Saturday, December 14, 2013

சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்

அதற்கு ரூத்து, 'உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன். அங்கேதான் என் கல்லறையும் இருக்கும். சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன். அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக!' என்றார். (ரூத்து 1:16-17)

நீதித் தலைவர்கள் நூல் மகிழ்ச்சியாகத் தொடங்கி அழுகையாக முடிகிறது. நீதித் தலைவர்கள் காலத்தில் நவோமி என்ற ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வை விளக்குவதே ரூத்து என்னும் நூல். நவோமி ஒரு இஸ்ரயேலர். ரூத்து மோவாபு இனத்தைச் சார்ந்தவர். பெத்லகமேலிருந்து எலிமலேக்கின் (நவோமியின் கணவர்) குடும்பம் மோவாபிற்குச் செல்கின்றது. எலிமேலக் என்றால் 'என் இறைவனே அரசன்' என்பது பொருள். இறைவனையே அரசனாகக் கொண்ட ஒரு குடும்பம் அனைத்தையும் இழக்கின்றது. பெத்லகேம் என்றால் 'அப்பத்தின் வீடு' என்பது பொருள். அந்த 'அப்பத்தின் வீட்டிலேயே' அப்பம் இல்லை என்ற நிலை வந்து விடுகிறது. இந்நிலையில் தன் குழந்தைகள் மக்லோன் மற்றும் கிலியோனுடன் மோவாபு நோக்கிப் புறப்படுகின்றனர் எலிமேலக் - நவோமி தம்பதியினர். 'மக்லோன்' என்றால் 'பலவீனம்' என்பது, 'கிலியோன்' என்றால் 'வீழ்கின்ற' என்பதும் பொருள். இந்த இரண்டு பெயர்களின் பொருளுக்கேற்பவே அவர்கள் விரைவில் இறந்து விடுகின்றனர். எலிமேலக்கும் இறந்து விடுகின்றார். இப்போது மீதம் இருப்பது மூன்று கைம்பெண்கள்: நவோமி, ஓர்பா மற்றும் ரூத்து. 

ரூத்து நூலின் துவக்கம் மிகவும் முக்கியம். இங்கு கவனித்தீர்களா?

மூவரும் பெண்கள்.

மூவரும் விதவைகள் (கைம்பெண்கள்).

மூவரும் ஏழையர்.

இப்படியாக மூன்று நிலைகளில் சமூகம் புறந்தள்ளிவிடும், கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று மற்றவர்கள் சொல்லத் துணியும் அளவிற்குத் தாழ்ந்து போனவர்கள்.

இனித் தன்னால் தன் மருமகள்களுக்குப் பயன் ஒன்றுமில்லை என நினைக்கின்ற நவோமி தன் மருமக்கள் இருவரையும் அவர்களின் இல்லம் திரும்பச் சொல்கின்றார். ஓர்பா உடனடியாகத் தன் தாய் வீடு திரும்பி விடுகிறாள். ஆனால் ரூத்து நவோமியோடே தங்கத் துணிகிறாள்.

'உம்மால் எனக்குப் பயன் ஒன்றுமில்லை என்று நீர் நினைத்தாலும் பரவாயில்லை. உம்மோடு நான் என்றும் இருப்பேன்' என்று தன் தாராள உள்ளத்தைக் காட்டுகிறார் ரூத்து.

மாமியார்-மருமகள் உறவிற்கு மட்டுமல்ல, நட்பு, பாசம், காதல், பக்தி என்ற எல்லா உறவுகளுக்கும் ரூத்து ஒரு நல்ல எடுத்துக்காட்டு. உறவு என்பது பயன்பாட்டால் நிர்ணயிக்கப்பட வேண்டியது அல்ல எனவும், என்றும் ஒருவர் மற்றவர்க்கு தாராளமாக உள்ளத்தைத் திறந்து கொடுக்கவும் நம்மை அழைக்கிறார் ரூத்து.

'சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்'.

1 comment:

  1. Anonymous12/14/2013

    ''ரூத்'' ஆகமத்தின் இப்பகுதி .....அதிலும் ரூத் தன் மாமியைப்பார்த்துப் பேசும் வார்த்தைகள் கண்களில் நீர் வடியச்செய்பவை.கணவனுக்கு காட்ட வேண்டிய பிரமாணிக்கத்தை அவரைப பெற்ற தாய்க்கும் காட்டுகிறார். பொன்னோ பொருளோ கொடுக்க இயலா அன்மையை....ஆறுதலை நம் வார்த்தைகளால் பிறருக்குக் கொடுக்கலாம் என்பதை நிருபிக்கிற வார்த்தைகள்.....அதிகாலைப் பொழுது மனதுக்கு இதமாக இருந்தது இப்பகுதியைத் தேர்வு செய்த ஆசிரியருக்குப் பாராட்டுக்களும்.........;நன்றிகளூம்.

    ReplyDelete