Monday, January 31, 2022

சிமெண்ட்டிங்

இன்றைய (1 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 5:21-43)

சிமெண்ட்டிங்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு வல்ல செயல்கள் நிகழ்கின்றன. பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வருந்திய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டதால் நலம் பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் பன்னிரு வயது மகள் உயிர் பெறுகிறார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில் ஒரு நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்வு எனக்கு எப்போதும் ஆச்சர்யம் தருவதுண்டு.

அது என்ன நிகழ்வு?

இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்கிறார்.

வீட்டிலிருந்து வந்தவர்கள் யாயரின் உறவினர்களாக இருந்திருக்கலாம். அல்லது பணியாளர்களாக இருந்திருக்கலாம். மகள் இறந்த செய்தியை அறிவிப்பதோடு அவர்கள் நின்றிருந்தால் பரவாயில்லை. 'போதகரை ஏன் தொந்தவு செய்கிறீர்?' எனக் கேட்கின்றனர். இரண்டு விடயங்கள் இந்தக் கேள்வியில் அடங்கியுள்ளன: ஒன்று, இறந்த ஒருவர் உயிர் பெற்று வருதல் இயலாது. இரண்டு, இறந்தவரை உயிர்த்தெழச் செய்ய கடவுளால் மட்டுமே இயலும். இயேசு வெறும் போதகர்தான். கடவுள் இல்லை. 

பணியாளர்கள் அல்லது உறவினர்களின் இவ்வார்த்தைகள் மிக எதார்த்தமாகத் தெரிகின்றன. நம் அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருக்கின்றன. 

ஆனால், அறிவுக்கு அப்பாற்பட்டவை இருக்கின்றன என்றும், அவற்றைக் காண நமக்கு நம்பிக்கை அவசியம்.

நாம் சில நேரங்களில் அறிவாகச் சிந்திக்கிறோம் அல்லது பேசுகிறோம் என்ற நினைப்பில் வல்ல செயல்கள் நடப்பதை மறுக்கிறோம். மேலாண்மையியலில் இதை 'சிமெண்ட்டிங் தாட்ஸ்' என்கிறார்கள். அதாவது, நம் வீட்டுக்கு வெளியே மண் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மண்ணில் திடீரென ஒரு புல்லோ, செடியோ வளர்ந்து நிற்கும். அவற்றைப் பிடுங்கினாலும் இன்னும் சில நாள்களில் மீண்டும் ஏதோ ஒன்று வளர்ந்து நிற்கும். ஆனால், அந்த இடத்தில் நாம் சிமெண்ட் கொட்டிப் பூசிவிட்டால், எதுவுமே அந்த இடத்தில் முளைக்காது. அதாவது, வளர்ச்சி இருந்த இடத்தில் சிமெண்டிங் செய்வதால் வளர்ச்சி நிறுத்தப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது. 

அன்றாடம் நாமும் வளர்கிறோம். நம் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக நாம் சிமெண்ட்டிங் செய்துகொள்கிறோம் சில நேரங்களில். இந்த சிமெண்ட்டிங் சில நேரங்களில் நமக்கு வெளியிலிருந்து வரலாம். அல்லது நமக்கு உள்ளிருந்து வரலாம். இவ்வகை எண்ணங்கள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடுகின்றன.

இவற்றை நாம் இரு வழிகளில் வெல்லலாம்?

ஒன்று, பன்னிரு ஆண்டுகளாக வருந்திய அந்த இளவல்போல அசைக்கு முடியாத நம்பிக்கை கொள்வது. அந்த நம்பிக்கையை நமக்கு நாமே உறுதியாக்கிக் கொள்வது.

இரண்டு, 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்னும் இயேசுவின் குரலை நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கச் செய்வது.

இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் அப்சலோம் இறந்த செய்தி கேட்டு தாவீது அழுது புலம்புகின்றார். நேற்றைய வாசகத்தில், இதே அப்சலோம் தன்னைக் கொல்ல வருவதைக் கேட்டுத் தப்பி ஓடுகின்றார். தன்னைக் கொல்ல வந்த எதிரி இறந்ததாக மகிழ்வதற்குப் பதிலாக, 'என் மகன் அப்சலோமே, உனக்குப் பதிலாக நான் இறந்திருக்கக் கூடாதா!' என அழுகின்றார். 

