Saturday, January 29, 2022

எதிராளியாய்

ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

எரேமியா 1:4-5, 17-19 1 கொரிந்தியர் 12:31-13:13 லூக்கா 4:21-30

எதிராளியாய்

கறுப்பின அடிமை ஒருவரின் பேரனான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 1936ஆம் ஆண்டு நாசி ஜெர்மனி நகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றவர். இவர் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார்: '1928ஆம் ஆண்டு ஒஹையோவில் நான் அன்றாடம் உடற்பயிற்சி செய்யச் செல்வேன். தொடக்கத்தில் எனக்கு மிகவும் சோம்பலாக இருந்தது. சோம்பலைக் காரணம் காட்டி நான் சில நாள்கள் பயிற்சியைத் தள்ளிப் போட்டேன். பின் தட்ப வெப்பநிலையைக் காரணம் காட்டினேன். பின் என் உடல் வலியைக் காரணம் காட்டினேன். ஆனால், பறிற்சிக்கு என்னைத் தினமும் அழைத்த என் கோச் எனக்கு ஒரு எதிராளியாகத் தோன்றினார். அவரை இதற்காகவே வெறுத்த நான் ஒரு கட்டத்தில் அவர் சொல்வதுபோல செய்ய ஆரம்பித்தேன். ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. என் உடற்பயிற்சி மேல் நான் நம்பிக்கை கொண்டிருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாசிச 'ஆரிய மேட்டிமை' மேலாண்மை என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. அந்த நாள்களில் என் உடல்நலமும் குன்றியது. ஆனால், 'என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைக்கும்' மனப்பான்மைக்கு நான் என்றும் எதிராளி என்று பதிவு செய்ய ஓடினேன்.' இன்று அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அவர் அன்று தனக்கெனப் பதித்த முத்திரை அவருக்கானதே.

மனித வாழ்வின் தனி மனித வெற்றியும், குழும வெற்றியும் அடையும் வழி எதிராளியாக மாறுவதே. எதிராளியாக மாறுவது என்பது எதிர்த்து நிற்பது அல்லது எதிர்நீச்சல் போடுவது. எதிராளி என்பவர் பகையாளி அல்ல. பகையாளி என்பது ஒரு முடிந்த நிலை. ஆனால், எதிராளி என்பது ஒரு தொடர்நிலை.

'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற என் காலை எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சுறுசுறுப்பாக வேலைகள் செய்ய முடிகிறது. 'கொஞ்சம் இனிப்பு சாப்பிடு. அப்புறம் மாத்திரை போட்டுக் கொள்ளலாம்' என்ற என் எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆங்கிலேயேர்க்கு எதிராளியாய் நம் முன்னோர்கள் நின்றதால்தான் இன்று நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க முடிகிறது. இப்படியாக கறுப்பின மக்கள் எழுச்சி, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சி என சமூக நிகழ்வுகளிலும், இராஜாராம் மோகன்ராய், மார்ட்டின் லூத்தர், அம்பேத்கர், அன்னை தெரசா போன்றவர்கள் எடுத்த நிலைப்பாடுகளிலும், 'எதிராளியாய்' இருப்பதன் அவசியம் புரிகிறது. குடும்பத்தில் நடக்கும் இழப்புக்களையும் தாண்டிக் குடும்பத்தை எழுப்பும் அப்பாக்கள், அம்மாக்கள், வறுமையிலும், இயலாமையிலும் சாதிக்கும் குழந்தைகள் என எல்லாருமே 'எதிராளியாய்' இருப்பதால்தான் சாதிக்க இயல்பவர்கள் ஆகிறார்கள்.

மொத்தமாகச் சொன்னால், 'ஓடுகின்ற தண்ணீரின் ஓட்டத்திற்குத் தன்னையே கையளிக்கின்ற படகு கரை ஒதுங்குகிறது. ஓட்டத்திற்கு எதிராளியாய் நிற்கிற படகு மறுகரை சேர்கிறது.' இன்றைய இறைவாக்கு வழிபாடு, 'எரேமியா,' 'பவுல்,' 'இயேசு' என்ற மூன்று எதிராளிகளின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து, நம்மையும் எதிராளிகளாய் வாழ அழைக்கிறது. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 1:4-5, 17-19) யாவே இறைவன் எரேமியாவை அழைக்கின்றார். எருசலேமின் அழிவையும், பாபிலோனியாவுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் பார்த்த இறைவாக்கினர் எரேமியா. 'நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' என்னும் வாக்கியத்தில் எரேமியாவின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையையும், ஒரு குறிப்பிட்ட பணிக்கென 'ஒதுக்கிவைக்கப்பட்ட' நிலையையும் பார்க்கின்றோம். 'திருநிலைப்படுத்துதல்' என்பது பொறுப்புமிக்க வார்த்தை. ஏனெனில், திருநிலைப்படுத்தப்படும் நபர் சிறப்பான பணி ஒன்றிற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறார். அவர் அச்சிறப்பான பணியிலிருந்து கொஞ்சம் விலகிவிடவோ, அதே நேரம் தானே மற்ற பணிகளைத் தேடிச் செல்லவோ கூடாது. எரேமியாவின் அழைப்பு இறைவாக்குரைக்கவும், அதிலும் யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் இறைவாக்குரைக்கவுமாக இருக்கிறது. சாதாரண நபர்களுக்கு ஒன்றைச் சொல்லி நம்பவைத்துவிடலாம். ஆனால், மேற்கண்ட மூவருக்கும் சொல்வது மிகப்பெரிய சவால். அதுவும் நல்ல செய்தி என்றால் பரவாயில்லை. அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளையும், அவர்களின் சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டுவது எரேமியாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், அவர்கள் ஆட்சி செய்த 'எருசலேமின் அழிவையும்' அவரே முன்னுரைக்கவும் வேண்டியிருந்தது. இவரின் இந்த இறைவாக்கு அவரைப் பொதுவான எதிரியாக்கிவிடுகிறது. அவர் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளாகின்றார். ஆனாலும், தன் இறைவாக்குப் பணியில் அவர் பின்வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில், 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்' (20:7) என்று விரக்தி அடைந்தாலும், 'சுற்றிலும் ஒரே திகில்! அவன் மேல் பழிசுமத்துவோம்' (20:10) என்று மக்களின் கிளர்ச்சி பயத்தைத் தந்தாலும், 'உம் சொற்களை என்னால் அடக்கி வைக்க முடியாது' (20:9) என்றும் 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' (20:11) என்று நம்பிக்கை கொள்ளவும் செய்கிறார் எரேமியா. இவ்வாறாக, தவறான சமய எண்ணங்களிலும், தங்களின் மேட்டிமைப் போக்கிலும் மூழ்கி இருந்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் 'எதிராளியாய்' நிற்கிறார் எரேமியா. இவரின் இந்தத் துணிவிற்குக் காரணம், 'உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (1:19) என்ற ஆண்டவரின் வாக்குறுதியே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:31-13:13) பவுல் 'பல்வேறு கொடைகள்' பற்றிய தன் போதனையை நிறைவு செய்கிறார். கொரிந்து நகர திருஅவை உறுப்பினர்கள் தாங்கள் பெற்றிருந்த அருள்கொடைகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும், தொண்டுகள் பற்றியும் அதிகம் பெருமை பாராட்டிக்கொண்டும், தாங்கள் பெற்றிருந்த ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு சார்ந்து சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், பரவசப் பேச்சு, அதை விளக்கும் ஆற்றல் போன்ற கொடைகளை முன்னிறுத்தி, ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்துகொண்டு, பொறாமைப்பட்டு, தங்களுக்குள் கட்சி மனப்பான்மை கொண்டு பிளவுபட்டிருந்தனர். கடந்த வார வாசகத்தில் 'ஒரே உடல் பல உறுப்புகள்' என்று அவர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்த பவுல், இன்னும் ஒரு படி போய், 'எல்லாவற்றையும் விட சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்' (12:31) என்று சொல்லி அன்பை முன்வைக்கிறார். அவர்கள் தாங்கள் பெருமை கொண்டிருந்த - பரவசப் பேச்சு, இறைவாக்குரைக்கும் ஆற்றல், மறைபொருள்கள் விளக்கும் ஆற்றல், மலைகளை இடம் பெயரச் செய்யும் நம்பிக்கை, தன்னையே எரிக்கும் அளவிற்கு தற்கையளிப்பு - அனைத்தும் அன்பை ஊற்றாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்கிறார். ஏனெனில், அன்பு இல்லாத இடத்தில் இவை யாவும் தனி மனித பெருமைக்காகவும், புகழுக்காகவும், பண ஈட்டிற்காகவும் மட்டுமே பயன்படும்.

கிரேக்க மொழியில் அன்பு என்பதற்கு நான்கு வார்த்தைகள் உள்ளன: (அ) அகாபே (மேன்மையான அன்பு), (ஆ) ஈரோஸ் (உடல் சார்ந்த அன்பு, காமம்), (இ) ஃபிலியா (நட்பு அல்லது நலம்விரும்புதல்), (ஈ) ஸ்டோர்கே (பெற்றோர்-பிள்ளை பாசம்). பவுல் பயன்படுத்தும் வார்த்தை, 'அகாபே.' மூன்று நிலைகளில் அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது: (அ) மேன்மையான அருட்கொடையை விட அன்பு சிறந்தது. (ஆ) முதன்மையான திறன்களைவிடச் சிறந்தது.(இ) கதாநாயக வெற்றிச் செயல்களைவிடச் சிறந்தது. தொடர்ந்து அன்பு இப்படி இருக்கும், அப்படி இருக்காது என நேர்முக மற்றும் எதிர்மறை வார்த்தைகளில் பட்டியலிடுகின்றார் பவுல். மேலும், அன்பின் குணத்தை பெரிதுபடுத்தியும் காட்டுகின்றார்: 'எல்லாவற்றையும்' பொறுத்துக்கொள்ளும். 'எல்லாவற்றையும்' நம்பும். 'எல்லாவற்றையும்' எதிர்நோக்கி இருக்கும். 'எல்லாவற்றிலும்' மனஉறுதியாய் இருக்கும். மேலும், இந்த அன்பு அழியாதது என்கிறார் பவுல். ஏனெனில், இவ்வன்பு கடவுளில் ஊற்றெடுக்கிறது. கடவுள் அழிவில்லாதவர். எது எப்படியோ அன்பு இருந்தால் சரி! எல் கிரேக்கோ என்பவர் 'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்ற மூன்று மதிப்பீடுகளையும், மூன்று பெண்களாக உருவகித்து (மோதெனா ட்ரிப்டிக்) ஒரு படம் வரைந்துள்ளார். இதில் அன்பு என்ற பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு நிறைய குழந்தைகள் இருக்கும். ஆம், அன்பின் குழந்தைகள் கணக்கிலடங்காதவை! அன்பு என்றும் மேலனாது.

பவுல் இப்படி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய அன்பின் பாடல் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், பவுலின் திருச்சபைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் கொண்டிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் - பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிவான ஊதியம், தன்னலம், எரிச்சல், தீவினை, பொய் - சுட்டிக்காட்டு, இச்செயல்கள் அன்பிற்கு இல்லை என்று சொல்வதன் வழியாக, 'உங்களிடத்தில் அன்பு இல்லை' என மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் பவுல். பவுலின் இந்த மடலுக்காக கொரிந்து நகர மக்கள் அவரை நிராகரித்தார்கள் என்பதை நாம் அவரின் இரண்டாம் மடலில் வாசிக்கிறோம். இவ்வாறாக, பவுல், அன்பு பற்றிய போதனையால், அன்பை மற்ற எல்லாவற்றையும் விட உயர்த்தியதால், கொரிந்து நகரத் திருச்சபையின் 'எதிராளியாக' மாறுகின்றார். பவுலின் துணிவிற்குக் காரணம், இவர் கடவுளின் உடனிருப்பை அனுபவித்த விதமே. ஆகையால்தான், 'இப்போது நான் அறைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்' (13:12) என உறுதியாகக் கூறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 4:21-30), இயேசுவின் நாசரேத்துப் போதனை அதைக் கேட்டவர்களின் நடுவில் ஏற்படுத்திய எதிர்வினையைப் பதிவு செய்கிறது. எசாயா இறைவாக்கினரின் பகுதியை வாசித்தவர், 'இது ஆண்டவரின் அருள்வாக்கு!' என்று இயேசு சொல்லியிருந்தால், எல்லாரும், 'ஆகா, ஓகோ, நல்லா வாசிக்கிற தம்பி!' என்று உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இயேசு அப்படிச் சொல்லவில்லையே! 'நீங்கள் கேட்ட இறைவாக்கு இன்று நீங்கள் கேட்டதில் நிறைவேறியது!' என்கிறார். 'என்னது மெசியா பற்றிய எசாயா இறைவாக்கு நிறைவேறுகிறதா?' 'யார்ட்ட?' 'இவர்ட்டயா?' 'தம்பி, ஆர் யு ஓகே?' 'என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா?' 'இவர் யோசேப்போட பையன்தான!' என ஆளாளுக்கு பேச ஆரம்பிக்கின்றனர். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' (லூக்கா 1:22) என்ற அவர்களின் வார்த்தைகள் இயேசு தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தார் என்பதைக் குத்திக் காட்டி, அவரின் பிறப்பைக் கேலி செய்வதாகக் கூட இருந்திருக்கலாம். சில நொடிகளில் எல்லாம் மாறிப்போனது. இயேசுவின் போதனையும், பணியும் புறவினத்தாரையும் உள்ளடக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு. அவர் தங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக இருந்ததால் அவரைப் புறக்கணிக்கின்றனர் மக்கள். அவரைப் பாராட்டிய சில நொடிகளில் அவர்மேல் சீற்றம் (கோபத்தின் கொடூர வடிவம்) கொண்டு அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிட முனைகின்றனர். ஆக, இயேசு தன் போதனையின் வழியாக தன் சொந்த ஊர் மக்களுக்கு 'எதிராளியாக' மாறினார். தன் இலக்கோடு சமரசம் செய்துகொள்ளாத இயேசு தன்னலம் மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட அந்த மக்களிடமிருந்து விலகித் தன் வழியே செல்கின்றார்.

