Monday, January 3, 2022

பார்வைகள்

இன்றைய (4 ஜனவரி 2022) நற்செய்தி

பார்வைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை வாசிக்கின்றோம். மாற்கு நற்செய்தியாளரின் இந்தப் பதிவில் இரு வாக்கியங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

(அ) 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே ... நீர் மக்களை அனுப்பி விடும்.'

(ஆ) 'அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்.'

சீடர்களின் கண்களுக்கு பாலைநிலம் தெரிகிறது. இயேசுவின் கண்களுக்கு பசும்புல் தரை தெரிகிறது.

சீடர்கள் மக்களை அனுப்பிவிடுமாறு சொல்கின்றனர். இயேசுவோ மக்களை அமருமாறு பணிக்கின்றார்.

இருவருமே ஒரே இடத்தைத்தான் பார்க்கின்றனர். இருவருமே ஒரு நிகழ்வையே அணுகுகின்றனர். ஆனால், இருவரும் வேறு வேறு கோணங்களில் பார்க்கின்றனர்.

சீடர்களின் பார்வை தங்களது 'ட்யூட்டி' ('கடமை') என்ற அடிப்படையில் இருக்கின்றது.

இயேசுவின் பார்வை தனது 'ரெஸ்பான்ஸிபிலிட்டி' ('பொறுப்புணர்வு') என்ற அடிப்படையில் இருக்கின்றது.

புதிய ஆண்டுக்குள் நாம் நுழைந்திருக்கின்றோம். புதிய வாக்குறுதிகளையும் தீர்மானங்களையும் எடுத்திருப்போம். புதிய முயற்சிகளைத் தொடங்க முயற்சி செய்துகொண்டிருப்போம். எந்த நிலையிலும், நம் பார்வை இயேசுவின் பார்வை போல இருக்கட்டும்.

வாழ்வின் பல நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்புக்குள்ளும், திட்டமிடுதலுக்கும் அடங்காதவை – திடீரென்று வந்த மக்கள் கூட்டம் பசியாகக் காத்திருந்தது போல. உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாழ்க்கை நம்மை அழைக்கிறது.

அம்மாதிரியான நேரங்களில் நாம் பரபரப்பாகி விடவோ, பதற்றம் அடையவோ, சீடர்கள் போல, 'அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்!' என்று சொல்லியோ அனுப்பிவிட வேண்டாம். 

அவர்கள் பார்த்துக்கொள்வது இருக்கட்டும். நாம் பார்த்துக்கொள்வதற்கு நிறைய அவசியம் இருக்கின்றது.

இயேசுவைப் போல நேர்முகமான பார்வை கொள்வது எப்படி?

(அ) அமைதி

நிகழ்வின் அழுத்தம் இயேசுவின் அமைதியைக் குலைக்கவே இல்லை. நிறுத்தி நிதானமாக நிகழ்வை நகர்த்துகின்றார். காரணம், அவருடைய உள்ளத்தின் ஆழ்ந்த அமைதி.

(ஆ) வாய்ப்பு

வாழ்வின் ஒவ்வொரு எதிர்மறை நிகழ்வும் பிரச்சினை அல்ல. மாறாக, நாம் செயல்படுவதற்கான வாய்ப்பு என்று காண்பது.

(இ) மற்றவர்களை முன்னிறுத்துவது

'நான் அவர்களுக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்று பார்ப்பதை விடுத்து, 'நான் அவர்களுக்கு இதைச் செய்யாவிட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும்?' என்று பார்க்கும் பார்வையில் இயேசு மக்கள் கூட்டத்தை முன்னிறுத்தி யோசிக்கின்றார், செயல்படுகின்றார்.



3 comments:

  1. இயேசுவும்,சீடர்களும் ஒரே இடத்தைத்தான் பார்க்கின்றனர்; ஒரே நிகழ்வையே அணுகுகின்றனர்.ஆனால் இருவரும் வேறு..வேறு கோணங்களில் பார்க்கின்றனர்.ஒருவருக்குக் ‘கடமை’ எனில் மற்றவருக்குப் ‘பொறுப்புணர்வு’.ஒருவரின் தேவை எதுவோ அதுவே பிரதிபலிக்கிறது அவரது பார்வையில்.புதிய ஆண்டு நம்மைப் புதுத்தீர்மானங்களுக்கும்…வாக்குறுதிகளுக்கும் இட்டுச்செல்கிறது உண்மை! ஆனால் தீர்மானங்களை எடுத்த சில பொழுதுகளிலேயே அவை பாபேல் கோபுரம் போன்று சரிவதும் உண்மையே! என்ன செய்வது? மனித பலவீனத்தை ஏற்றுக்கொண்டு, மீண்டும் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து அடுக்குவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?
    நாம் சரிந்து விழுந்த நேரங்களில் பரபரப்போ,பதட்டமோ அடையாமல் நம்மில் நேர்முக தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதே நம்மை நேர்வழிக்கு இட்டுச்செல்லும் என்று சொல்கிறது இன்றையப்பதிவு.
    உள்ளத்தின் அமைதியோடு, நம்மைத் தடுமாறச் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை செயல்பட வைக்கும் வாய்ப்பு எனவும்….நாம் எச்செயலையும் இலாப- நஷ்ட கணக்குப் பார்க்காமல் நம்முன் நிற்பவர்களின் நலன் கருதியே செயல்படவும் இந்த வருடம் இயேசுவின் ஆசீர்வாதங்களை நமக்கு அள்ளித்தரட்டும்! சிறிய விஷயங்களே வாழ்வின் சீரிய விஷயங்களை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும் எனும் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete