Tuesday, December 10, 2013

நீங்கள் எதுவும் செய்யப்போவதில்லையா?

வேவு பார்க்கச் சென்றவர்கள் தங்கள் சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், 'நீங்கள் கண்டதென்ன?' என்று கேட்டனர். அவர்கள், 'வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம். ஏனெனில் நாங்கள் ஒரு நாட்டைக் கண்டோம். அது மிகவும் செழிப்பானது. நீங்கள் எதுவும் செய்யப்போவதில்லையா? அங்கு செல்ல தயங்க வேண்டாம். நீங்கள் கவலையற்ற மக்களிடம் செல்லவிருக்கின்றீர்கள். (நீதித் தலைவர்கள் 18:8-10)

தாண் குலத்திலிருந்து வேவு பார்க்கச் சென்றவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புகின்றனர். தாங்கள் வேவு பார்த்த நாட்டைப் பற்றி அவர்களிடம் சொல்கின்றனர். அவர்கள் வேவு பார்த்த நாட்டின் பெயர் லாயிஷ். இன்றும் தொல்லியில் நிபுணர்கள் இந்த இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நகரம் அழிந்தது பற்றி நீதித் தலைவர்கள் 18:28 இப்படிச் சொல்கின்றது: 'மற்ற ஊர்களிலிருந்து அவர்கள் தொலைவில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததால் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை'.

ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, தனிநபருக்கும் இந்நிலை வரலாம். நாம் மற்றவர்களிடமிருந்து ரொம்ப விலகி நிற்கும் போதும், மற்ற மனிதர்கள் தொடர்பு இல்லாமல் இருக்கும்போதும் நம்மை எதிரி எளிதாக வென்று விடலாம். 'தொடர்பு' மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. மனிதர்களைப் பற்றிச் சொல்லும் போது அவர்களைத் 'தொடர்பு' அடிப்படையில் மட்டுமே வரையறை செய்கின்றோம். 'தொப்புள் கொடி' என்ற தொடர்பு அறுபடும்போது குழந்தை அழுகின்றது. இனி தனக்கு இந்த உலகில் எதுவும் இல்லை என்று பயம் கொள்கின்றது. கொஞ்ச கொஞ்சமாக அந்தக் குழந்தை பயத்திலிருந்து வெளிவருகின்றது.

இறைவன் தந்த தொடர்புகள், நாமே ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள், பூர்வ ஜென்மப் பந்தமாய்த் தொடரும் தொடர்புகள் என அனைத்திற்காகவும் நன்றி கூறுவோம்.

தொடர்பில் நிலைப்போம்.

'மற்ற ஊர்களிலிருந்து அவர்கள் தொலைவில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததால் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை'.

1 comment:

  1. Anonymous12/11/2013

    பல கைகள் ஒன்று சேர்ந்து இணையும்போது யாரையும் விண்ணுயரத் தூக்கி விடலாம் என்பதை symbolicஆக படத்தின் வழியே காட்டியிருப்பது அழகு இறைவன் ஏற்படுத்திய அனைத்து சொந்தஙகளும் பந்தங்களும் கூடி வாழ்தலால் கோடி நன்மை பயக்குமெனில் எதற்காக நாம் பிறரை விட்டு விலகி இருக்க வேண்டும்?

    ReplyDelete