இவ்வாறாக, எரேமியா தன் இனத்து அரசர்களுக்கும், மக்களுக்கும் தன் இறைவாக்குப் பணியால் எதிராளியாகவும், பவுல் தன் கொரிந்து நகர திருஅவைக்குத் தன் 'அன்பு' பற்றிய போதனையால் எதிராளியாகவும், இயேசு அனைவரையும் உள்ளடக்கிய இறைவார்த்தைப் பணியால் தன் சொந்த ஊர் மக்களுக்கு எதிராளியாகவும் மாறுகின்றனர். ஆனால், இவர்களை எதிர்த்தவர்கள் நடுவில் இவர்கள் பின்வாங்கவில்லை. இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 71) சொல்வதுபோல, 'என் தலைவரே, நீரே என் நம்பிக்கை. இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்' என்று துணிந்து முன்செல்கின்றனர்.

இன்று நம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக, மற்றும் அரசியல் வாழ்விலும் எதிராளியாக இருக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். எதிராளியாக மாறுவதற்கு மூன்று குணங்கள் அவசியம்: (அ) 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை. தான் சிறுவன் என்ற நிலையில் இருந்தாலும் எரேமியாவும், தான் அறிமுகமில்லாதவன் என்ற நிலையில் இருந்தாலும் பவுல், தான் சொந்த ஊர்க்காரன் என்றாலும் இயேசுவும், தங்களால் முடியும் எனத் தங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். (ஆ) 'என் கடவுள் என்னோடு' - தன்னம்பிக்கையை நம்மை விடப் பெரிய ஒன்றோடு கட்ட வேண்டும். அது விதியாகவோ, கடவுளாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். மனிதர்கள்மேலும், இடங்களின் மேலும் கட்டவே கூடாது. ஏனெனில் அவர்களும், அவைகளும் மாறக்கூடியவை.. எரேமியா தன் ஆண்டவரின் மேல், பவுல் இயேசுவின் மேல், இயேசு தன் தந்தையின் மேல் நம்பிக்கையைக் கட்டியிருந்தனர். (இ) 'இலக்குத் தெளிவு' - நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? நான் எதை நோக்கிச் செல்கின்றேன்? என்ற கேள்விகள்தாம் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றன. எரேமியா, பவுல், இயேசு மூவரும் தங்கள் இலக்கை முன்வைத்து நடந்தனர். வாழ்வில் 'எதிராளி' நிலை என்பது நம் மாற்றத்திற்கான வளர்ச்சிநிலை.

3 comments:

  1. ஆண்டின் பொதுக்காலம் 4ம் ஞாயிறுக்கான மறையுரை! வாழ்வில் வெற்றிக்கனியைத்தொட எப்படித் தன்னை ஒருவன் தொடர்ந்து ‘எதிராளியாக’ வரித்துக்கொள்ள வேண்டுமெனும் விஷயம் கருப்பின அடிமை ஜெஸ்ஸி ஓவன்ஸின் வாழ்க்கைக் குறிப்பு கொண்டு சொல்லப்படுகிறது.எதிராளி என்பவர் பகையாளி அல்ல.முன்னவரது முடிந்த நிலை; பின்னவரது தொடர் நிலை…..உண்மையே! வாழ்வில் சாதிக்க நினைத்தவர்கள்…நினைப்பவர்கள் அனைவருமே இந்த எதிராளி நிலையைக் கடந்தே வரவேண்டும்.தண்ணீரின் ஓட்டத்திற்கு எதிராகப் போராடிப் பயணம் செய்து,தங்கள் வாழ்க்கையையே ஒரு எதிராளியாக வாழ்ந்து காட்டிய எரேமியா,பவுல்
    மற்றும் இயேசு குறித்த வாழ்க்கையின் மைல்கற்கள்…
    எரேமியாவைப்பெயர் சொல்லி அழைத்த யாவே இறைவன். ‘நான் உன்னைத்திருநிலைப்படுத்தினேன்’ எனக்கூறி பொறுப்பிலிருப்பவர்களுக்குத் திருவாக்குரைக்கவும்…அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்வும் அவரைப்பணிக்கிறார்.தவறான பாதையில் நடந்தவர்களுக்கு இவர் எதிராளியாய்த்தெரிந்திடினும், “உன்னை உறுதிப்படுத்த நான் உன்னோடு இருக்கிறேன்” எனும் இறைவனின் வார்த்தைகள் இவருக்குத் துணிவைத் தருகின்றன எனக்கூறும் முதல் வாசகம்…..
    கொரிந்து நகர மக்கள் பெற்றிருந்த பல்வேறு கொடைகள் ஒருவர் மற்றவரிடமிருந்து தள்ளி நிற்கும் அளவுக்குப் பிரிவினையை ஏற்படுத்த, இதைக்கண்ட பவுல் இக்கொடைகளுக்கு மேலாக சகலரையும் அரவணைத்து…மன்னித்து…பொறுத்துக்கொண்டு…நேசிக்கும் ‘ அன்பே’ மேலானது என்கிறார். பவுலின் கருத்துக்கள் அவரை மற்ற மக்களுக்கு ஒரு எதிராளியாக க் காட்டினாலும் அவரின் துணிவிற்குக் காரணம் “ ஆண்டவரின் உடனிருப்பை அவர் அனுபவித்த விதமே” என்றுரைக்கும் இரண்டாம் வாசகம்……
    இயேசுவின் நாசரேத்துப் போதனை அந்த மக்களை வெகுண்டெழச்செய்ய இயேசுவின் பிறப்பையும் கூட இழித்துப்பேச ஆரம்பிக்கின்றனர்.அவரைப் பாராட்டிய அதே மக்கள் சீற்றம் கொண்டு ஊருக்கு வெளியே அவரைத் தள்ள முயல்கின்றனர்.தன் போதனையில் சமரசம் செய்து கொள்ளாத இயேசு அவர்களுக்கு ‘ எதிராளியாக’ மாறுகிறார் என்று கூறும் நற்செய்தி….
    எரேமியா,பவுல் மற்றும் இயேசு மூவருமே தங்களை எதிர்த்த மக்களிடமிருந்து பின்வாங்காமல்,தாங்கள் எடுத்த முடிவில் இறைவனின் துணையுடன் உறுதியாய் நின்றார்கள், என்பதே நமக்குத் துணிவு தரும் விஷயம்.நாமும் கூட நம் சமூகத்தாருக்கு எதிராளிகளாய் மாறும் நாள் வரலாம்.நமக்கு அந்நேரம் இருக்க வேண்டியவை, நான் எதை நோக்கிச்செல்கிறேன்? எனும் தெளிவும்,என் கடவுள் என்னோடு இருக்கையில் என்னால் எல்லாம் முடியும் எனும் தன்னம்பிக்கையுமே! இந்த ஒரு நிலையில் திருப்பாடலாசிரியர் போல நம்மாலும் “ என் தலைவரே! நீரே என் நம்பிக்கை! இனிவரும் நாட்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்! என்று பாடமுடியும்.
    வாழ்வில் ‘எதிராளி’ நிலை என்பது நம் மாற்றத்திற்கான வளர்ச்சி நிலை என்ற நேர்முகச் சிந்தனையை விதைத்த ஒரு மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றிகளும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete
  2. Anonymous4/26/2022

    ஆமென்!

    ReplyDelete