பத்சேபா நிகழ்வின்போது, 'உன் வீட்டின்மேல் ஒரு வாள் எப்போதும் தொங்கிக் கொண்டேயிருக்கும்' என நாத்தான் வழியாக எச்சரிக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். பாவம் தாவீது! வாள் அடுத்தடுத்த அவருடைய அனைத்து உறவுகளையும் அவரிடமிருந்து பிரிக்கிறது.

உடல் வாதையினால் தன் தலைமேல் தொங்கிய வாளை நம்பிக்கையால் உடைத்தெறிகிறார் இளவல்.

தன் பணியாளர்கள் கொண்டு வந்த இறப்பின் வாளை நம்பிக்கையால் உடைத்தெறிகிறார் யாயிர்.

நம்மை நாமே அழிக்கும் வாள்களாக நம்மோடும் நம்மைச் சுற்றியும் இருப்பவை சிமெண்ட்டிங் தாட்ஸ். அவற்றை உடனே அழித்தல் நலம்.

 

2 comments:

  1. “சிமெண்டிங் தாட்ஸ்”…. புது வார்த்தை மட்டுமல்ல….புது சிந்தனையும் கூட. ஒன்றை அழிக்க அதன் மேல் இன்னொன்றைப் பூசுவது. தொழுகைக் கூடத் தலைவரின் பணியாளர்கள் தங்கள் கண்ணெதிரே கண்ட அவரின் மகளின் இறப்பு பற்றிக் கூறியும்,அதையும் மீறி அவரைத் திடம் கொள்ள வைப்பது இயேசுவின் “ அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விடாதீர்!” என்னும் வார்த்தைகள். இவரின் நம்பிக்கை எனும் புல்தரை மேல் என்னதான் சிமெண்டைப் போட்டுப் பூச நினைத்தாலும் அதையும் மீறி வெளியே வருகிறது தொழுகைக் கூடத் தலைவனின் நம்பிக்கை எனும் தளிர்.இரத்தப் போக்கினால் குணம் பெற்ற பெண்ணின் விசுவாசமும் இதே! இயேசுவுக்குத் தெரியாமலே தான் வேண்டுவதை அவரிடமிருந்து எடுக்க முடியுமென நம்புகிறாள்.நம்பிக்கை வீண்போகவில்லை.
    ஒன்றன் பின் ஒன்றாக தன்னை அழிக்க வந்த வாள்களை மேற்கொள்ளத் தெரியவில்லை தாவீதுக்கு.அதனால் தான் உடல்வாதையினால் தன் தலைமேல் தொங்கிய வாளைத் தன் நம்பிக்கையினாலும்…தன் பணியாளர்கள் கொண்டு வந்த இறப்பின் வாளை அதே நம்பிக்கையினாலும் இளவலும்…தொழுகைக் கூடத்தலைவனும் நம் கண்களுக்கு சற்று உயரத்தில் தெரிகிறார்கள்.
    யானையின் தும்பிக்கையின் பலம் ,மனிதனின் நம்பிக்கையிலும் இருப்பின் எந்த சிமெண்டிங்கையும் உடைத்துக்கொண்டு எந்த நல்ல விஷயங்களும் நடக்கலாம்.நமக்குத் தேவை நடக்கும் என்ற “நம்பிக்கை”. மட்டுமே! நம்பிக்கை… அது நம் மூன்றாவது கண் போன்றது…சிந்திக்கவைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. சிறிய திருத்தம்.
    ஒன்றன் பின் ஒன்றாகத் தன்னை அழிக்க வந்த வாள்கள மேற்கொள்ளத்தெரியவில்லை தாவீதுக்கு. அதனால் தான் தன் உடல்வாதையால் தன் தலைமேல் தொங்கிய வாளைத்தன் நம்பிக்கையினால் செயிக்க முடியாத இவரை விட…அந்த இளவலும்,தொழுகைக்
    ,கூடத்தலைவனும் நம் கண்களுக்கு சற்றே உயரத்தில் இருக்கிறார்கள்!

    மன்னிக்கவும் தவறுக்கு….

    ReplyDelete