Thursday, December 5, 2013

எதில் உமது பெரும் வலிமை உள்ளது?

அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணை சிம்சோன் காதலித்தார். அவள் பெயர் தெலீலா. பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் சென்று, 'நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது. எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்க முடியும் என்ற கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம்' என்றனர். தெலீலா சிம்சோனிடம், 'எதில் உமது பெரும் வலிமை உள்ளது? எப்படி உம்மைக் கட்டி அடக்க முடியும்?' என்று கேட்டாள். (நீதித் தலைவர்கள் 16:4-6)

சிம்சோன் மேலும் இறங்குமுகமாவே இருக்கிறார் என்பதை 'பள்ளத்தாக்கு' என்ற வார்த்தை நமக்குத் தெரிவிக்கிறது. பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவள் பெயர் தெலீலா எனக் கொடுக்கப்பட்டுள்ளது. தெலீலா என்றால் எபிரேய மொழியில் இரவு அல்லது இருள் என்பது பொருள். சிம்சோன் என்றால் சூரியன் அல்லது ஒளி என்பது பொருள். ஒளிக்கும் இருளுக்குமான போராட்டம் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுவதற்காகவும், சிம்சோனின் வாழ்க்கை முடியப்போகிறது என்ற அவசரத்திலும் 'தெலீலா' என்ற கதாபாத்திரத்தை வேகமாக அறிமுகம் செய்கின்றார் இந்நூலின் ஆசிரியர். 

தெலீலா எப்படிப்பட்டவர் என்று எதுவுமே சொல்லப்படவில்லை. அவரின் பெயரும், அவர் அடுத்தடுத்துச் செய்யும் செயல்களும் அவர் யார் என்பதைக் காட்டும் என்பதற்காகவே அவரைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

அவரிடம் பெலிஸ்தியச் சிற்றரசர்கள் வருகிறார்கள். சிற்றரசர்கள் என்றால் அரசர்கள் அல்லர். ஊர்ப்பெரியவர்கள் தாம் அவர்கள். தெலீலாவைப் பயன்படுத்தி சிம்சோனை வென்றுவிட நினைக்கிறார்கள். அவளின் பலவீனம் பணம் என்பதை உணர்ந்து பணத்தால் அவளை விலைபேசுகின்றனர். அவளும் பணத்திற்காக தன் காதலையும், தன் காதலனையும் காட்டிக் கொடுக்கத் துணிகின்றாள். 

பலத்திற்கும், பலவீனத்திற்குமான போராட்டம் இங்கே நடக்கிறது. 'அவரின் பலம் என்ன என்பதை உன் பலவீனத்தால் காட்டு!' என்று சொல் விளையாட்டு நடத்துகின்றார் ஆசிரியர்.

சிம்சோனின் பலவீனம் தெலீலா. தெலீலாவின் பலவீனம் பணம். ஒருவரின் பலவீனம் மற்றவரின் பலமாக மாறுகிறது. இறைவன் தான் தன் பலம் என்பதை சிம்சோன் சற்று மறந்தவர்போல்தான் இருக்கின்றார். 

இன்று நம் பலம் எது? பலவீனம் எது?

'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்!' (திபா 23:4).

'எதில் உமது பெரும் வலிமை உள்ளது?'

1 comment:

  1. Anonymous12/05/2013

    ''One man's flesh is another man's meat'' என்பார்கள் அது போலத்தான் பல சமயங்களில் நம் பலவீனததைப் பலர் தாங்களமுன்னுக்கு வர ஆயதமாகப் பயன்படுத்தலாம் அமமாதிரி மனிதர்களை மட்டுமல்ல நம் பலவீனத்தையும் இனம்.கண்டு அதன் வேரறுப்போம்.கலவாரியீல் தன் பலத்தை நிருபித்துக் காட்டிய நாயகனைப் பற்றிக்கொள்வோம்.நம் வாழ்வுக்கு பலம் சேர்ப்போம்.

    ReplyDelete