வைத்துக்கொள்வது மட்டுமல்ல. மாறாக, 'தந்தைக்குரிய' பண்புகளைப் பெற்றிருப்பது. 

தூய பவுல் தான் திருப்பொழிவு செய்யும் திமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றார்: 'முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. இளைஞர்களைத் தம்பிகளாகவும், வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு' (1 திமொ 5:1-2). குருத்துவ நிலையின் உறவுகளை ஒரு குடும்பத்தின் இரத்த உறவு நிலையில் வைத்துப் பாவிக்க திமொத்தேயு அழைக்கப்படுகின்றார். குருத்துவ உறவில் இரத்த உறவுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. திருமண உறவிற்கு அல்ல. பல நேரங்களில் இந்த உறவுக் குழப்பம்தான் எண்ணற்ற குழப்பங்களுக்குக் காரணமாகி விடுகின்றன. அருட்பணியாளர் தந்தை நிலைக்கு உயர்த்தப்படுகிறார் என்றால் அங்கே திருமணத்திற்கே இடமில்லை என்று தான் ஆகிவிடுகிறது. 

இந்நிலையில் அருட்பணியாளர்கள் எடுக்கும் 'கற்பு அல்லது கன்னிமை' என்ற வாக்குறுதி இன்னும் அதிக அர்த்தம் பெறுகின்றது. நம் வீடுகளையே எடுத்துக்கொள்வோம். தந்தை நிலையில் இருக்கிற நம் அப்பா எந்த நிலையிலும் தன் மனைவிக்கு, அதாவது நம் தாய்க்கு பிரமாணிக்கமாக இருக்கின்றார். மனைவி இறந்துவிட்டால் கூட தான் திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து வாழ்நாளெல்லாம் அதற்கு உண்மையாய் இருப்பவர்களும் நம் வீடுகளில் காணும் தந்தையர்களே. 'இதுவும் ஓகே. அதுவும் ஓகே' என்று சமரசம் செய்யும்போதும், நமக்கு நாமே 'நாமெல்லாம் வானதூதர்களாக, மனிதர்கள்தானே' என்று சமரசம் செய்துகொள்ளும்போதும், 'இதெல்லாம் வெளிய தெரியவா போகுது' என்று நினைத்துக்கொள்ளும் போதும் நாம் பொய்யர்களே. இன்று எங்கள் தாத்தா சாமியாரிடம் கேட்டேன், '50 வருடங்கள் இந்த கன்னிமை வாக்குறுதியைக் எப்படிக் காப்பாற்றினீர்கள். இங்கு 5 வருடங்களுக்குள் நாக்குத் தள்ளுகிறதே' எனக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: 'நீயாக விரும்பித்தானே இதை ஏற்றுக்கொண்டாய். விரும்பிய ஒன்றையே உன்னால் செய்ய முடியவில்லையென்றால். நீ விரும்பாத ஒரு பொறுப்பு உன்னிடம் வரும்போது நீ எப்படிச் செய்வார். விரும்பிவிட்டால் அங்கே மாற்றுச் சிந்தனையே வரக்கூடாது' என்றார்.

மீக்காவின் வீட்டில் லேவி தங்குகின்றார். இன்று அருட்பணியாளர்கள் மேல் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், 'இவர் இங்க தங்கவே மாட்டேன்கிறாரே!' என்பதுதான். பங்குத் தளங்கள் வெறும் துணி மாற்றும் இடங்களாக மட்டும் பல அருட்பணியாளர்களுக்கு மாறிவிடுவதும் கவலைக்குரியதுதான். 'தங்குவது' என்பது 'வேர் ஊன்றுவது'. நன்றாக வேர் ஊன்றும் மரம் மட்டுமே நிலைத்து நிற்கும். எந்தக் காற்றிலும் சாயாது. நல்ல கனிகளையும் கொடுக்கும்.

வெள்ளிக் காசுகள் (pocket money). உடை. உணவு. இந்த மூன்றையும் தான் லேவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் தருவதாக வாக்களிக்கின்றார். அருட்பணியாளர்களுக்கு இந்த மூன்றும் போதும். இந்த மூன்றையுமே ஏதோ வகையில் தான் பணிபுரியும் இடத்தில் உள்ள மக்களோ, அல்லது தான் சார்ந்து நிற்கும் மறைமாவட்டமோ, துறவுசபை நிறுவனமோ அவர்களுக்கு உறுதி செய்துகிறார்கள்.

'அவர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல இருந்தார்'. ஒவ்வொரு அருட்பணியாளருக்கும் கிடைக்கும் வரம் இதுதான். தான் செல்லும் இடத்திலெல்லாம் அவருக்கு புதிய அப்பா, அம்மா, மற்றும் உடன்பிறப்புக்கள். 'மண்ணின் மைந்தன்' என்ற பெயர் கொண்டு அவர்களை அழைப்பது அவர்கள் சொந்த ஊரில் மட்டுமல்ல. எல்லா ஊர்களிலும்தான்.

'மீக்கா லேவியரின் கைகளை நிரப்பினார்'. இன்றும் குருத்துவ திருப்பொழிவுச் சடங்கின்போது குருவானவரின் கைகள் திருப்பாத்திரங்களால் நிரப்பப்படுகின்றன. அவருடைய கைகளில் திருஎண்ணெய் பூசப்படுகின்றது. அவருடைய கைகள் இனி வேறு யாருடைய கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கவோ, அல்லது வேறு பொருட்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளவோ அல்ல. 

இன்றைய சிந்தனைப் பகுதி இன்று என்னையே ஒரு மறுஆய்வு செய்து பார்க்க அழைத்தது. மீக்கா வீட்டு லேவி இன்றும் எனக்குச் சவாலாக இருக்கின்றார்.

'எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர்!'

1 comment:

  1. Anonymous12/09/2013

    இன்று அதிகாலை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் உஙகள் செய்தி வழியே.எல்லாமே தெரிந்த விஷயங்கள் தான்.ஆனால் அவைசொல்லப்படும் விதத்தோடு சொல்பவரின் 'sincerity' யும் சேரும்போது இதுரு ஏற்படுத்தும் பாதிப்பு மிக வலியது.இது குருக்கள் மீது சேற்றை வாரி வீசும் காலம்.இன்று முதல அனைத்துக் குருக்களிலும் நம் தந்தையரைப் பார்க்கவும்,அவர்களுக்காக தினம் இறைவனை மன்றாடவும் தூண்டிய தங்களின் கரங்களை இறைவன் தம் கொடைகளால் நிரப்புவாராக.வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் சேவை.

    ReplyDelete