Thursday, January 13, 2022

அரசனைத் தாரும்

இன்றைய (14 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 8:4-7, 10-22)

அரசனைத் தாரும்

நேற்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் சமூகத்தில் அருள்பணி நிலை சந்தித்த பிறழ்வுகளைக் கண்டோம். இன்றைய வாசகத்தில், இறைவாக்குப் பணி நிலையும் பிறழ்வுகளைச் சந்திக்கிறது. 'இதோ, உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறைகளில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்!' என இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கேட்கின்றனர். மூன்று காரணங்களுக்காக அவர்கள் தங்களுக்கென அரசரை வேண்டுகிறார்கள்: ஒன்று, இறைவாக்கினர் சாமுவேலின் மகன்கள் தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்களாக இருந்தனர். இரண்டு, அண்டை நாட்டவர்கள் கொண்டிருந்த அரசர்கள் அவர்களுக்கென ஓர் அடையாளமாக இருந்தனர். கடவுள் இஸ்ரயேல் மக்களின் அரசராக இருந்தாலும், அவர் மற்ற அரசர்களைப் போல காணக் கூடிய நிலையில் அரசாளவில்லை. மூன்று, தங்களுக்கென நீதி வழங்க – அதாவது, நன்மை தீமையைக் கண்டறிந்து சொல்ல, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண. 

இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பம் சாமுவேலுக்கும் ஆண்டவராகிய கடவுளுக்கும் மனவருத்தம் தருகின்றது. அரசனின் உரிமைகள் எனச் சிலவற்றைப் பட்டியலிடுகின்றார் சாமுவேல். பிந்தைய அரசர்கள் அனுபவித்த உரிமைகளின் பின்புலத்தில் இந்த லிஸ்ட் எழுதப்பட்டிருக்கலாம். அரசன் மக்களின் பிள்ளைகள், கால்நடைகள், விளைச்சல், உடைமை ஆகிய அனைத்தின்மேலும் உரிமை கோருகிறான். பின்நாள்களில் தங்களுடைய அரசர்களின் சிலைவழிபாட்டால்தான் இஸ்ரயேல் மக்கள் அசீரியா மற்றும் பாபிலோனியாவின் அடிமைகளாக மாறுகின்றனர். மக்கள் கடவுளிடம் தங்களுடைய அரசருக்கு எதிராக முறையிட்டபோது ஆண்டவர் அவர்களுடைய குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.

முதலில் இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்க மறுத்த ஆண்டவர், தன் மனத்தை மாற்றிக்கொண்டு, 'அவர்கள்மீது ஓர் அரசனை ஆளச் செய்' என்று சாமுவேலுக்குக் கட்டளையிடுகின்றார்.

இறைவனின் தலைமையை ஏற்க மறுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் தலைமையை ஏற்ற மக்கள் கூட்டம் அவர் பேசுவதைக் கேட்க வீடு முழுவதும் நிரம்பி நிற்கின்றது. முடக்குவாதமுற்ற தங்கள் நண்பர் ஒருவரை இயேசுவிடம் அழைத்து வருகின்ற நால்வர் வீட்டின் கூரையைப் பிரித்து அவரை இயேசுவின் முன் இறக்குகின்றனர். இயேசுவும் அந்த நபருக்கு நலம் தருகின்றார். மக்களின் உள்ளத்தின்மேலும், அவர்களிடமிருந்து பாவத்தை மன்னிப்பதன் வழியாக, அரசராக ஆளுகின்றார் இயேசு.

'ஆளுதல்' என்பது மிக முக்கியமான பணி. 

வாகனத்தை இயக்குகின்ற ஓட்டுநர் அதன் நகர்தலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். ஒரு சுக்கான் கயிற்றை வைத்து மாலுமி தன் கப்பலின் திசையை மாற்றுகின்றார். நம்மை நாமே நெறியாளுகை செய்யவும், நம் இலக்கு நோக்கி நம்மை வழிநடத்தவும், நம் தெரிவுகளை வரையறை செய்யவும் நமக்கென ஓர் ஆளுகை தேவைப்படுகின்றது. 

காற்றில் அடித்துச் செல்லும் காகிதம் போல இருந்த இஸ்ரயேல் மக்கள் தங்களைப் பட்டமென வழிநடத்த அரசரை வேண்டுகின்றனர். ஆனால், அவர்களின் அரசர்கள் காகிதமாக அவர்களைக் கசக்கி வீசினர் என்பதே எதார்த்தம்.

நான் என்னை எப்படி அரசாளுகிறேன்? பாவம் என்மேல் ஆட்சி செலுத்தாமல் இருக்க, நான் இயேசுவிடம் வருகிறேனா?


2 comments:

  1. தங்களுக்காக ஒரு அரசனை வேண்டி நின்ற இஸ்ரேல் மக்களுக்கு ஒரு அரசனைத்தர, கடவுளுக்கும் சரி, சாமுவேலுக்கும் சரி விருப்பமில்லை. இறுதியில் கடவுள் மனம் மாறி ஒரு அரசனை அனுப்புகிறார்.அவர்கள் மீது ஆட்சி செய்கிறார்……கூரை வழியாக இறக்கிய முடக்குவாதக்காரனுக்கு உடல் சுகத்தை மட்டுமின்றி,அவன் பாவங்களையும் மன்னித்த இயேசுவாக…இயேசு போன்று.
    எவனொருவன் என்னுள் நுழைந்து,என் மனம் கவர்ந்து என்னை ஆட்சி செய்கிறானோ அவனே என்னை ஆள்பவன்….வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர் போல…சுக்கான கயிற்றின் உதவியால் கப்பலைத்திசை திருப்பும் மாலுமி போல….நம் இலக்குகளைத் தெரிந்து,தேர்வு செய ய நமக்கும் ஒரு ஆளுமை தேவை உண்மைதான். ஆனால் பட்டமென வழிநடத்தப்பட வேண்டிய மக்களைக் கிழிந்த காகிதமெனப் பார்ப்பவர்களும் நம் மத்தியில் வருவதுண்டு….ஆளுநர்களாக! அவர்களை இனங்கண்டு…வேரறுத்துப் புறம்பே தள்ளைவும் நாம் தயாராக இருக்க வேண்டுமெனும்சூட்சுமத்தையும்,’ இயேசு’ எனும் இறையாளுமையை மட்டுமே பற்றிப்பிடிக்கும் யுக்தியையும் எடுத்துக்கூறும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete